ரஷ்யா vs யுக்ரேன்: மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ - கதிர்வீச்சு வெளியானதா?
யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா (Zaporizhzhia) அணுமின் நிலையத்தில் தீ ஏற்பட்டது தொடர்பாக யுக்ரேனும் ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன
யுக்ரேனின் தெற்கு பகுதியில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையம், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையம் ஆகும்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேனுக்குள் முழுவதுமான ஒரு படையெடுப்பை தொடங்கிய பிறகு அணு மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் இருக்கும் ஜபோரிஷியா பகுதி ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த அணு மின் நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய படைகள் அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.
ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஜபோரிஷியாவின் ஆளுநர், யுக்ரேன் நடத்திய ஷெல் தாக்குதலே தீ பற்றுவதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
யுக்ரேனிய படைகள் ரஷ்யாவிற்குள் 30 கிலோ மீட்டர் தூரம் வரை முன்னேறியுள்ளதாக கூறப்படும் நிலையில், அணு மின் நிலையத்தில் தீப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு யுக்ரேன் ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து யுக்ரேன் ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்து இவ்வளவு தூரம் சென்று தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை. எனவே யுக்ரேன் ரஷ்யா போரில் இது ஒரு முக்கிய முன்னகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
ஞாயிறன்று ஜபோரிஷியாவில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் யெவ்கேனி பாலிட்ச்ஸ்கி (Yevgeny Balitsky), அணு மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களில் தீப்பற்றியதாக தெரிவித்தார்.
யுக்ரேனின் ஷெல் தாக்குதல்தான் இதற்கு காரணம் என்று கூறிய அவர், கதிர்வீச்சு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அணு கசிவு ஆபத்து ஏதும் இல்லை என்றே தெரிவித்துள்ளார். இருப்பினும் யுக்ரேனை அச்சுறுத்தவே ரஷ்யா வேண்டுமென்றே இந்த தீ சம்பவத்தை ஏற்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்
ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரியான வோலோடிமிர் ரோகோவ் (Vladimir Rogov), தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக டெலிகிராமில் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐ.நாவின் அணு மின் நிலைய கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதில்வில், தாங்கள் அடர்த்தியான கரும்புகையை கண்டதாகவும், பல்வேறு வெடிப்பு சத்தங்களை கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அணு மின் நிலையத்தின் ஒரு குளிரூட்டும் கோபுரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாக தெரியவந்திருப்பதாகவும் அணு பாதுகாப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அது கூறியுள்ளது.
குளிரூட்டும் கோபுரத்தில் ஏற்பட்ட சேதத்தை உடனடியாக ஆய்வு செய்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாக ரஷ்யாவின் மேற்கில் உள்ள குர்ஸ்க் பகுதிக்குள் புகுந்து யுக்ரேன் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இது குறித்து சனிக்கிழமையன்று அவர் வெளியிட்ட வீடியோவில், "ரஷ்யாவின் மேற்கிலுள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதலை நடத்தி வருகிறது” என்று தெரிவித்தார்
இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான படையினர் ஈடுபட்டுள்ளதாக மூத்த யுக்ரேனிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். இது ரஷ்யா எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்த எண்ணிக்கையை காட்டிலும் மிக அதிகம்.
யுக்ரேன் செவ்வாயன்று ரஷ்ய எல்லைக்குள் தனது தாக்குதலைத் தொடங்கியது. ரஷ்யாவிற்குள் 30கி.மீ., தூரத்துக்கு முன்னேறியுள்ளது. பிப்ரவரி 2022-இல் ரஷ்யா யுக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை தொடங்கிய பிறகு ரஷ்யாவுக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்துவிட்டனர்.
உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
குர்ஸ்க் பகுதியிலிருந்து மாஸ்கோவிற்கு தப்பிச் செல்ல விரும்புவோருக்கு சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,
வார இறுதி நாட்களிலும் இந்த தாக்குதல் தொடர்ந்ததாக தெரிகிறது. குர்ஸ்க் ஆளுநர் அலெக்செய் ஸ்மிர்னோவ் (Aleksei Smirnov) ஞாயிறன்று காலை இது யுக்ரேன் நடத்திய துரோக தாக்குதல் என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த தாக்குதல் எரிச்சல் ஊட்டக்கூடிய ஒன்று என தெரிவித்தார்.
அணு மின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு யுக்ரேனின் மின் உற்பத்தி அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பிறகு இந்த உலகம் கதிர்வீச்சின் ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பியதாக யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் கதிர்வீச்சு எவ்வாறு பிற நாடுகளுக்கு பரவக்கூடும் என்பதை ரஷ்ய அதிகாரிகள் விளக்குவதற்கான வரைப்படம் ஒன்றையும் தயார் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



