சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியால் கதறி அழும் சிறுவன் - இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்

பிரசுரிக்கப்பட்டது

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த ஐபிஎல் தொடருடன், இணையத்தில் நம் கவனத்தை ஈர்க்கும் மீம்ஸ்களும் பறக்கத் தொடங்கிவிட்டன.

நடந்து முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் ஆட்டம் குறித்த எண்ணற்ற மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்று பெயரெடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 2022ஆம் ஆண்டு தவிர, பங்கேற்ற மற்ற அனைத்துத் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்ந்தது.

அதேநேரத்தில், கடந்த ஆண்டு அறிமுக அணியாக களம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அதுவரை வெற்றிகரமான அணியாக வலம் வந்த சென்னையை, தான் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வென்று காட்டியது குஜராத் டைட்டன்ஸ்.

சென்னைக்கு எதிராக அதே வீறுநடையை நடப்புத் தொடரிலும் குஜராத் அணி தொடர்கிறது. கிட்டத்தட்ட ஆட்டம் முழுவதுமே எந்த இடத்திலும் சென்னை அணிக்கு வாய்ப்பே தராமல் முற்று முழுதாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது அந்த அணி. இதைக் குறிக்கும் வகையில், இணையத்தில் பகிரப்படும் இந்த மீம்ஸ் ரசிகர்களைக் கவர்கின்றன.

சென்னை அணிக்கு எதிராக சவாலான இலக்கைத் துரத்திய குஜராத் அணிக்கு சுப்மன் கில் சிறப்பான தொடக்கம் தந்ததை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர்.

அவரது அதிரடி சரவெடியைத் தடுக்க முடியாமல் சென்னை வீரர்கள் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருப்பது போன்ற இந்த மீம்ஸ் வைரலாக பரவுகிறது.

சென்னை அணியின் பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதைக் குறிப்பிடும் மீம்ஸ் ஒன்று, அதைக் காணும் நெட்டிசன்களுக்கு சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது. ஆனால், சென்னை ரசிகர்களுக்கோ அது வேதனை தருவதாகவே இருக்கும்.

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆட்டமிழந்ததும் சென்னை அணி பந்துவீச்சாளர் கொண்டாடியதையும் நெட்டிசன்கள் கேலி செய்துள்ளனர்.

ரஷித் கானும், ராகுல் தெவாதியாவும் அவுட் ஆஃப் சிலபஸ் என்று குறிப்பிட்டு, கொண்டாடும் சென்னை பந்துவீச்சாளர்களைப் பார்த்து ரஷித் கான் புன்முறுவல் பூத்தது போன்ற வீடியோவை மீமாக சிலர் பகிர்ந்துளளனர்.

நடப்புத் தொடரில் அறிமுகமாகியுள்ள 'இம்பாக்ட்' பிளேயர் விதியை இரு அணிகளும் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன? அவ்வாறு களத்தில் இறங்கிய வீரர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இதை விவரிக்கும் வகையில் பரவும் மீம்சும் ரசிக்க வைக்கின்றன.

சென்னை அணியின் பந்துவீச்சை குஜராத் அணி அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும்போது, தோனியின் சிந்தனை என்னவாக இருந்திருக்கும் என்று கூறும் மீம் கவனம் ஈர்க்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை அறுவடை செய்தவரும், ஏற்கெனவே ஓய்வை அறிவித்துவிட்டவருமான பிராவோவை இம்பாக்ட் பிளேயராக உள்ளே கொண்டு வரலாமா என்று அந்த நடுவரிடம் கேப்டன் தோனி கேட்பதுபோல் அந்த மீம் இருக்கிறது.

மகாபாரதக் கதை நிகழ்வுடன் நேற்றைய ஆட்டத்தை ஒப்பிட்டு பகிரப்பட்ட மீம்ஸ் ஒன்று நெட்டிசன்களிடையே பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.

குருவான துரோணரிடம் கற்ற வித்தையைக் கொண்டே அவரை வீழ்த்தும் அர்ஜூனனைப் போல, தோனி தலைமையிலான சென்னை அணியை குஜராத் அணிக்குத் தலைமையேற்று ஹர்திக் பாண்டியா வீழ்த்தியிருப்பதாக அந்த மீம்ஸ் கூறுகிறது.

சென்னை அணியின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழும் சிறுவன் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாக வலம் வருகிறது.

ஆட்டத்தை டி.வி.யில் நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் துடிப்பதும், அவனுக்கு பெற்றோர் சமாதானம் சொல்வதுமாக இருக்கும் அந்தக் காட்சி நிச்சயம் சென்னை அணி ரசிகர்களை வருந்தச் செய்திருக்கும்.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ், அந்த உத்வேகத்தை அப்படியே தொடரும் வேளையில், சென்னை அணியின் செயல்பாடு மெச்சும்படியானதாக இல்லை.

ருதுராஜ் கெய்க்வாட், அறிமுக வீரர் ஹங்கர்ஹர் ஆகிய இளைஞர்களைத் தவிர மற்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

41 வயதை எட்டிவிட்ட தோனி களம் காணும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்க வாய்ப்பிருப்பதால், சாம்பியன் வீரரான அவருக்கு ஒரு சாம்பியனாகவே விடை கொடுக்க அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த அணி ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: