கனடாவில் கைதான 3 இந்தியர்களின் பின்னணி என்ன? இந்தியா என்ன சொல்கிறது?
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த வழக்கில், கனடாவின் எட்மண்டன் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களான 22 வயது கரண் ப்ரார், 22 வயது கமல்ப்ரீத் சிங் மற்றும் 28 வயது கரன்ப்ரீத் சிங் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமையன்று (மே 4) கனடாவின் டொரோண்டோ நகரில் இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்பதால் இது முக்கியமானது. எங்களிடம் வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. எங்கள் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்றார்.
“ஆர்.சி.எம்.பி (கனடா நாட்டின் காவல்துறை) கூறியது போல், விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இந்த மூன்று பேரை கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை," என்றார்.
நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் ட்ரூடோ கூறினார்.
"கனடாவில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.
இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை (மே 4) பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு கனடா விசா வழங்க்குவதாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்துப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவின் பஞ்சாபில் திட்டமிடப்பட்டக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள்," என்று கூறினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெய்சங்கர், தான் இந்தச் செய்தியைப் பார்த்ததாகச் சொன்னார். "போலீஸ் விசாரணையில் யாரையாவது கைது செய்திருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில், திட்டமிட்ட குற்றங்களில் தொடர்புடைய பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனடா விசா வழங்குகிறது," என்றார்.
“இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு விசா கொடுக்கிறீர்கள். பலர் பொய்யான ஆவணங்களுடன் வருகிறார்கள். ஆனாலும் நீங்கள் அவர்களை தங்க அனுமதிக்கிறீர்கள். அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை இருக்க விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்னைகள் இருக்கும். சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிந்திக்க வேண்டும்," என்றார்.
கனடாவுடன் இந்தியாவுக்கு பிரச்னை இருப்பதை வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ஜெய்சங்கர் கூறுகையில், “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கனடாவுடன் பிரச்னை உள்ளது," என்றார்.
"கனடாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன," என்றார் ஜெய்சங்கர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதற்குத் தன்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அப்போதிருந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருக்கின்றன.
அப்போது கனடாவின் குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது' என்று இந்தியா விவரித்திருந்தது.

பட மூலாதாரம், RCMP HANDOUT
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



