ஐபிஎல் தொடரின் பரம வைரிகள் இன்று மோதல்: சென்னை vs மும்பை - பலம், பலவீனம் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் தொடரில் இரு பெரும் துருவங்களாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் மோதவுள்ள இரு அணிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன? கடந்த கால புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? இந்தப் போட்டியின் முக்கியத்துவம் என்ன

கால்பந்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் போல, சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போலவே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டமும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடங்கியது முதலே இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் என்றால் களத்தில் அனல் பறக்கும். அதேநேரத்தில், சமூக ஊடகங்களிலும் இரு அணி ரசிகர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போர் தவிர்க்க இயலாததாகி விடும். கிரிக்கெட் ரசிகர்களைப் பொருத்தவரை, ஐபிஎல் ஒரு திருவிழா என்றால் அதன் உச்சகட்டம் சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டம்தான்.

அத்தகைய எதிர்பார்ப்பு மிகுந்த ஒரு ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

தொடர்ந்து 11வது முறையாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அந்த அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்றுப்போன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ, இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக் கணக்கைத் தொடங்க முனைப்பு காட்டும் அதேவேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிநடையைத் தொடர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது. இரு அணிகளுக்குமே அவர்களுக்கே உரிய சாதகமான அம்சங்கள் இருப்பதுடன், சிற்சில பலவீனங்களும் அச்சுறுத்தவே செய்கின்றன.

இரு அணிகளையும் அச்சுறுத்தும் காயங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பந்துவீச்சாளரான ஜஸ்பிரித்சிங் பும்ரா காயம் காரணமாக நடப்புத் தொடரில் இருந்தே விலகிவிட்டார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரான மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சனும் காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகிவிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் வேகப்பந்துவீச்சாளரான கைல் ஜாமிசன் காயம் காரணமாக ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டார்.

உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பந்துவீச மாட்டார், பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசிய அவர் ரன்களை வாரி வழங்கினார்.

மகெலா வருகையால் பலம் பெறும் சிஎஸ்கே வேகப்பந்துவீச்சு

தென் ஆப்ரிக்காவுக்கும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக திகழும் வேகப்பந்துவீச்சாளர் சிசாந்தா மகேலாவின் வருகை சென்னை அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும்.

தீபக் சாஹருடன் இணைந்து அவர், சென்னை அணியை வதைக்கும் வேகப்பந்துவீச்சு பலவீனத்தைச் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னருக்குப் பதிலாக மகெலா அணியில் இடம் பெறக் கூடும்.

இளம் வீரர்களான ராஜவர்தன், ஹங்ஹர்கேர், துஷாரா தேஷ்பாண்டே ஆகியோரும் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சுக்கு வலு சேர்க்கின்றனர். மும்பை வான்கடே ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சற்று அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வேகப்பந்துவீச்சு வலுப்பெறுவது சென்னை அணிக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

மும்பை அணிக்கு கவலை தரும் பந்துவீச்சு பலவீனம்

மும்பை அணியின் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கி வழிநடத்தக் கூடியவரான ஜஸ்பிரித்சிங் பும்ராவின் வெளியேற்றம் அந்த அணியின் பந்துவீச்சுத் துறையை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளது. வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சரையே அந்த அணி மலைபோல் நம்பியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஃபாஃப் டுப்ளெஸ்ஸி - கோலி ஜோடியின் அபார ஆட்டத்தால் அடி வாங்கிய ஆர்ச்சர், இம்முறை சாதித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஏனெனில், ஆர்ச்சர் இல்லையேல் எதுவும் இல்லை என்ற அளவுக்கு மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக இருக்கிறது. காயத்தால் வெளியேறிய வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை மும்பை அணி வாங்கியுள்ளது.

இரு அணிகளுக்கும் பலமான பேட்டிங் வரிசை

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்குமே எந்தவொரு எதிரணியையும் அச்சுறுத்தும் அளவுக்கு வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. நடப்புத் தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ள ருதுராஜ் கெயிக்வாட்டின் அசத்தல் ஃபார்ம் சென்னை அணிக்கு வலு சேர்க்கிறது.

கடந்த 3 தொடர்களாகவே சென்னை அணிக்கு ரன் குவிக்கும் இயந்திரமாக அவர் திகழ்ந்து வருகிறார். டெவோன் கான்வே, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி என 11-வது வீரராக இருக்கும் தீபக் சாஹர் வரையிலும் சென்னை அணியின் பேட்டிங் வரிசை நீள்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையும் சென்னை சூப்பர் கிங்சுக்கு சற்றும் சளைத்தது அல்ல. ரோகித் சர்மா - இஷான் கிஷான் தொடக்க ஜோடியுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரரான சூர்யகுமார் மற்றும் கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட் என்று மும்பை அணியின் பேட்டிங் வரிசையும் மிரட்டலாக இருக்கிறது. இரு அணிகளுமே பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு வாண வேடிக்கைக்கு பஞ்சம் இருக்காது.

சென்னைக்கு வலு சேர்க்கும் தோனியின் கேப்டன்ஷிப்

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி, ஐ.பி.எல். உள்பட எந்தவொரு தொடராக இருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் எப்போதும் ஸ்பெஷல்தான். அதுவே, எத்தகையதொரு அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்ல தன்னால் முடியும் என்று பல முறை அவர் நிரூபித்துள்ளார். அதுவே, எந்தவொரு அணிக்கு எதிராகவும் சென்னை அணிக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் கிளப் சாம்பியன் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் அவர் வென்று கொடுத்திருக்கிறார்.

212 போட்டிகளில் சென்னைக்கு தலைமை தாங்கியுள்ள அவர், 124 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது தோல்வியில் 87 முறை சென்னை அணி தோற்றுள்ளது. கடந்த முறை தவிர, பங்கேற்ற மற்ற அனைத்து தொடர்களிலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி சென்னை அணி அசத்தியுள்ளது.

நடப்புத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள இரு போட்டிகளிலுமே கடைசிக் கட்டத்தில் களமிறங்கி, துரிதமாக அவர் ரன் சேர்த்த விதம் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. அதிலும், லக்னோ அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நடப்புத் தொடரில் நீலநிற தொப்பியை வசம் வைத்துள்ள மார்க் வுட் பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அவர் விளாசியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனால், தோனியின் பேட்டில் இருந்து ஹெலிகாப்டர் ஷாட்களை மீண்டும் அதிக அளவில் பார்க்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இம்பாக்ட் பிளேயராக யார், யார் இருக்கக் கூடும்?

இன்றைய ஆட்டம் நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தில் ஆடுகளம் சற்று ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் ஜேசன் பெஹரென்டார்ஃபை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்திக் கொள்ளும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர். போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளம் ஸ்விங்காகும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டருக்கு அவர் அச்சுறுத்தலாக மாறக் கூடும்.

சென்னை அணியைப் பொருத்தவரை, அம்பத்தி ராயுடுவுக்குப் பதிலாக துஷார் தேஷ்பாண்டே இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்படலாம். நம்பர் ஒன் வீரர் சூர்யகுமாருக்கு எதிராக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள சாண்ட்னரும் கூட சூழலைப் பொறுத்து களமிறக்கப்படலாம்.

ஐ.பி.எல். புள்ளிவிவரம் மும்பைக்கு சாதகம்

ஐ.பி.எல். தொடரில் இருபெரும் வல்லரசுகளாக பார்க்கப்படும் இந்த இரு அணிகளும் மோதிய போட்டிகளின் புள்ளிவிவரத்தைப் பார்த்தோமானால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கே சற்று சாதகமாக அமைந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 34 போட்டிகளில் மும்பை அணி 20 போட்டிகளிலும், சென்னை அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 3 தொடர்களில் மோதியுள்ள 6 போட்டிகளில், இரு அணிகளுமே ஒவ்வொரு தொடரிலும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இன்றைய போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தின் புள்ளிவிவரம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகவே இருக்கிறது. அங்கு இரு அணிகளும் மோதியுள்ள 10 போட்டிகளில் அந்த அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது.

இன்றைய ஆட்டம் வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஆடும் கடைசிப் போட்டியாக இருக்கலாம். 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி இலக்கை எட்ட, தோனி அடித்த சிக்சரின் போது பந்து விழுந்த இடத்தில் அவருக்கு சிலை வைத்து சிறப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே தோனி இன்று விஸ்வரூபம் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: