தோனியின் மந்திர வியூகத்தால் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் மண்டியிட்ட மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
ஐ.பி.எல். தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில் மும்பையை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி மண்டியிடச் செய்துள்ளது. சென்னைக்கு சுழற்பந்துவீச்சு மீண்டும் ஒருமுறை கைகொடுக்க, ரஹானேவிடம் இருந்து வெளிப்பட்ட மின்னல் வேக பேட்டிங் சென்னையின் வெற்றியை எளிதாக்கியது. பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் பந்துவீச்சில் பலவீனமாக காட்சி தந்த மும்பை அணி தோனி வியூகத்திற்கு முன்பு முற்றிலுமாக சரணடைந்துவிட்டது.
ஐ.பி.எல்.லின் இந்தியா - பாகிஸ்தான் போட்டியாக வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதும் ஆட்டம் என்றாலே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நேற்றைய ஆட்டத்தின் தொடக்கமும் அப்படியே அமைந்தது. மும்பை அணி அதிரடி தொடக்கம் கண்டாலும், பின்னர் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், பேட்டிங்கில் ரஹானே ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி போட்டியை சென்னையின் பக்கமாக திருப்பினர்.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி எளிதானது எப்படி? மும்பையின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்? 'தல' தோனியின் வியூகம் சென்னையின் வெற்றிக்கு எவ்வாறு கைகொடுக்கிறது?
சென்னை சுழற்பந்துவீச்சாளர்கள் மீண்டும் மாயாஜாலம்
டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த சென்னை அணியின் முடிவு தவறாகுமோ என்கிற அளவுக்கு மும்பை அணிக்கு ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. தசைப் பிடிப்பு காரணமாக முதல் ஓவருடன் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் வெளியேறியதும் பவர் பிளே ஓவர்களைக் கடக்க சென்னை அணி திணறிப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். சென்னைக்கு அறிமுக போட்டியில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் மகலாவுக்கு இஷான் கிஷான் பவுண்டரிகளால் வரவேற்பு கொடுத்தார்.
6-7 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளத்தில் பந்து சற்று சுழன்று திரும்பியதால், சுழற்பந்து எடுபடத் தொடங்கியது. இதனை ரவீந்திர ஜடேஜாவும், மிட்செல் சாண்ட்னரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இருவரும் மிடில் ஓவர்களில் மும்பை அணியின் ரன் வேகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியதோடு முக்கிய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து சாய்த்தனர்.
சென்னையை அச்சுறுத்திக் கொண்டிருந்த தொடக்க வீரர் இஷான் கிஷன், அதிரடி ஆட்டக்காரரான கேமரூன் கிரீன், மும்பைக்கு முதல் போட்டியில் கைகொடுத்த இளம் நட்சத்திரம் திலக் வர்மா ஆகியோர் ஜடேஜா சுழலில் வீழ்ந்தனர். மிட்செல் சாண்ட்னரும் தன் பங்கிற்கு நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார், இளம் வீரர் அர்ஷத்கான் ஆகியோரை வெளியேற்றினார். ஜடேஜா, சாண்ட்னர் ஆகிய இருவரும் வீசிய 8 ஓவர்களில் 48 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை அணி முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பைக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த சூர்யகுமார், கேமரூன்
ஐ.பி.எல்.லில் கோலியாத் போல பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த மும்பை அணி கீரன் பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள் வெளியேற்றத்திற்குப் பின்னர் மற்ற அணிகள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் பார்மை இழந்து தவிப்பது மும்பை அணியின் மிடில் ஆர்டரை வெகுவாக பாதித்துள்ளது.
மிடில் ஆர்டரில் அணியை தூக்கி நிறுத்துவார் என்று அந்த அணி பெரிதும் எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீனும் தொடர்ந்து 2-வது போட்டியாக ஏமாற்றம் தந்துள்ளார். ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஆகிய இருவரும் அதிரடி தொடக்கத்தால் அமைத்துத் தந்த சரியான அடித்தளத்தை பலவீனமான மிடில் ஆர்டர் காரணமாக மும்பை அணியால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
சென்னை அசத்தல் பீல்டிங் - ஜடேஜா, ருதுராஜ் அபார கேட்ச்
நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் பீல்டிங் அபாரமாக இருந்தது. குறிப்பாக, கேமரூன் கிரீன் அசுர வேகத்தில் அடித்த பந்தை ரவீந்திர ஜடேஜா கேட்ச் செய்த விதம் மெய் சிலிர்க்கச் செய்வதாக அமைந்தது. ஜடேஜா வீசிய அந்த பந்தை, அப்படியே நேராக பலம் கொண்ட மட்டும் கேமரூன் கிரீன் அடிக்க, பந்து மின்னல் வேகத்தில் ஜடேஜாவை நோக்கி பறந்து சென்றது. இதனால் சற்று திகைத்துப் போன ஜடேஜா, பின்னர் சுதாரித்துக் கொண்டு ஒற்றைக் கையால் அபாரமாக கேட்ச் செய்து, கேமரூன் கிரீனை வெளியேற்றினார்.
இதேபோல், மகலா வீசிய 16-வது ஓவரின் கடைசிப் பந்தில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் பந்துவீச்சாளரின் தலைக்கு மேலே, நேராக சிக்சரை நோக்கி அடித்த பந்தை பிரிட்டோரியசும், ருதுராஜ் கெயிக்வாட்டும் சேர்ந்து கேட்ச் செய்த விதம் சென்னை அணியில் இருந்த சிறப்பான ஒருங்கிணைப்பை பறைசாற்றியது. மிக உயரத்தில் இருந்து கீழிறங்கிய பந்தை ஓடிச் சென்று துள்ளி கேட்ச் செய்த பிரிட்டோரியஸ், நிற்க முடியாமல் நிலை தடுமாற, எல்லைக்கோட்டைத் தொடும் முன்பு பந்தை உள்ளே வீசிவிட்டார். அதனை, ருதுராஜ் எளிதாக கேட்ச் செய்து ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை வெளியேற்றினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ரஹானேவிடம் இருந்து வெளிப்பட்ட 'பிளிட்ஸ்கிரீக்' தாக்குதல்
ஐ.பி.எல். ஏலத்தின் போது மற்ற அணிகளால் நிராகரிக்கப்பட்டு, இரண்டாவது சுற்றில் அடிப்படை விலையில் சென்னை அணியால் வாங்கப்பட்ட அஜிங்யா ரஹானே யாரும் எதிர்பார்த்திராத ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்தினார். டெஸ்ட் வீரராக வர்ணிக்கப்படும் ரஹானே, சென்னை அணிக்காக களம் கண்ட முதல் போட்டியிலேயே தன் மீதான கணிப்புகளை பொய்யாக்கி, விஸ்வரூபம் எடுத்தார்.
டெவோன் கான்வே டக் அவுட்டானதும் களம் புகுந்த ரஹானே தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். குறிப்பாக, இளம் வீரர் அர்ஷாத்தின் பந்துவீச்சில் 6, 4, 4, 4, 4, 1 என்றவாறு ஒரே ஓவரில் 23 ரன்களைக் குவித்து ரசிகர்களை மலைக்கச் செய்தார். நடப்புத் தொடரில் சாதனையாக, பவர் பிளே முடியும் முன்பே வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அவர் அசத்தினார்.
களத்தில் சூறாவளியாக சுழன்ற ரஹானே 27 பந்துகளில் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்களைக் குவித்து கிட்டத்தட்ட சென்னையின் வெற்றியை உறுதி செய்த பின்னரே அவுட்டாகி வெளியேறினார். ரஹானே மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்தாலும் அது கெயில், ரஸ்ஸல் போன்ற அதிரடி சூரர்களைப் போன்ற அடிதடி ஆட்டமாக இருக்கவில்லை.
கிரிக்கெட் நுட்பங்களில் தேர்ந்த அவர், பந்தின் வேகத்தைப் பயன்படுத்தியும், பீல்டிங் இடைவெளிக்கு இடையே சரியான இடங்களைத் தேர்வு செய்தும் நேர்த்தியான கிளாசிக் ஷாட்களை விளையாடிய விதம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
இளம் வீரர் ருதுராஜின் முதிர்ச்சியான ஆட்டம்
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்து நேற்று ஒரு முதிர்ச்சியான ஆட்டம் வெளிப்பட்டது. களத்தில் அனுபவ வீரரான ரஹானே சூறாவளியாக சுழன்றடிக்க, அணியின் ரன் ரேட் எகிறியதால் மறுபுறம் ருதுராஜ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நல்ல பார்மில் இருந்தாலும் கொஞ்சமும் அவசரப்படாமல் களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டியபடி இருந்தார். ரஹானே அவுட்டாகும் போது, சென்னை அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் கிட்டத்தட்ட 6-ஆக இருந்ததால் அந்த நேரத்தில் அதிரடி தேவைப்படவில்லை. இதனை உணர்ந்து, பொறுமையாக கடைசி வரை களத்தில் இருந்து சென்னை அணி எந்தவொரு இழுபறியும் இல்லாமல் எளிதில் வெற்றி பெறுவதை ருதுராஜ் உறுதிப்படுத்தினார்.
அதிக ரன் குவித்த வீரருக்கான போட்டியில் 3 போட்டிகளில் 189 ரன்னுடன் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கும் ருதுராஜ், ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
பும்ரா, ஆர்ச்சர் இல்லாததால் மும்பை பந்துவீச்சு பலவீனம்
சரியான அணி சேர்க்கை இல்லாமல் திணறி வரும் மும்பை அணி, பும்ரா இல்லாத நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சரும் களமிறங்க முடியாமல் போய்விட்டதால் நேற்றைய ஆட்டத்தில் வெகுவாக திணறித்தான் போய்விட்டது. நடப்புத் தொடர் முழுவதும் பும்ரா விளையாட முடியாமல் போய்விட்ட நிலையில், வலது முழங்கையில் லேசாக வலியை உணர்ந்த ஆர்ச்சரை பயன்படுத்தி ரிஸ்க் எடுக்க மும்பை அணி விரும்பவில்லை. ஏனெனில், நடப்புத் தொடரில் ஆர்ச்சரை தான் பந்துவீச்சில் துருப்புச் சீட்டாக பயன்படுத்த மும்பை அணி திட்டமிட்டுள்ளது.
