கோவையின் அடையாளமாகத் திகழும் கிரைண்டர் உற்பத்தி சந்திக்கும் சவால்கள் என்ன?

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
கோவையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் கிரைண்டர், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கிரைண்டர் தொழில் சரிவிலிருந்து மீண்டு வருவதாக தொழில்முனைவோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இத்தொழிலை மேம்படுத்த தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?
கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக கிரைண்டர் உற்பத்தி உள்ளது. கோவை மாவட்டம் முழுவதிலும் 280-க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தி தொழிற்சாலைகளில், 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கோவையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கிரைண்டர் உற்பத்தித்தொழில் நடந்து வரும் நிலையில், கோவை கிரைண்டர் புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.
ஆரம்பகாலத்தில் 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் இருந்த நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விற்பனை சரிவு என பல்வேறு காரணங்களால் தொழிற்சாலைகளில் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கொரோனா, பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி விதிப்பிற்குப் பிறகு, கிரைண்டர் தொழில் கடும் பின்னடைவை சந்தித்ததாகவும், தொழில் நலிவடைந்ததாவும் தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.
இப்படியான நிலையில், வெளிநாடுகளுக்கு உணவு தேவைக்கான கிரைண்டர் ஏற்றுமதி அதிகரித்து வருவதுடன், உள்நாட்டு விற்பனையும் அதிகரித்துள்ளதால், தொழில் மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய சில ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி வாய்ப்புகளால் தொழில் அடுத்தகட்டத்திற்கு நகர்வதாக தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏற்றுமதியில் கோவையில் 60 தொழிற்சாலைகள்
நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த கிரைண்டர் ஏற்றுமதியாளர் செல்வராஜ், "கிரைண்டர் உற்பத்தி என்றாலே கோவை தான். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் வேறெங்கும் கோவையைப் போன்ற கிரைண்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லை," என்கிறார்.
இதற்குக் காரணம், கிரைண்டருக்கான தரமான கருங்கல் ஈரோடு அடுத்த ஊத்துக்குளி மற்றும் பழநி பகுதிகளில் இருந்து கிடைப்பதாகவும், இதனால் தான் கோவையில் கிரைண்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாகின என்று விவரிக்கிறார் அவர்.
ஏற்றுமதி குறித்து பேசத்துவங்கிய செல்வராஜ், "கோவையில் தற்போது கிரைண்டர் மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் 250–300 தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 40–60 தொழிற்சாலைகளில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நான் தற்போது, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்து வருகிறோம்,” என்றார்.
"வெளிநாடுகளில் தென்னிந்திய உணவுகள் வழங்கும் பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்புக்காக கிரைண்டர்கள் வாங்குகிறார்கள். ஏற்றுமதியில் மட்டுமே மாதம் ஒரு கோடி ரூபாய் வரையில் வர்த்தகம் செய்கிறோம். சமீபத்தில் துபாயில் வெள்ளம் ஏற்பட்ட போதுகூட அங்கிருந்த அதிக ஏற்றுமதி ஆர்டர்கள் கோவைக்கு கிடைத்தன," என்று கூறுகிறார்.

‘ஏற்றுமதியில் வருமானம், சலுகைகள் அதிகம்’
இரண்டு கிலோ கொள்ளளவில் துவங்கி, 20, 40, 80 என நூறு கிலோ கொள்ளளவு வரையில், வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து கிரைண்டர்கள் தயாரித்து ஏற்றுமதி செய்வதாக கூறுகிறார் செல்வராஜ்.
"அமெரிக்கா, கனடாவிற்கு மட்டும் 110 வோல்ட் மின்சாரத்தில் இயங்கும் வகையில் பிரத்யேகமாக கிரைண்டர் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். மற்ற நாடுகளுக்கு 230 வோல்ட் திறனில் இயங்குவதைப் போல தயாரிக்கப்படுகிறது," என்கிறார்.
ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அதிக வரிச்சலுகைகள் உள்ளன, என்று கூறுகிறார் செல்வராஜ்.
"ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதிக ஏற்றுமதி செய்தால் 2% வரை, இந்திய அரசு ஊக்கத்தொகை (Incentive) வழங்குகிறது, இந்த ஊக்கத்தொகையே ஒரு கணிசமான வருமானத்தை தருகிறது,” என்கிறார்.
"உள்ளூரில் விற்பனை செய்வதை விட ஏற்றுமதியில், 30%-க்கு மேல் லாபமும் கிடைக்கிறது. கிரைண்டர் தொழிலில் கடந்த 5 ஆண்டுகளாகத்தான் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு கிரைண்டர் ஏற்றுமதிக்கு சிறப்புக்கவனம் செலுத்தி, சலுகைகள் வழங்கினால் பலரும் ஏற்றுமதியில் ஈடுபட வாய்ப்புள்ளது," என்கிறார் அவர்.

