காணொளி: பாலத்தீனர்களை தாக்கிய இஸ்ரேலிய குடியேறிகள்
மேற்கு கரையில் பாலத்தீனரின் விளைநிலத்தில் இஸ்ரேலிய குடியேறிகள் நடத்திய தாக்குதலை பிபிசி நேரில் கண்டது.
பிராஹிம் குடும்பம் பல தலைமுறைகளாக ஆலிவ் சாகுபடி செய்து வருகிறது. இஸ்ரேலிய குடியேறிகள் தங்கள் மரங்களை துண்டுதுண்டாக வெட்டிவிட்டதாக அவர் கூறுகிறார்.
கைகளில் கட்டைகளுடன் முகமூடி அணிந்த இஸ்ரேலிய குடியேறிகளின் திடீர் தாக்குதலை பிபிசி நேரில் கண்டது.
இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் உள்ளூர் பாலத்தீனர்களுக்கு இடையில் இது இப்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. இருதரப்பைச் சேர்ந்த பலரும் மோதிக் கொண்டுள்ளனர்.
இந்த மோதல் தற்போது அன்றாடம் நடப்பதாகவும், நிலத்தை கைப்பற்ற இஸ்ரேலிய குடியேறிகள் பயன்படுத்தும் யுத்தம் இது என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலின் வேகமும் பரவும் விதமும் அதிர்ச்சிகரமாக இருந்தது.
பல இஸ்ரேலிய குடியேறிகள் மலைகளுக்கு குறுக்கே ஓடுகிறார்கள். அவர்கள் கட்டடங்களை உடைத்து உள்ளே நுழைந்ததை பார்த்தோம், வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு திட்டமிட்டு அவர்கள் தீ வைத்தனர்.
மலை பகுதிகளில் தீ பரவும் போது கால்நடை மேய்ப்பவர்கள் தங்கள் மந்தைகளை விரட்டுகின்றனர்.
சில மணிநேரங்களில் இந்த மோதல் ஆலிவ் தோட்டத்திலிருந்து முழு மலையும் பரவிவிட்டது.
பாலத்தீனர்களை தங்கள் நிலத்திலிருந்து இஸ்ரேலிய குடியேறிகள் விரட்டுகின்றனர். பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ராணுவம் வந்தாலும், அதைத் தடுக்க பெரிதாக எதும் செய்யவில்லை.
அப்பகுதியிலுள்ள பாலத்தீனர்கள் உதவிக்கு வருகிறார்கள், ஆனால் ராணுவம் முக்கிய சாலையை மூடிவிட்டது.
பாலத்தீனர்கள் டயர்களை எரித்ததாகவும், 4 இஸ்ரேலியர்களுக்கு சம்பவ இடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டதாக ராணுவம் எங்களிடம் கூறியது.
தாக்குதலில் ஈடுபட்ட எந்த இஸ்ரேலிய குடியேறியிடமும் எங்களால் பேச முடியவில்லை.
இரு தரப்பிலும் சண்டையைத் தூண்டுபவர்கள் இருப்பதாகவும் இது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் உள்ளூர் இஸ்ரேலிய குடியேறிகளின் கவுன்சில் தெரிவித்தது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



