You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாணி ஜெயராம் மரணம் பற்றி சவுண்ட் இன்ஜினியர்: "என்னை 'அம்மா' என அழைக்கும் குரல் இனி கேட்காது"
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம்(78) தனது இறுதி நாட்களை தனிமையில் கழித்திருக்கிறார். அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பணியாட்கள் பலரும் அவரை பார்த்துப் பல நாட்கள் ஆனதாக கூறுகிறார்கள்.
அவருக்குத் தாம் வெளியுலக கண்ணாடியாக இருந்ததாகச் சொல்கிறார் அவரது தீவிர ரசிகரும் நலம்விரும்பியுமான கோபி.
1990களில் இருந்து வாணி ஜெயராமின் பாடல்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் பதிவு செய்த பொறியாளர்தான் கோபி. தன்னை வாணி ஜெயராம் 'அம்மா' என்று கூப்பிடுவார் என்றும் கூறுகிறார் கோபி.
இனி அவரது சொற்களில்:
கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். கடந்த வாரம் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தார். அவரின் திறமைக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைத்தபின்னர் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை.
என் ஸ்டுடியோவில் பல நூறு பாடல்களுக்குப் பதிவு செய்யவந்திருக்கிறார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொடுத்த அறிமுகத்தில்தான் வாணி அம்மா என் ஸ்டூடியோவுக்கு பாடல் பதிவுக்காக வரத் தொடங்கினார்கள்.
தொடக்க காலங்களில் எப்படிப் பாடினாரோ, அதே நேர்த்தி, அதே அர்ப்பணிப்புடன்தான் கடைசியாக நான் பதிவு செய்த படலையும் அவர் பாடினார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு பாடலை அவருக்காகப் பதிவு செய்தேன். வேதாரண்யத்தில் உள்ள ஒரு பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான பாடல் அது.
ஏதாவது ஒரு வரியில் வார்த்தை பிசகிப் பாடினால், பாடல் முழுவதையும் திரும்பப் பாடி பதிவு செய்யவேண்டும் என்பதை கடைப்பிடிப்பார். ஒரு பாடலை முழுவதுமாக பாடி பதிவு செய்தால்தான் அது திருத்தமான பதிவாக இருக்கும் என்று நம்புபவர். 'அனலாக்' முறையில் பாடல் பதிவுகள் செய்த காலத்தில், அப்படிதான் பாடமுடியும். தற்போதுள்ள டிஜிட்டல் பதிவு முறையில், எத்தனை முறை வேண்டுமானாலும், ஒரு பாடலில் இடைநிறுத்தி தனியாக ஒரு பகுதியைப் பாடி அந்த பாடலில் இணைக்கமுடியும். ஆனால், அவர் அதை ஒருபோதும் விரும்பியதில்லை.
தனது பாடல் மிகவும் நேர்த்தியாக இருக்கவேண்டும், கேட்பவர்களுக்கு அது முழுமையான பாடலாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர். அவர் முதன்முதலில் இந்தி மொழியில்தான் பாடினார். அதன் பின்னர் பல இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார். பிற மொழி பாடல்களைப் பாடும்போது, உச்சரிப்பு மிகவும் சரியாக இருக்கவேண்டும் என பலமுறை பயிற்சி எடுப்பார். பலமுறை உச்சரிப்பு சரியா என்று மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்வது அவரது பழக்கம்.
அவரிடம் பாடல் பாடித் தரவேண்டும் என்று யாராவது வந்தால், என்னிடம் தெரிவிப்பார். பதிவு செய்ய தயார் செய்யச் சொல்வார். பதிவு முடிந்ததும், பலமுறை என்னிடம் சரியாக இருக்கிறதா என உறுதி செய்துவிட்டு, நானாக `கிளம்புங்கள், எல்லாம் திருத்தமாக இருக்கிறது` என்று சொல்லும்வரை வெளியேற மாட்டார்.
நான் நேர்த்தியாகப் பதிவு செய்து கொடுத்துக்கொண்டிருந்ததால், அவரது பாடல்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டதால், அவர் ஒரு கட்டத்தில் என்னை 'அம்மா' என்று அழைக்க தொடங்கினார். அது எனக்கு முதலில் புதிதாக இருந்தாலும், பின்னர் அதுவே எனக்குப் பழகிவிட்டது. அவரது நட்பு, உறவினர் என்ற வட்டம் மிகவும் சிறியது. வெளியுலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை என்னிடம் கேட்டு தெரிந்துகொள்வார். கொரோனா காலத்தில் எஸ்பிபி அய்யா இறந்தது அவருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவ்வப்போது, பழைய பாடகர்களின் வாழக்கையைப் பற்றி என்னிடம் கேட்டுத்தெரிந்துகொள்வார்.
அவரின் கணவர் ஜெயராம் ஓர் ஆண்டுக்கு முன்னர் காலமானார். அதன்பின்னர், அவர் மிகவும் தனிமையிலிருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால், உறவுகள் என்று அவரை சந்திக்க அதிகமாக யாரும் வந்ததில்லை. அவரது தங்கை ஒருவர் இருக்கிறார். சமீபகாலங்களில் அவர் தனிமையாகத்தான் இருந்தார். பணிப்பெண் ஒருவர் தினமும் இரண்டு மணிநேரம் வந்து வீட்டுவேலைகளை செய்துவிட்டு போவார் என்பதால் , வீட்டில் உதவிக்கு யாரையாவது வைத்துக்கொள்ளுங்கள் என பலமுறை அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவருக்கு அதில் விருப்பம் இல்லை. தனது வாழ்க்கையில் இசையை மட்டும் அவர் துணையாகக் கொண்டிருந்தார். ஆனால் அவரது இறுதி நேரங்களில் எவ்வாறு தவித்திருப்பார் என்று எண்ணிப்பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது.
யாருமின்றி இறந்துபோன கொடுமை
அவருக்கு தலையில் காயம் இருப்பதால், சந்தேக மரணமாகக் கருதி, காவல் துறையின் சோதனை நடைபெறுகிறது.
19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பல ஆயிரம் நபர்களுக்குத் தனது பாடல்களால் நிம்மதியைக் கொடுத்தவர், யாருமின்றி இறந்துபோனது என்னைச் சோகத்தில் ஆழ்த்துகிறது.
அவர் பாடல்களைப் பற்றிப் பேசும்போது, ''நான் பாடும் பாடல்கள் பொருள் நிறைந்த பாடல்களாக இருக்கவேண்டும். ஒரு பாடலால் வரும் பெயர், புகழைத் தாண்டி, அந்த பாடலின் இசை என்னை ஈர்க்கவேண்டும்,'' என்று சொல்லுவார். பல தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் திரைப்படப் பாடல் நிகழ்ச்சிகளின் மூலமாக இசைத்துறை மீதான மரியாதை குறைந்துவருவதாக அவர் வருத்தப்பட்டார்.
அவர் பாடிய பாடல்களுக்கான ராயல்டி பணம் வந்துகொண்டிருந்தது என்பதால் நிதிநிலைமையில் அவருக்கு சிக்கல் எதுவும் இல்லை. உடல் நலம் குன்றியதற்கு தனிமை ஒரு காரணம் என்றுதான் நான் நினைக்கிறேன். அவரை வந்து நலம் விசாரிக்கும் நபர்கள் மிகவும் குறைவாகதான் இருந்தார்கள். தனிமை ஒருவரை மிகவும் பலமிழக்க செய்கிறது.
கடைசியாக நான் பேசியபோது, அவருக்குக் காய்ச்சல் இருந்தது. சரியாகிவிடும் என்றார். ஒவ்வொரு புதுவருடப் பிறப்புக்கும் அவரிடம் ஆசிவாங்குவேன். இந்த ஆண்டு ஆசி பெற்றபோது, 'உடல்நலத்தில் கவனம் செலுத்துமா' என்று சொன்னார். நானும் அவரிடம் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் மா என்றேன். அடுத்த ஆண்டில் அவரிடம் ஆசி பெறமுடியாது, என்னை 'அம்மா' என்று அழைக்கும் குரல் இனி கேட்காது...
என்று உருக்கத்தோடு கூறினார் கோபி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்