You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
T20 மகளிர் WC: தோனி பாணியில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்; கானல் நீரான இந்தியாவின் உலக கோப்பை கனவு
மகளிர் டி20 உலக கோப்பை கனவு இந்திய அணிக்கு இந்த முறையும் நனவாகவில்லை.
விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்திய அணி. 2019 உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கலாம். அதே பாணியில் ஹர்மன் ப்ரீத் கவுர் ரன் அவுட்டானது ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக புரட்டிப் போட்டது.
'பலம்' வாய்ந்த ஆஸ்திரேலியா
அரையிறுதிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 21 டி20 ஆட்டங்களில் ஒன்றை தவிர்த்து அனைத்திலுமே வெற்றி கண்டிருக்கிறது. அந்த ஒரு ஆட்டம் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதுவும் சூப்பர் ஓவரில்தான்.
கடைசியாக நடந்த 2020 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா. அந்த கசப்பான சம்பவத்திற்கு மாற்று மருந்தை தேட இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விவரித்தனர்.
5 முறை டி20 உலக கோப்பையை வென்றது மட்டுமின்றி, 2018ல் இருந்து இதுவரை ஆஸ்திரேலியா 63 டி20-ல் 54 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி ஒரு பலம் வாய்ந்த அணியாக வலம் ஆஸ்திரேலியாவை அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டு வருகிறது இந்திய அணி.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா.
ராதா யாதவ் வீசிய 8வது ஓவரில் ஹீலே 25 ரன்களில் விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 52 ரன்களில் முடிவுக்கு வந்தது.
பின்னர் வந்த கேப்டன் லேன்னிங் மூனேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் இந்திய அணி பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். மூனே 54 ரன்களில் விடைபெற, அடுத்து வந்த கார்டனர் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து விடைபெற்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லேன்னிங் 49 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவின் 'சொதப்பல்' பவுலிங்
இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 103 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் இந்தியா 61 ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக டெத் ஓவர்களில் இந்தியா கடுமையாக சொதப்பியது.
கடைசி ஓவரை வீசிய ரேனுகா, முதல் பந்தில் யார்கர் போட முயற்சிக்க, அது ஃபுல்டாசாக மாறியது. லேனிங் எந்தவித பொறுமையும் காட்டாமல் சிக்சருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தும் ஃபுல்டாசாக மாறா, அதையும் சிக்சருக்கு தட்டிவிட லேனிங் தயங்கவில்லை. அந்த ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியா 18 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ரேனுகா 4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.
இதேபோல ஃபீல்டிங்கில் இந்தியா கணிசமான ரன்களை இழந்தது. லேன்னிங் 1 ரன் எடுத்திருந்தபோது அவர் வழங்கிய கேட்சையும் இந்தியா நழுவவிட்டது. இதேபோல மூனே 36 ரன்கள் எடுத்திருந்தபோதும் கேட்ச் வாய்ப்பை நழுவிப்போனது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங்கால் இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் ரன்களை சேர்க்க உதவினர்.
தோனி பாணியில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்
173 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது.
ஷஃபாலி வர்மா 9, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனா 2, யாஷ்டிகா பாடியா 4 என ஒற்றை இலக்க ரன்களில் டாப் ஆர்டர்கள் சரிந்தன. இந்தியா 28 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது.
ஜெமிமா ரோட் ரிகஸ் - கேப்டன் ஹர்மன் ப்ரீத் ஜோடி ஆஸ்திரேலியாவை துணிச்சலுடன் எதிர்கொண்டனர். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 93 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோட்ரிகசும் ஹர்மன் ப்ரீத் கவுரும் பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஆட்டம் இப்படியே நகர்ந்தால் இந்தியா வென்றுவிடும். இதில் யாரேனும் ஒருவர் கடைசி வரை நின்று ஆட வேண்டும் என வர்ணனையாளர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே 43 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெமிமா ஆட்டமிழந்தார்.
32 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்மன் ப்ரீத், 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். 2019 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கும்.
அதே பாணியில் 2 ரன்கள் ஓட முயற்சித்தபோது ஹர்மன் ப்ரீத்தின் பேட் கிரவுண்டில் இடித்து நூலிழையில் ரன் அவுட்டானார்.
ஹர்மன் ப்ரீத் மட்டுமின்றி இதனை யாருமே துளியும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் இந்தியாவின் ஆட்டம் தலைகீழாக மாறியது. அதிருப்தியடைந்த
ஹர்மன் ப்ரீத், தனது பேட்டை கீழே வீசி, களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.
போராடி தோற்ற இந்திய அணி
ஹர்மன் ப்ரீத்தை வெளியேற்றிய பிறகு ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கியது. ரிச்சா கோஷ் 14 ரன்களில் விடைபெற, அவரைத் தொடர்ந்த வந்த வீராங்கனைகளாலும் அதிரடி காட்ட முடியவில்லை.
தனி ஆளாக போராடிய தீப்தி சர்மா 20 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 167 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 7 முறையாக மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது ஆஸ்திரேலிய அணி.