You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தர்மேந்திர பிரதான் முன்னேற்றம், வீழ்ச்சி இரண்டிலும் முக்கிய இடம் பிடித்த வினாத்தாள் கசிவு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தற்போது ராஜிநாமா செய்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும், ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், 1997ஆம் ஆண்டு மறைந்த ஜே.பி. பட்நாயக் அரசின் கீழ் ஒடிசாவில் நடந்த வினாத்தாள் கசிவுக்கு எதிராக, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் மாநில தலைமைச் செயலகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தை தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கியிருந்தார். இதில் காவல்துறையின் தடியடியால் காயமும் அடைந்தார்.
2021ல் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் வெளியான இதுபற்றிய ஒரு செய்தி, தற்போது ஊடகங்களில் மீண்டும் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சராக உயர்ந்தது எப்படி?
தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணம் 80களின் காலகட்டத்தில் மாணவராக இருந்தபோதே தொடங்கிவிட்டது.
சிறு வயது முதலே அவர் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் இணைந்து செயல்பட்டார். மேலும் தால்செர் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் ஏபிவிபி சார்பாக உத்கல் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டார்.
கடந்த 1994ஆம் ஆண்டில் ஏபிவிபியின் தேசிய பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1997 வரை பதவியில் நீடித்தார்.
2004 முதல் 2006 வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராக இருந்தார். பின் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
2000-ல் பிஜேடி-பாஜக கூட்டணியின் வேட்பாளராகப் பாலலஹடா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 பொதுத் தேர்தலில் அப்போதைய தேவ்கர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இதன் பிறகு நீண்ட காலத்திற்கு அவர் நேரடித் தேர்தல்களில் போட்டியிடவில்லை.
இருப்பினும், கட்சியில் அவருக்கிருந்த முக்கியத்துவத்தின் காரணமாக அவர் இரண்டு முறை மற்ற மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றார்.
2014ல் ஆண்டில் இவருக்கு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2 021 ல் கல்வி அமைச்சரானார். இந்நிலையில், முழுமையாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2024இல் அவர் மீண்டும் ஒடிசாவில் தேர்தலில் போட்டியிட்டு, சம்பல்பூரிலிருந்து மக்களவை எம்பியானார். 2021 முதல் மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த நிலையில் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணம் எப்படி இருந்தது? முழு விவரம் இந்தக் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு