போராட்டத்தில் ஈடுபடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் எம்.பி - காணொளி

போராட்டத்தில் ஈடுபடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் எம்.பி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கூறியுள்ளார். மறுபுறம், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இந்த முடிவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஹரியாணா போலீஸ் அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் முழு தீர்வு எட்டப்படாமல் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லிக்குள் நுழைய புறப்பட்ட விவசாயிகள் ஹரியாணா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் உபயோகிப்பட்டன.

இதற்கிடையே, பஞ்சாப் - ஹரியாணா எல்லையான கானுரி என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஷுப் கரண் சிங் என்ற விவசாயி கொல்லப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து தங்கள் போராட்டத்தை இரண்டு தினங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

பிப்ரவரி 22ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள், பிப்ரவரி 23ஆம் தேதியை நாடு தழுவிய அளவில் கருப்பு தினமாக அனுசரிக்கபோவதாக அறிவித்தனர். மேலும், பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

ஷுப் கரண் சிங் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மாண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஷிப் கரண் சிங்கின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது இளைய சகோதரிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியாணா காவல்துறை தெரிவித்தது.

பிப்ரவரி 22ஆம் தேதி அம்பலா மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விவசாயிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. பின்னர், பிப்ரவரி 23ஆம் தேதி மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட ஹரியாணா போலீஸ், தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விவசாயிகளை கைது செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த எம்பியான தன்மன் ஜீத் சிங் தேசி வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், குருத்வாராக்களை சேர்ந்தவர்கள் உட்பட தனது தொகுதியைச் சேர்ந்த பலரும் தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியை நோக்கி பேரணி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பாதுகாப்பு தொடர்பாக தீவிர கவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)