இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில் ரணிலால் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியுமா?

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், PMD SRILANKA

பிரசுரிக்கப்பட்டது

சுதந்திர இலங்கையில் 75 வருட காலமாக தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலக்கெடு பிப்ரவரி 4 தினமாகும்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி உறுதி வழங்கியிருந்தார்.

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதிமொழியை அன்றைய தினம் வழங்கியிருந்தார்.

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி இவ்வாறு உறுதி வழங்கிய நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவ்வாறான நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான இறுதி சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலர், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராகவே இருந்தனர்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பல கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்திருந்தனர்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த டொலோ, புளோட் உள்ளிட்ட கட்சிகள் மாநாட்டை புறக்கணித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான மஹிந்த ராஜபக்ஸவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதிலும், கட்சி சார்பில் பங்குப்பற்றியவர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமது எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், PMD SRILANKA

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில், 13வது திருத்தத்திற்கு அப்பாற் சென்று, 13 பிளஸ் அதிகாரங்களை வழங்குவதாக உறுதி வழங்கிய போதிலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நாட்டை பிளவுப்படுத்தும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறுகின்றார்.

''13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தக்கூடாது என நான் கூறினேன். இது நாட்டை பிளவுப்படுத்தும் என்பதற்காகவே இதுவரை இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதனை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் இதனை நடைமுறைப்படுத்தினால், நிச்சயமாக நாடு பிளவுப்படும். அவரும் வரலாற்றில் இணைவார். 13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளமையினால், அதனை அமல்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாக ஜனாதிபதி கூறினார். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

''இந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதிக்கு முன்னர், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியிருந்தார். எனினும், இதுவரை அவர் எதையும் செய்யவில்லை. அது குறித்து எமது கவலையை வெளியிட்டோம். எனினும், இந்த விடயங்களை தான் நிச்சயமாக செய்வேன் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்தார்.

13வது திருத்தம் அரசியலமைப்பில் இருக்கின்றமையினால், அதனை அமல்படுத்தும் பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட தனக்கு உள்ளதாக அவர் கூறுகின்றார். அதனால், அதனை தான் நிறைவேற்றுவேன் என கூறினார். காணி விடுவிப்பு தொடர்பிலும் விரிவாக தெளிவூட்டினார். இதனை ஒரு நாளில் நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என நான் கூறினேன். இதனை அமலுக்கு கொண்டு வருவதற்கு அனைத்து ஆவணங்களும் இருக்கின்றமையினால், ஒரு நாள் போதுமானது.:" என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், PMD SRILANKA

சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீது நம்பிக்கை இல்லை என புளோட், டெலோ போன்ற கட்சிகள் கூறி வருகின்றன.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்னைகளை அவதானிப்பதை போன்று, மலையக மக்களின் பிரச்னைகளையும் அவதானிக்க ஜனாதிபதி தவறியுள்ளதாக கூறி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர், மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கினார்.

அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13வது திருத்தத்தை தான் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இறுதியாக நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் உறுதியளித்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு, யாராவது 22வது திருத்தமொன்றை புதிதாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, 13வது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் என கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க, அவ்வாறன்றி தன்மீது கோபப்படுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என கூறியுள்ளார்.

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், PMD SRILANKA

''நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், PMD SRILANKA

மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை எந்த வகையிலும் அமல்படுத்தக்கூடாது என மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மகாநாயக்க தேரர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் சுயாதீனம், ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்னைகளை தோற்றுவிக்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்து, நாட்டில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், PMD SRILANKA

போலீஸ் அதிகாரங்கள், காணி, புராதன வரலாற்று சின்னங்கள், மத அமைப்புகளை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாக, நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாடு எதிர்நோக்கும் பாதகமான நிலைமைகளை கருத்திற் கொண்டு, இதுவரை காலம் ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தவிர்த்துக்கொண்டதாகவும் மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசாங்கத்தின் இறையான்மையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைடுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையானது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியினால் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளுக்கு இணங்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத்தன்மையை இல்லாது செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கூறியுள்ளனர்.

சுதந்திர தினத்தில் 13வது திருத்தம் அமலாகுமா?

அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடுவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாக மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

இலங்கை,  ரணில் விக்ரமசிங், தமிழர் பிரச்சனை

பட மூலாதாரம், SIVARAJA

''இது நாட்டின் அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளது. அதனால் அமல்படுத்த முடியும் என கூறுவாரே தவிர, புதிதாக ஒன்றும் சொல்ல மாட்டார். 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என சொல்லமாட்டார். 13 தொடர்பில் புதிய அறிவிப்புகள் வராது. இப்போதுள்ளதை அமல்படுத்துவேன் என்பார்.

ஆனால், 13 இப்போது இருக்கின்றது. போலீஸ், காணி அதிகாரங்களை கொடுப்போம் என்ற அறிவிப்பு வராது என எதிர்பார்க்கின்றேன்; போலீஸ் காணி, அதிகாரங்களை வழங்குவேன் என்றே முன்பு சொல்ல திட்டமிட்டார். எனினும், மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், அதனை அவர் சொல்ல மாட்டார்.

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அந்த அதிகாரங்கள் அமலாக்கப்படும். மகாநாயக்க தேரரை ஜனாதிபதி நேற்றைய தினம் சந்தித்தார். 13ஐ அமல்படுத்துவதன் ஊடாக எந்த பிரச்னையும் இல்லை என மகாநாயக்க தேரர்களுக்கு அவர் தெளிவூட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு, இறையான்மைக்கு நான் பொறுப்பு என கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள், 13வது திருத்தத்தை அமல்படுத்த ஆதரவு இல்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பத்தில் ஜனாதிபதி அக்ராசன உரையை நிகழ்த்துவார். அப்போது 13வது திருத்தத்தை அமல்படுத்தும் அறிவிப்பை அவர் வெளியிடலாம். அதனை கொள்கை அளவில் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்" என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: