'6 போர்களை முடித்து வைத்தேன்' என்ற டிரம்பின் கூற்று உண்மையா?

காணொளிக் குறிப்பு, டிரம்புக்கு நோபல் பரிசு வேண்டும் - வெள்ளை மாளிகை
'6 போர்களை முடித்து வைத்தேன்' என்ற டிரம்பின் கூற்று உண்மையா?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கும் வேளையில், தனது இரண்டாவது பதவிக் காலம் தொடங்கியதிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தான் செய்த சாதனைகளை கூறி வருகிறார்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஏற்கனவே 'ஆறு போர்களை முடித்து வைத்துள்ளேன்' என ஆகஸ்ட் 18 அன்று வெள்ளை மாளிகையில் பேசும்போது டிரம்ப் குறிப்பிட்டார். மறுநாள், அந்த எண்ணிக்கை "ஏழு போர்கள்" ஆக உயர்ந்தது.

ஆனால் உண்மையில் டிரம்ப் எத்தனை போர்களை முடித்து வைத்தார்? அந்த போர்கள் உண்மையில் முடிந்துவிட்டதா?

இஸ்ரேல் - இரான்

2025 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல், இரானைத் தாக்கியது. இந்த மோதல் 12 நாட்கள் நீடித்தது. அமெரிக்கா உதவியுடன் போர் விரைவில் நிறுத்தப்பட்டது என டிரம்ப் கூறுகிறார்.

போர் முடிவடைந்த பிறகு, இரான் ஒரு "தீர்க்கமான வெற்றியை" பெற்றதாகக் கூறிய இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, போர் நிறுத்தம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

மறுபுறம், புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரானை மீண்டும் தாக்கலாம் என்று இஸ்ரேல் கூறியது.

"இது அதிகாரப்பூர்வ போர் நிறுத்தம் அல்ல. ஆனால், அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் இரானை பலவீனப்படுத்தியது உத்தி சார்ந்து முக்கியமானது என்பதால், டிரம்ப் ஓரளவு பெருமைப்படலாம்" என ப்ரூக்கிங்ஸ் நிறுவன (Brookings Institution) சிந்தனைக் குழுவின் மூத்த உறுப்பினரான மைக்கேல் ஓ'ஹான்லான் (Michael E. O'Hanlon) கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான்

இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாகப் பதற்றம் நிலவுகிறது.

எனினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கடந்த மே மாதம் மோதல் வெடித்தது.

நான்கு நாட்கள் மோதலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் "முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு" ஒப்புக் கொண்டதாக கூறிய டிரம்ப், இது "அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளின்" விளைவு என்றார்.

டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான், அவரது "தீர்க்கமான ராஜ்ஜிய தலையீட்டை" குறிப்பிட்டு அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்தது.

ஆனால், அமெரிக்காவின் ஈடுபாடு குறித்த பேச்சை இந்தியா மறுத்தது. "ராணுவ மோதலை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கிடையே ஏற்கனவே உள்ள வழிகள் மூலம் நேரடியாக நடத்தப்பட்டன" என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

ருவாண்டா - காங்கோ ஜனநாயக குடியரசு

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் கனிம வளம் நிறைந்த ஒரு பகுதியை M23 கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. இதன் பின்னர், ருவாண்டாவுக்கும் கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த விரோதம் மீண்டும் வெடித்தது.

பல தசாப்தங்களாக இருந்த மோதலுக்கு முடிவு காண்பதை நோக்கமாகக் கொண்டு, ஜூன் மாதத்தில், இரு நாடுகளும் வாஷிங்டனில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், சமீபத்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு தரப்பும் போர்நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், M23 கிளர்ச்சியாளர்கள், அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தினர்.

தாய்லாந்து - கம்போடியா

2025ஆம் ஆண்டு ஜூலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த சண்டையை நிறுத்தாவிட்டால், இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்க உடனான தனி பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தினார்.

அதன் பிறகு, ஆகஸ்ட் 7 அன்று, தாய்லாந்தும் கம்போடியாவும் தங்களுக்கு பொதுவான எல்லையில் பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டின. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மலேசியா நடத்தியது.

ஆர்மீனியா - அஜர்பைஜான்

ஆகஸ்ட் 8 அன்று வெள்ளை மாளிகையில் அறிவிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் தலைவர்கள் கூறினர்.

மார்ச் மாதத்தில், நாகோர்னோ-கராபாக் பிரச்னையை மையமாகக் கொண்டு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு அரசாங்கங்களும் தயாராக இருப்பதாகக் கூறின.

மிக சமீபத்திய, தீவிரமான மோதல் செப்டம்பர் 2023 இல் ஏற்பட்டது, அப்போது அஜர்பைஜான் பல ஆர்மீனியர்கள் வாழ்ந்த பகுதியைக் கைப்பற்றியது.

எகிப்து – எத்தியோப்பியா

டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வர இங்கு எந்த மோதலும் இல்லை. மாறாக, நைல் நதியின் மீது ஒரு அணை கட்டுவது தொடர்பாக நீண்ட காலமாகப் பதற்றம் நிலவி வருகின்றன.

எத்தியோப்பியாவின் 'கிராண்ட் எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணை' இந்த ஆண்டு கோடைக்காலத்தில் கட்டப்பட்டது. இதனால், நைல் நதியிலிருந்து எகிப்துக்கு கிடைக்கும் நீர் வரத்து பாதிக்கப்படலாம் என்று எகிப்து கூறியது.

12 ஆண்டுகள் நீடிக்கும் இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன் என டிரம்ப் கூறினார். ஆனால், இது வரை எந்த முறையான ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

செர்பியா - கொசோவோ

ஜூன் 27 அன்று, டிரம்ப் செர்பியா மற்றும் கொசோவோ இடையே மோதல் வெடிக்காமல் தடுத்ததாகக் கூறினார்.

1990களின் பால்கன் போர்களின் பின்னணியில், இந்த இரண்டு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டன. அந்த அடிப்படையில், சமீபத்திய ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்தது.

ஆனால், "செர்பியாவும் கொசோவோவும் ஒருவருக்கொருவர் சண்டையிடவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ இல்லை" என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றிய மார்கரெட் மேக்மில்லன் (Margaret MacMillan) கூறினார்.

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் மேற்கொண்ட ராஜ்ஜிய முயற்சிகளை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியது. 2020 ஆம் ஆண்டு, இரு நாடுகளும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால், அந்த நேரத்தில் அவை போரில் ஈடுபடவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு