ட்விட்டர் நிறுவனத்தில் ‘குப்பை போன்று ’ துப்புரவு பணியாளர்கள் நடத்தப்பட்டார்களா?

- எழுதியவர், ஜேம்ஸ் கிளேடன் & பென் டெரிகோ
- பதவி, பிபிசி நியூஸ், சான் ஃப்ரான்சிஸ்கோ
- பிரசுரிக்கப்பட்டது
சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் துப்புரவு பணியை மேற்கொண்டவர்கள், எவ்வித இழப்பீடு தொகையும் தரப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களின் வேலைகள் ரோபோட்டுகள் மூலம் ஈடுசெய்யப்படும் என, ஈலோன் மஸ்க்கின் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஈலோன் மஸ்க் தன் முன்னாள் பணியாளர்களை “குப்பை போன்று நடத்துவதாக” கலிபோர்னியா மாகாண செனட் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஈலோன் மஸ்க் சட்டத்தை மீறியுள்ளாரா என்பது குறித்து தான் விசாரணை நடத்திவருவதாக, சான் ஃப்ரான்சிஸ்கோவை சேர்ந்த வழக்குரைஞர் டேவிட் சியூ தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து கேட்க பிபிசி தொடர்புகொண்ட போது, ட்விட்டர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
“தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக நீண்ட வரலாற்றை கொண்டவர் ஈலோன் மஸ்க்,” என டேவிட் சியூ பிபிசியிடம் தெரிவித்தார்.
“இந்த அணுகுமுறையால் நான் எவ்வித ஆச்சர்யத்தையும் அடையவில்லை. இந்த தொழிலாளர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். இதுதொடர்பாக மேலும் ஆராயப்படும்.” என அவர் தெரிவித்தார்.

ட்விட்டரில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் நான்கு பேரிடம் பிபிசி பேசியது. அவர்கள் திங்கள்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஸ்பானிய மொழியில் தங்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
ட்விட்டர் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய அட்ரியானா விளாரெல், கிறிஸ்மஸ் பண்டிகை வரவுள்ள நிலையில் தன் குடும்பத்திற்கு உணவளிக்க தன்னிடம் போதுமான பணம் இருக்காது என்பது குறித்து வருத்தத்தில் உள்ளார்.
“இது எங்களின் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் வேதனையான ஏமாற்றமளிக்கும் விஷயம்,” என்கிறார் அவர்.
தங்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன என கூறுவதற்கு முன்பு, கடந்த வாரம் வரை அவர்கள் ட்விட்டர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக போராட கடந்த திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்ததாக, துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஓல்கா மிராண்டா தெரிவித்தார். அதன்பின் உடனடியாக தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது என ஓல்கா கூறுகிறார்.
“கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு இதனை செய்துள்ளனர்,” என்கிறார் அவர். “நாங்கள் ஓர் அமைப்பாக இருப்பதால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நினைக்கிறேன்.” என்றார்.

ட்விட்டர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக இருந்தவர் ஜூலியோ அல்வராடோ. தன்னுடைய பணிக்காலத்தில் அலுவலகச்சூழல் எப்போதும் நன்றாகவே இருந்ததாக கூறுகிறார் அவர்.
ஆனால், அக்டோபர் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தை ஈலோன் மஸ்க் வாங்கியதிலிருந்து நிலைமை மாறத்தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
“எவ்வித பயமும் இல்லாமல் அங்கு தொழிலாளர்கள் பணியாற்றினர்,” என பிபிசியிடம் அவர் தெரிவித்தார். “ஆனால், இப்போது நாங்கள் பயப்படுகிறோம்” என்கிறார் அவர்.
ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அலுவலகத்தின் சில பகுதிகளை சுத்தம் செய்யும்போது, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடன் வந்ததாக ஜூலியோ அல்வராடோ கூறுகிறார்.
மேலும், தங்களுடைய பணிகள் விரைவிலேயே இல்லாமல் போய்விடும் என்றும், தங்களின் இடத்தில் ரோபோட்டுகள் அவ்வேலையை செய்யும் என்றும் ஈலோன் மஸ்க்கின் குழுவில் இருந்த ஒருவர் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
வேலையில்லாமல் கட்டணங்களை செலுத்துவது குறித்து அல்வராடோ கவலையில் உள்ளார். மெக்சிகோவில் உள்ள தன் குடும்பத்தையும் தான் கவனித்துவந்ததாக கூறுகிறார் அவர்.
“வாடகை செலுத்தக்கூட பணம் இல்லை என்பதைத்தான் என்னால் இப்போது சொல்ல முடியும்,” என அவர் தெரிவித்தார். “நான் மருத்துவக் காப்பீடு செய்யப் போவதில்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை” என்றார் அவர்.
ட்விட்டர் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றியதாக கூறுகிறார் ஜூவானா லாரா சவேரோ ராமிரெஸ். நீரிழிவு நோயாளியான அவர் தன்னால் மாத்திரைகளை வாங்க முடியுமா என்பது குறித்து கவலைகொள்கிறார்.
“இது மிகவும் கொடூரமானது,” என்கிறார் அவர். “நாங்கள் எங்களின் வேலைகளை இழக்கவில்லை, வருமானத்தை இழந்துள்ளோம்.”
ட்விட்டர் நிறுவனத்தில் 2018ம் ஆண்டிலிருந்து பணியாற்றியதாக கூறும் அட்ரியானா விளாரெல், தன்னால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான அன்பளிப்புகளை வாங்க முடியுமா என்பது குறித்த கவலையில் உள்ளார்.
“எங்களின் குழந்தைகளுக்கு நாங்கள் கிறிஸ்மஸ் அன்பளிப்புகளை வாங்க வேண்டும்,” எனக்கூறும் அவர், “ஒரே இரவில் எங்களிடம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.” என்றார்.
சான் பிரான்சிஸ்கோவில் இப்போதைக்கு துப்புரவு பணிகளில் சில காலியிடங்களே இருப்பதால் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை என்கின்றனர் அவர்கள்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் கடந்த திங்கள்கிழமை துப்புரவு பணியாளர்களின் சிறு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ட்விட்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் “மோசமாக நடத்தப்பட்டதாக”, கலிஃபோர்னியா மாகாண செனெட் உறுப்பினர் ஸ்காட் வியெனெர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“ஈலோன் மஸ்க் தங்கள் பணியாளர்களை மனிதர்களாக நடத்த வேண்டும்,” எனக்கூறும் அவர், மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் “கிறிஸ்துமஸுக்கு சில தினங்களுக்கு முன்பு வேலையைவிட்டு நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்






















