தன்னைத் தானே இறந்து விட்டதாகப் பதிவு செய்துகொண்ட அமெரிக்க நபர் - ஏன் தெரியுமா?

பட மூலாதாரம், Grayson County Detention Centre
- எழுதியவர், ஜோ டைடி
- பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அமெரிக்காவில் ஒரு நபர், தான் இறந்துவிட்டதாகத் தானே அரசாங்க ஆவணங்களில் பதிவேற்றியிருக்கிறார்.
குழந்தை வளர்ப்பிற்கான ஆதரவுத் தொகையை வழங்குவதிலிருந்து தப்பிக்க, அவர் அரசாங்க இணையதளங்களை ‘ஹேக்’ செய்து ஆவணங்களைத் திரித்திருக்கிறார்.
இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு 81 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸி கிப்ஃப் என்ற அந்த நபருக்கு, கணினி மோசடி மற்றும் அடையாளத் திருட்டுக்காக 81 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
39 வயதான அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் ஹவாய் இறப்பு பதிவு அமைப்பில், தானே தனது சொந்த மரணத்திற்கான பதிவை உருவாக்கியதாக ஒப்புக்கொண்டார்.
கிப்ஃப் பின்னர் ஹவாய் இறப்புச் சான்றிதழ் படிவத்தை நிரப்பி, அதற்கான மருத்துவச் சான்றிதழாளராகத் தன்னையே நியமித்துக்கொண்டு, மருத்துவரின் டிஜிட்டல் கையொப்பத்தைப் பயன்படுத்தி, தனது மரணத்துக்குத் தானே சான்றளித்துக் கொண்டார்.
இதன்மூலம், அவர் பல அரசாங்க தரவுத்தளங்களில் இறந்த நபராக பதிவு செய்யப்பட்டார்.
1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் 84 லட்சம் ரூபாய்) குழந்தை ஆதரவுத் தொகை அவர் செலுத்த வேண்டியிருந்த நிலையில், அதை தவிர்ப்பதற்காகதான் இப்படி செய்ததாகக் அவர் ஒப்புக்கொண்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டார்க் நெட்-டில் நடந்த வியாபாரம்
இந்தச் சம்பவம் தவிர, கிப்ஃப், உண்மையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழிலாளர்களின் ‘லாக்-இன்’ (Login) தகவல்களைத் திருடி, அவற்றைப் பயன்படுத்தி மற்ற இறப்புப் பதிவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகளுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்.
அவர் இந்த கணினிகளுக்கான ‘லாக்-இன்’ தகவல்களை விற்பனை செய்ததும், சமூகப் பாதுகாப்பு எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட திருடப்பட்ட தரவுகளை ‘டார்க் நெட்டில்’ மற்ற சைபர் குற்றவாளிகளுக்கு விற்றதும் கண்டறியப்பட்டுள்ளது.
‘டார்க் நெட்’ என்பது பயனரின் அடையாளத்தை மறைக்கும் சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய இணையத்தின் ஒரு பகுதியாகும்.
அல்ஜீரியா, ரஷ்யா, மற்றும் யுக்ரேனைச் சேர்ந்த தனிநபர்கள் என உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு கிப்ஃப் இந்தத் தகவல்களை விற்றார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கென்டக்கி கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் கார்ல்டன் எஸ். ஷியர், IV, "இது ஒரு இழிவான மற்றும் அழிவுகரமான முயற்சி. இது அவரது குழந்தை ஆதரவு கடமைகளைத் தவிர்க்கும் மன்னிக்க முடியாத இலக்கை அடிப்படையாகக் கொண்டது," என்று கூறினார்.
கூட்டாட்சிச் சட்டத்தின் கீழ், கிப்ஃப் தனது சிறைத்தண்டனையில் 85 சதவீதத்தை அனுபவிக்க வேண்டும். அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் அவர் அமெரிக்க நன்னடத்தை அலுவலகத்தின் மேற்பார்வையில் இருப்பார்.
கிப்ஃப்-இன் இந்தச் சட்டவிரோதச் செயலால், அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் கணினி அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம், மற்றும் அவரது குழந்தை ஆதரவு கடமைகளைச் செலுத்தத் தவறியது ஆகியவற்றுக்கான மொத்த மதிப்பீடு 195,758.65 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)























