You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடைபாதையில் வசிக்கும் குழந்தைகளுக்கு இலவச டியூஷன் - 80 வயது மூதாட்டி சேவை
பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழ், மஸ்தி கி பாட்ஷாலா என்ற தனித்துவமான டியூஷன் செண்டர் ஒன்று இயங்கி வருகிறது. 80 வயதான ராஜ்பால் கௌர் இந்த டியூசன் சென்டரை நடத்தி வருகிறார், அதுவும் கட்டணம் எதுவும் வசூலிக்காமல். தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை லீலா பவனுக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு அவர் கல்வி கற்பிக்கிறார்.
கடந்த 1997-ல் நடைபாதையில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க தொடங்கினார் கௌர். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு.
அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது நல்ல வேலையில் இருப்பதாக அவர் கூறுகிறார். இதில் இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. ராணுவ பின்புலம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்பால், பள்ளிக்கே சென்றது இல்லை.
ஆரம்பத்தில் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை வகுப்புகளுக்கு அழைத்து வந்ததாக ராஜ்பால் கௌர் கூறுகிறார். கல்வி கற்பிப்பதோடு, குழந்தைகளுக்கு உணவு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவற்றையும் அவர் வழங்கி வருகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு