அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி - இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெறாதது குறித்து விவாதம்

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வீழ்த்தியது. 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 50 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், எந்தவொரு வடிவத்திலும் இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களைக் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
வெள்ளிக்கிழமை பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி மீது கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்; இருப்பினும், அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை.
டாஸுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், துரதிருஷ்டவசமாக வைபவ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்று கூறினார்.
"அவர் ஒரு சிறந்த வீரர் தான்; ஆனால் எங்கள் அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்ட பல வீரர்கள் உள்ளனர், எனவே நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். சரியான நேரம் வரும்போது அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்," என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பே, சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஷிதான்ஷு கோடக் சுட்டிக்காட்டியிருந்தார்.
மறுபுறம், போட்டிக்கு முன்னதாக பிபிசி-யுடனான உரையாடலில், அயர்லாந்து வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் பாணியைப் பாராட்டியுள்ளனர்.
'என்னால் நம்ப முடியவில்லை…'
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வான், சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
"இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியைத் தேர்ந்தெடுக்காததை என்னால் நம்ப முடியவில்லை. அவர் தற்போது உலகின் மிகச்சிறந்த டி20 வீரர்களில் ஒருவர்," என்று வான் சமூக ஊடகத் தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சூர்யவன்ஷியை விளையாட வைக்க வேண்டாம் என்ற இந்திய அணி நிர்வாகத்தின் முடிவைப் பாராட்டினார்.
மஞ்ச்ரேக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: "நல்ல ஃபார்மில் இருக்கும் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் ஆகியோரின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு சரியானது. 'வெளிப்புறக் கருத்துகள்' என்பவை வெறும் சத்தமாக மட்டுமே இருக்க வேண்டும்; அதேவேளையில், முடிவுகள் அனைத்தும்உடை மாற்றும் அறையிலேயே அமைதியான சூழலில், தகுதியின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷிக்கான "தனி உடை மாற்றும் அறை" குறித்தும் சில விவாதங்கள் நடைபெற்றன. அவரது இளம் வயது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக, அணியின் மற்ற வீரர்களிடமிருந்து தனித்து, வேறொரு அறையில்தான் அவர் உடை மாற்ற வேண்டியிருந்தது.
இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி அயர்லாந்தில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி இன்று நடைபெற்றது, இரண்டாவது போட்டி ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதன் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்லும்; அங்கு ஐந்து டி20 போட்டிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேட்டிங் பயிற்சியாளர் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Matt Roberts-ICC/ICC via Getty Images
முதல் டி20 போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வைபவ் சூர்யவன்ஷியின் பங்கேற்பு தொடர்பான கேள்விகளுக்கு இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் ஷிதான்ஷு கோடக் பதிலளித்தார்.
"அவருக்கு வாய்ப்பளிப்பதற்காக மட்டும், அணிக்காக ரன்கள் குவித்துக்கொண்டிருக்கும் ஒரு வீரரை நீக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது சரியாக இருக்காது," என்று அவர் கூறினார்.
"ஒருவருக்கு வாய்ப்பளிப்பதற்கும் மற்றொரு வீரருக்கு அநீதி இழைப்பதற்கும் இடையே மிக மெல்லிய கோடுதான் உள்ளது," என்று சிதான்ஷு கோடக் கூறினார்.
இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பதை அணி நிர்வாகமே முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இவை அனைத்தையும் தாண்டி, பேட்டிங் பயிற்சியாளரும் சூர்யவன்ஷியைப் பாராட்டியுள்ளார்.
"அவர் ஒரு அபாரமான திறமைசாலி; ஆனால் அணியை கேப்டனும் தலைமைப் பயிற்சியாளருமே தேர்வு செய்வார்கள். அவர் விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏனெனில் அவர் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார்; எதிர்காலத்தில் அவருக்கு நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி எப்போது தனது அறிமுகப் போட்டியில் விளையாடினாலும், அவர் 'எதிர்பார்ப்புகளின் அழுத்தத்துக்கு' உள்ளாகமாட்டார் என்று சிதான்ஷு கோடக் நம்புகிறார்.
"அவர் பதற்றமடைவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் வசதியாகவும் அணியின் ஒரு பகுதியாகவும் உணரும் வகையில் அனைவரும் செயல்படும் வகையிலான ஒரு கலாசாரம் எங்கள் அணியில் உள்ளது," என்று அவர் கூறினார்."
வைபவ் குறித்து அயர்லாந்து வீரர்கள் என்ன கூறினார்கள்?

பட மூலாதாரம், Viraj Kothalawala/Sportsfile via Getty Imag
இந்தியாவுடனான போட்டிக்கு முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் அயர்லாந்து வீரர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் முதல் விக்கெட்டை வீழ்த்தும் பந்துவீச்சாளராக அமைவது 'மிகவும் சிறப்பானதாக' இருக்கும் என்று பிபிசி ஸ்போர்ட் (வடக்கு அயர்லாந்து) செய்தியாளர் டேவிட் மோகன், அயர்லாந்து பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸிடம் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களில் மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய ஒருவராக சூர்யவன்ஷி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பல முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அவர் சிக்ஸர்களை விளாசியுள்ளார். எனவே, அவரது ஆட்டத்தை நன்கு ஆராய்ந்து, அவருக்கு எதிராகச் சரியான திட்டத்தை வகுப்பதே முக்கியம்."
இதற்கிடையில், வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரராகத் திகழ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது என்று அயர்லாந்து பந்துவீச்சாளர் ராஸ் அடேர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "அவருக்கு எதைப் பற்றியும் பயம் இல்லை. தனக்கு எதிராகப் பந்துவீசுவது யார் என்பது பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சவால் செய்யவே அவர் விரும்புகிறார்; அதற்கான முழு சுதந்திரத்தையும் இந்தியா அவருக்கு வழங்கியுள்ளது," என்று குறிப்பிட்டார்.
சச்சினின் சாதனை முறியடிக்கப்படுமா?

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images
வெள்ளிக்கிழமையன்று வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை; ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் அவர் அறிமுகமானால், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
தற்போது இந்தச் சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது; அவர் 1989-ல் தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 'ஆரஞ்சு தொப்பி'யை வென்றது, வைபவ் இந்திய அணியில் இணைவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் அவரைப் பாராட்டினர்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இந்திய டி20 அணி மற்றும் 'இந்தியா ஏ' அணியில் அவர் சேர்க்கப்பட்டபோது, அவரது அறிமுகம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் வைபவின் அறிமுகம் குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன.
வெறும் 13 வயதிலேயே கிரிக்கெட் உலகில் தனது முத்திரையைப் பதித்த அவர், பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
சமீபத்தில், இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 'இந்தியா ஏ' அணிக்காக விளையாடிய வைபவ், 'லிஸ்ட் ஏ' 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதத்தை அடித்தார். வெறும் 11 பந்துகளில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
அந்தப் போட்டியில், வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வைபவ் வெளிப்படுத்தினார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