பும்ரா, ஆர்ச்சர் இல்லாத மும்பை அணியின் பந்துவீச்சால், சூப்பர் பார்மில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அத்துடன், யாரும் எதிர்பார்த்திராத வகையில் ரஹானேவிடம் இருந்து வெளிப்பட்ட அதிரடி மும்பை பந்துவீச்சை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
சென்னைக்கு மீண்டும் கைகொடுத்த 'தல' தோனியின் வியூகம்
41 வயதை எட்டிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வழக்கம் போல் சிறப்பான கேப்டன்சி மூலம் எதிரணியை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்தார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், இடது கை அதிரடி சூரர்களான கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் ஆகியோரை கருத்தில் கொண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜாவை பயன்படுத்தத் தயங்கிய தோனி, நேற்றைய ஆட்டத்தில் ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பத் தொடங்கியதுமே, பவர் பிளே முடிந்த அடுத்த ஓவரை ஜடேஜாவுக்குக் கொடுத்தார்.
அவரது கணிப்பும் வீண் போகவில்லை. களத்தில் நன்றாக செட்டில் ஆகி, சென்னை அணியை அச்சுறுத்திக் கொண்டிருந்த இஷான் கிஷனை ஜடேஜா காலி செய்தார். மறுபுறம் மிட்செல் சாண்ட்னரும் சுழற்பந்தில் தாக்குதல் தொடுக்க மும்பை அணி நிலைகுலைந்து போய்விட்டது. கேமரூன் கிரீன், சூர்யகுமார், திலக் வர்மா என மும்பை அணி நம்பிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன்கள் ஜடேஜா - சாண்ட்னர் சுழலில் வீழ்ந்து போயினர்.
சுழலில் அசத்திய இடது கை பந்துவீச்சாளர்களான ஜடேஜா - சாண்ட்னரை சமாளிக்க மும்பை அணி அர்ஷத்தை, டிம் டேவிட்டிற்கு முன்னதாகவே களமிறக்கினாலும் பலனில்லாமல் போய்விட்டது. நல்ல நம்பிக்கையுடன் இருந்த சாண்ட்னர் அர்ஷத்தையும் வெளியேற்றி அசத்தினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
இதே வியூகத்தை மும்பை அணி கடைபிடிக்க எத்தனித்த போது, தோனி தனது வியூகத்தால் அதனை உடைத்தார். இடது கை சுழற்பந்துவீச்சாளளரான இளம் வீரர் குமார் கார்த்திகேயாவை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்து சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க ரோகித் சர்மா முயன்றார். ஆனால், தோனியோ, ரஹானே ஆட்டமிழந்ததும், சுழற்பந்துவீச்சை விளாசக் கூடிய இடதுகை ஆட்டக்காரரான ஷிவம் துபேவை களமிறக்கி தனது மதிநுட்பத்தை வெளிப்படுத்தினார். சுழற்பந்து வீச்சை சமாளித்து சிறப்பாக விளையாடிய துபேவை ஒரு கட்டத்தில் கார்த்திகேயா வீழ்த்திய போதிலும் கூட, அந்த வேளையில் ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டிருந்தது.
'ஆல் ஏரியா தோனி ஏரியாதான்' - மும்பையில் சென்னைக்காக ரசிகர்கள் ஆரவாரம்
நேற்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்றாலும், ரசிகர்களின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே பெருவாரியாக இருந்தது. அதற்கு பிரதான காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனிதான். ரசிகர்களிடம் இருந்து 'தல' தோனி என்ற ஆரவாரம் எழும்பிக் கொண்டே இருந்தது.
பெவிலியனில் தோனி அமர்ந்திருந்ததை தொலைக்காட்சியில் காட்டிய போதிலும் கூட ரசிகர்கள் அவரது பெயரை முழங்கி ஆரவாரம் செய்தனர். இந்திய அணிக்கு இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பைகள் உள்பட பல ஐ.சி.சி. கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமாக கேப்டனான தோனியைப் பொருத்தவரை, இந்தியாவில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அது அவரது சொந்த மைதானம் போன்றே காட்சி அளிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து தற்போது அதன் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் கீரன் பொல்லார்ட் இதனை ஆமோதிக்கிறார். "இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்குப் பிறகான ஜாம்பவான் தோனிதான். சச்சின் விளையாடிய போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தியாவில் செல்லும் இடமெல்லாம் எப்படி வரவேற்பு கிடைத்ததோ அப்படிப்பட்ட வரவேற்பை இப்போது தோனிக்கு பார்க்க முடிகிறது" என்கிறார் பொல்லார்ட்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























