இஸ்ரேல் - பாலத்தீனம் இடையிலான பிரச்னை எப்போது, எப்படி தொடங்கியது?
இஸ்ரேல் பாலத்தீனம் இடையிலான இன்றைய போர் பல தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கியது. பிரிட்டன் ஆளுகையின் கீழ் இப்பகுதி வந்தது முதல் யூதர்களுக்கும் அரபிகளுக்கும் இடையிலான சண்டை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பகுதியில் சிறுபான்மையினராக இருந்த யூதர்களின் எண்ணிக்கை ஹிட்லரின் இனப்படுகொலை உள்ளிட்ட காரணங்களால் அதிகரித்தது. பாலத்தீனத்தில் யூதர்களுக்கும் அரபிகளுக்கும் இடையே வன்முறை பெரிதானது.
கடந்த 1947ஆம் ஆண்டில் பிரிட்டன் பாலத்தீனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலத்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடாக, அரபிகளுக்கு ஒரு நாடாகத் தோற்றுவிக்கவும், இரு சமூகத்துக்கும் புனித நகரமாகக் கருதப்படும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐ.நா ஆதரவளித்தது.
இந்தத் திட்டத்தை யூத தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பாலத்தீன அரபிகள் நிராகரித்தார்கள்.
இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாத பிரிட்டிஷ் ஆட்சியளர்கள் நாட்டை விட்டு 1948இல் வெளியேறினர். அதன்பின்னர் 1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி யூத தலைவர்கள் இஸ்ரேல் என்னும் தனி நாடு தோற்றுவிக்கப்பட்டதாக அறிவித்தனர். அதே தினத்தில் இஸ்ரேலை தனி நாடாக அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமேன் அங்கீகரித்தார்.
1940களில் ஏற்பட்ட 'அல் நக்பா' பேரழிவு

பட மூலாதாரம், Getty Images
அந்த அறிவிப்புக்கு பாலத்தீனார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுநாளே போர் மூண்டது. அண்டை அரபு நாடுகள் படையெடுத்தன.
இந்தப் போரில் மட்டும் சுமார் 7,50,000 அரபிகள் தங்களது வீட்டை விட்டும் தாயகத்தை விட்டும் தப்பி ஓடினர் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதை பாலத்தீனர்கள் அல்-நக்பா அதாவது பேரழிவு எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் போர் 1949 வரை நீடித்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது.
ஜோர்டான் ஆக்கிரமித்த பகுதி வெஸ்ட்பேங்க், அதாவது ‘மேற்கு கரை’ என அறியப்படுகிறது. எகிப்து ஆக்கிரமித்த பகுதிதான் காஸா.
இரண்டாகப் பிரிந்த ஜெருசலேம்
ஜெருசலேமும் இரண்டாகப் பிரிந்தது. மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலிய படைகளும், கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானிய படைகளும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
ஆனால், ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவே இல்லை. அனைத்து தரப்பும் ஒருவமீது ஒருவர் பழி போட, தொடந்து நிறைய போர்களும் சண்டைகளும் நீடித்தன.
கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த ஒரு போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமையும் மேற்குக் கரையையும் ஆக்கிரமித்தது. மேலும், சிரியன் கோலன் குன்றுகள், காஸா மற்றும் எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
பாலத்தீன அகதிகள் பலரும் அவர்களது சந்ததியினரும் காஸா, மேற்குக் கரை மற்றும் அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர்.
அந்த அகதிகளோ அல்லது அவர்களது சந்ததியினரோ தத்தமது வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்க மறுத்தது. அப்படி அனுமதிக்கப்பட்டால் அதைக் கையாள முடியாது என்றும், அது யூத தேசம் என ஒன்று இருப்பதற்கே அச்சுறுத்தலாக அமையும் என்கிறது இஸ்ரேல்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் இன்னமும் மேற்குக் கரையை ஆக்கிரமித்துள்ளது. எனினும் 2005இல் காஸாவில் இருந்து விலகியது. ஆனால் இந்தச் சிறிய கடற்கரையோர துண்டுப் பகுதியான காஸாவை ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாக ஐநா கருதுகிறது.
இஸ்ரேல் மொத்த ஜெருசலேமையும் தனது தலைநகர் எனக் கூறுகிறது. அதே நேரம் பாலத்தீனம் கிழக்கு ஜெருசகேமை தனது எதிர்கால பாலத்தீன நாட்டின் தலைநகர் எனக் கூறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். பிரிட்டன், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு ஐ.நாவில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இஸ்ரேல், கடந்த 50 ஆண்டுகளில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் பல குடியிருப்புகளைக் கட்டியது. இப்போது கிட்டதட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் இங்கே வாழ்கிறார்கள்.
சர்வதேச விதிகளின்படி இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிலைப்பாடு இதுதான். ஆனால் இஸ்ரேல் இதை நிராகரிக்கிறது.
மேற்குக் கரையில் வசிக்கும் பாலத்தீனர்கள் இஸ்ரேல் தங்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால், பாலத்தீனர்களின் வன்முறையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
மேற்கு கரையில் குடியேறியுள்ள யூதர்களிடமிருந்து தினமும், குறைந்தது மூன்று தாக்குதல்களையாவது பாலத்தீனர்கள் எதிர்கொள்வதாக ஐ.நா சமீபத்தில் தெரிவித்திருந்தது. கடந்த சில மாதங்களில் குறைந்தபட்சம் மூன்று பாலத்தீன குடும்பங்களாவது தமது நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
அதே நேரம் இந்தப் பிராந்தியத்தில் பாலத்தீனர்களால் யூதர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