‘கடும் சரிவில் இருந்து மீண்டு வருகிறோம்’
கோவையின் மொத்த கிரைண்டர் தொழிற்சாலைகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறார், கோவை வெட் கிரைண்டர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சவுந்திரகுமார்.
நம்மிடம் பேசிய அவர், "கோவை கிரைண்டர் உற்பத்தி பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம் மற்றும் கொரோனா காலங்களில் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. அதிமுக அரசு இலவச கிரைண்டர்கள் வழங்கிய பின்பு, நாங்கள் பின்னடைவை சந்தித்தோம். தற்போது தான் ஓரளவுக்கு மீண்டு வருகிறோம்,” என்கிறார்.
"வீடுகளில் தற்போது பெரும்பாலான பெண்கள் மாவு அரைப்பதை விரும்புவதில்லை, பாக்கெட் மாவு வாங்கிக்கொள்கின்றனர். மக்களின் உணவுப்பழக்கம் மாறியுள்ளதால் வீட்டுத்தேவைகளுக்கான கிரைண்டர்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது," என கவலை தெரிவிக்கிறார்.
ஹோட்டல், மாவு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் சாக்லேட் தயாரிப்புக்குத் தேவையான வணிக ரீதியிலான கிரைண்டர்கள், சிக்கன் தோலுறிக்கும் கிரைண்டர்கள் மட்டுமே தயாரித்து வருவதாக அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "முன்பு கிரைண்டர் தயாரிப்புக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. நாங்கள் மத்திய அரசிடம் கடுமையாக போராடி அதை 18 சதவீதமாக மாற்றியுள்ளோம். 18 சதவீதம் ஜி.எஸ்.டி விதிப்பால், வீடுகளுக்குத் தேவையான வெட் கிரைண்டர் வாங்குவதற்கே மக்கள் தயங்குகிறார்கள். ஐந்தாயிரம் ஏழாயிரம் கொடுத்து கிரைண்டர் வாங்க வேண்டுமா? என நினைத்து கடையில் மாவு வாங்கிக் கொள்கிறார்கள்," என்றார்.

நான்கில் ஒரு பங்கு தான் ஏற்றுமதி செய்கிறார்கள்
அரசு சில உதவிகளைச் செய்தால் ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார் சவுந்திரகுமார்.
இதுகுறித்து பேசிய அவர், "கோவையின் மொத்த கிரைண்டர் தயாரிப்பு தொழிற்சாலைகளில், நான்கில் ஒரு பங்கு தான் ஏற்றுமதியில் ஈடுபடுகிறார்கள். உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கான உபகரணங்களுடன் சேர்த்து, கிரைண்டரையும் ஏற்றுமதி செய்கிறார்கள். ஏற்றுமதி அதிகரித்து வருவது கிரைண்டர் தொழில் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்கு உதவும். அதேசமயம் உள்ளூர் உற்பத்தியில் தான் பெரும்பாலானோர் ஈடுபடுகிறார்கள்," என்று கூறுகிறார்.
கிரைண்டர் தொழிலுக்கான ஜி.எஸ்.டி வரியை 5–12 சதவீதமாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் சவுந்திரகுமார்.
"தமிழ்நாடு அரசு கிரைண்டர் ஏற்றுமதி குறித்த பயிற்சிகள், ஏற்றுமதிக்கான சிறப்பு சலுகை திட்டம், சர்வதேச அளவில் சந்தையிடுதல் உதவி மற்றும் கடன் உதவி கொடுத்து கிரைண்டர் தொழிலுக்கு தனிக்கவனம் செலுத்தினால் பலரும் ஏற்றுமதியாளர்களாக மாறுவார்கள். அதேபோல், உள்நாட்டு விற்பனையும் கணிசமான அதிகரித்து தொழில் மேம்படும்," என்கிறார் அவர்.

'தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்'
ஏற்றுமதி நடைமுறைகள் குறித்து பெரும்பாலான தொழில்முனைவோருக்கு தெரியாது என்கிறார், கோவை கிரைண்டர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பாலச்சந்திரன்.
"ஏற்றுமதி எப்படிச் செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் பெற வேண்டும், வங்கி செயல்பாடு என்ன? என ஏற்றுமதி குறித்தான அடிப்படை அறிவு கூட பெரும்பாலான தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இல்லை. இதை சரி செய்ய முதலில் ஏற்றுமதி குறித்து, கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தொடர் பயிற்சி கொடுக்க வேண்டும்,” என்கிறார்.
"தென்னை நார் பொருட்கள், கைவினைப் பொருட்கள் துவங்கி எத்தனையோ பொருட்களை வெளிநாட்டு கண்காட்சிகளில் இடம் பெறச்செய்ய தமிழ்நாடு அரசு உதவுகிறது. ஆனால், புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவை கிரைண்டருக்கு தமிழ்நாடு அரசு எதையும் செய்வது இல்லை," என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பாலச்சந்திரன்.
மேலும் தொடர்ந்த பாலச்சந்திரன், "சர்வதேசக் கண்காட்சிகளுக்கு செல்ல எங்களிடம் பணமோ வசதியோ இல்லை. கண்காட்சிகளுக்கு எங்களை தமிழ்நாடு அரசு அழைத்துச்சென்றால் பல வகையான கிரைண்டர்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களை காட்சிப்படுத்தி வெளிநாட்டு வாய்ப்புகளை பெறுவோம், ஏற்றுமதியில் ஈடுபடுவோம்," என்கிறார்.

'தொழில்முனைவோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'
கிரைண்டர் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
நம்மிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், "மாவட்டத் தொழில் மையங்களில் உள்ள அலுவலர்கள் ஏற்றுமதி குறித்து முழு பயிற்சி பெற்றுள்ளனர். கிரைண்டர் உற்பத்தியாளர்கள் மாவட்டத் தொழில் மையத்தை அணுகி பயிற்சி பெறலாம்,” என்றார்.
"சிறு, குறு தொழில்துறையினருக்கு இந்த மாதம் சிறப்புக்கூட்டம் நடத்த உள்ளோம். கிரைண்டர் உற்பத்தியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் தெரிவித்தால், பரிசீலனை செய்யப்பட்டு பட்ஜெட்டில் அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படும். கிரைண்டர் ஏற்றுமதிக்கான சிறப்பு பயிற்சி, சலுகைகள், சந்தை வாய்ப்புகளை உருவாக்க நிச்சயம் தமிழ்நாடு அரசு உதவிகளைச் செய்யும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



























