You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நகைக்கடன்: கடுமையான விதிகள் தளர்த்தப்படுமா? நிதித்துறை புதிய அறிவுறுத்தல் - இன்றைய முக்கிய செய்தி
மே 31, சனிக்கிழமை அன்று தமிழ்நாடு செய்தித் தாள்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட தங்க நகை கடனுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, சிறுகடன் பெறுவோர் பயன்பெறும் வகையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தியுள்ளது என்று இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், வங்கிகளில் தங்க நகை கடன் பெறும் விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் புதிய வரைவு கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, கடன் - மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.100 மதிப்புள்ள தங்கநகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் சுமார் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும்.
புதிய விதிமுறைகளின்படி கடன் வாங்குபவர்கள் அடமானம் வைக்கப்படும் நகைக்கு, தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். நகையின் உரிமை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் கடன் வழங்கப்படாது. அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறுபவர்கள் இந்த நகை தங்களுக்கு எப்படி உரிமையானது என்பதை விளக்கும் வகையில் ஒரு அறிக்கை தர வேண்டும்.
கடன் வழங்குபவர்கள், தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை, எடை மற்றும் மதிப்பு குறித்த சான்றிதழை வழங்க வேண்டும். அடமானம் வைக்கப்படும் நகையின் படத்தையும் இணைக்க வேண்டும். தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகைக் கடனுக்கு பிணையமாக தகுதியுடையவை.
ஒரு கடனாளி அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிணையமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கம், 22 காரட் தங்கத்தின் விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும். இவ்வாறு பல விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின்கீழ், ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், 'ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விரைவான மற்றும் எளிதான கடன் அணுகலை உறுதி செய்ய வேண்டும். அதற்காக இந்த கடுமையான விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும், கடன் வழங்குநர்கள் புதிய விதிமுறைகளுக்கு மாற ஏதுவாக, இந்த புதிய விதிகளை 2026 ஜனவரி 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி தற்போது பொதுமக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து வந்துள்ள கருத்துகளை மதிப்பாய்வு செய்து வருகிறது. புதிய விதிகளை செயல்படுத்துவது குறித்த தனது இறுதி முடிவை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை உணவுப் பட்டியலில் அசைவ உணவுகள் நீக்கம்: சென்னை வந்தே பாரத் பயணிகள் புகார்
சென்னையில் இருந்து நாகர்கோவில், மைசூர், பெங்களூரு மற்றும் திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில்களில், காலை உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போது, 'பாப்-அப்' ஆகும் தகவலில், "அசைவ உணவுகள் மதிய மற்றும் இரவு உணவு நேரத்தின் போது மட்டுமே வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களின் தனி விபரம் மற்றும் விரும்பும் உணவைத் தேர்வு செய்த பிறகே இப்படியான குறுஞ்செய்தி திரையில் தோன்றுகிறது," என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இது நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ரயிலில் பயணித்த பயணிகள் வேறொரு யதார்த்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட டேவிட் மனோஹர், "டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போது நாங்கள் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தோம். நாங்கள் ரயிலில் சென்ற போது எங்களுக்கு சைவ உணவே வழங்கப்பட்டது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில், ஐ.ஆர்.சி.டி.சியிடம் முறையிட்ட போது, மாலை நேர தேநீர் நேரத்தில் அசைவ உணவு வழங்க இயலவில்லை என்று பதில் கிடைத்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த பதில் நீக்கப்பட்டது.
"எனக்கு சைவ உணவு வேண்டுமா அல்லது அசைவ உணவு வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் உரிமை எனக்கு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி, பயணிகளிடம் இது குறித்து முறையாக தெரிவிக்காமல் அந்த உரிமையை மறுக்க இயலாது," என்று கூறினார்.
"ரயில்களின் அறிமுகத்தின் போது, கருத்துக்கேட்கும் படிவங்களை அவர்கள் வழங்கினார்கள். இப்போது, நாங்கள் புகார் அளித்தாலும் கூட பதில் ஏதும் இல்லை," என்று சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் என்.முரளிதரன் என்ற பயணி குறிப்பிடுகிறார்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்தே பாரத் ரயிலில் செல்லும் மற்றொரு பயணியான ஏ.எல்.செல்வம், அந்த ரயிலில் வழங்கப்படும் உணவுகள் பெரும்பான்மையாக வட இந்தியர்களின் உணவுகளாக உள்ளன என்று கூறுகிறார். "இந்த சுவை நமக்கு சரியானதாக இல்லை. பல பயணிகளும் உணவை கையாலும் தொடுவதில்லை." என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு