You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி அமைச்சரவையில் அண்ணாமலைக்கு இடம் இல்லை - தமிழ்நாட்டில் பாஜக திட்டம் என்ன?
இந்திய பிரதமராக நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற யூகங்கள் தவறாகியுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து மோதியின் முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த எல்.முருகனுக்கு இந்த அமைச்சரவையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெயசங்கர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம், தமிழக பாஜகவுக்கும் அதன் தலைமைக்கும் என்ன செய்தியை வழங்குகின்றது?
கடந்த தேர்தல்களிலும் பாஜக தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான எல்.முருகனுக்கு இணையமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
அதேபோன்று, மோதியின் தற்போதைய அமைச்சரவையிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே எழுந்த வண்ணம் இருந்தன.
தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தைக் கூட பெறவில்லையென்றாலும், வாக்கு சதவிகிதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதுகுறித்த செய்திகளும் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வலம் வரத்தொடங்கின. அண்ணாமலைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற செய்திகள் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகின.
ஆனால், மத்திய அமைச்சரவையில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, முந்தைய மோதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பு ஜூலை, 2021-ம் ஆண்டு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பதவியேற்றதிலிருந்தே திமுக மீது தொடர்ச்சியாக விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பிவந்தார். தன்னுடைய அதிரடியான பேச்சுகள், நடவடிக்கைகளால் தேசியளவில் பாஜகவின் தென்னிந்திய முகமாக அண்ணாமலை அறியப்பட்டாலும், பல விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராக அண்ணாமலையின் ‘வார் ரூம்’ செயல்படுவதாக பாஜகவிலிருந்த காயத்ரி ராகுராம் குற்றம் சாட்டினார். ஊடகங்களிடம் அவர் நடந்துகொள்ளும் போக்கு குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை நிறுத்தப்பட்டதிலிருந்து அந்த தொகுதி தேசியளவில் கவனம் பெற்றது. முக்கிய ஊடகங்கள் அத்தொகுதிக்கு வந்து அண்ணாமலையை பேட்டி கண்டன.
முழு விவரம் காணொளியில்....
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)