இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு - முய்சுவின் சீன பயணத்தில் என்ன நடந்தது?

இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு - முய்சுவின் சீன பயணத்தில் என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா மாலத்தீவு இடையிலான மோதல் வலுத்து வருகிறது. இந்திய ராணுவத்தை திரும்ப பெற மார்ச் 15ம் தேதி காலக்கெடு விதித்துள்ளது மாலத்தீவு.

சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்றக் உயர் மட்டக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இந்திய ராணுவத்தை திரும்ப பெற ஒப்புக் கொண்டதாக மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்தவும், மனிதாபிமான உதவிகள் வழங்க ஏதுவாக உள்ள விமான நிலையத்தை இந்தியா பராமரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவிலிருந்து திரும்பிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்திய பெருங்கடல் அதை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது என கூறியிருந்தார்.

சீனப் பயணத்துக்கு பிறகு முய்சுவிடம் உள்ள மாற்றங்கள்

மாலத்தீவு அதிபரான முகமது முய்சு, சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, இந்தியா மீது ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளார். இந்தியா என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்தியாவை தாக்குகிறார் முகமது முய்சு.

இந்தியா மற்றும் பிரதமர் மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய ஆட்சேபகரமான கருத்துகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நீக்க சில சாதகமான முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று நம்பப்பட்டது.

மாலத்தீவின் எதிர்க்கட்சிகளும் அமைச்சர்களை இடைநீக்கம் செய்வது போதாது என்றும், இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி வந்தது.

ஆனால், சனிக்கிழமையன்று, சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாக சென்று திரும்பிய முய்சு, ​​பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ​​"நாம் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது எங்களை அச்சுறுத்தும் உரிமத்தை யாருக்கும் வழங்காது" என்று கூறினார்.

இந்தியப் பெருங்கடல் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் கடல் குறிப்பிட்ட நாட்டிற்கு சொந்தமானது அல்ல. இது அதைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது.” எனத் தெரிவித்தார்.

முய்சு மேலும் கூறுகையில், “நாங்கள் யாரோ ஒருவரின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நாடு அல்ல, நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.” எனத் தெரிவித்தார்.

இவை அனைத்தின் போதும், ​​மாலத்தீவு அதிபர் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சமீபத்திய பதற்றத்தின் மத்தியில், அவர் பேசுவது இந்தியாவுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

இந்த அறிக்கைகளைத் தவிர, முய்சு சீனாவிலிருந்து மாலத்தீவுக்குத் திரும்பியவுடன், அங்குள்ள அரசாங்கம் இந்தியாவுடன் நேரடியாக தொடர்புடைய சில முடிவுகளை எடுத்தது.

மாலத்தீவு நோயாளிகள், உயர் சுகாதார வசதிகள் மற்றும் சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் வேறு சில நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதைப் போல, அவர்கள் இனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று முய்சு தனது சீன பயணத்திற்கு பின் அறிவித்தார்.

இது தவிர, இந்தியா - மாலத்தீவு பதற்றத்தில் இருக்கக் கூடிய சமீபத்திய செய்திதான், தனது படைகளை மார்ச் 15-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு இந்தியாவை மாலத்தீவு ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டிருப்பது.

சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆவேசம் ஏன்?

முகமது முய்சுவின் இந்திய விரோத நிலைப்பாடு புதிய விஷயம் அல்ல. கடந்த ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, ​​அவரது தேர்தல் பிரசாரம் இந்திய எதிர்ப்பு என்ற புள்ளியில் கவனம் செலுத்தியது.

'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற கோஷத்தை எழுப்பிய அவர், தான் ஆட்சிக்கு வந்தவுடன், மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

ஆனால், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவுடனேயே முய்சு இந்தியா மீது காட்டியுள்ள ஆக்ரோஷத்துக்குக் காரணம் என்ன?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான எஸ்.டி.முனி இது குறித்து கூறுகையில்,“முகமது முய்சு இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால், அவரது பேச்சு இந்தியாவை நோக்கிதான் இருந்தது. அதே சமயம், முய்சுவின் இந்த கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கோட்பாட்டு ரீதியாக, எந்த நாடும் எந்த நேரத்திலும் தன்னை இறையாண்மை கொண்ட நாடு என்று சொல்லலாம். இது சாதாரணமாக பார்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பெரிய நாடுகள் நம்மைத் தாக்கும் என்று சிறிய நாடுகள் எப்போதும் பயப்படுகின்றன." எனத் தெரிவித்தார்.

மேலும், “முய்சு சீனாவில் இருந்து திரும்பி வந்துவிட்டார். நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றும் நீங்கள் உங்கள் சுதந்திரமான கொள்கையை பின்பற்றுங்கள் என்றும் மாலத்தீவுக்கு சீனா உறுதியளித்திருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனாவின் ஆதரவு உள்ளது என முய்சுவின் மனதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதை நான் வெளிப்படையாக சொல்ல முடியும்.” என அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)