இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தால் அமெரிக்கா என்ன செய்யும்?

காணொளிக் குறிப்பு,
இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தால் அமெரிக்கா என்ன செய்யும்?
பிரசுரிக்கப்பட்டது

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவரது வருகை அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் என அனைவரும் நம்பினர். தற்போது அந்த மாற்றங்கள் மெல்ல வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அண்மையில் பிரதமர் மோதி அமெரிக்கா சென்று டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தின்போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியா இனி அமெரிக்காவிடம் அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

நரேந்திர மோதி இந்தியா திரும்பியதும் கத்தார் மன்னர் ஷேக் தமின் பின் ஹமத் அல்-தானி இந்தியாவுக்கு வந்தார்.

இந்தியா அமெரிக்காவுடன் நல்லுறவைப் பராமரிக்கும் அதேநேரத்தில் ரஷ்யா மற்றும் இரான் போன்ற நாடுகளுடனான உறவிலும் சமநிலையை பேண முடியுமா? இந்தச் சமன்பாட்டில் கத்தார் ஏன் இந்தியாவுக்கு முக்கியமானது? அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே டிரம்பின் முடிவுகள் இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா?

பிப்ரவரி 17ஆம் தேதி இரவு கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி இந்தியாவுக்கு வந்தபோது அவரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோதி புதுடெல்லி விமான நிலையத்திற்கே சென்றார்.

இந்தியா மற்றும் கத்தார் இடையே பாரம்பரியமாக ஆழமான உறவுகள் இருந்திருக்கின்றன. இரு நாடுகளிடையேயான தூதரக உறவுகள் 1970களில் தொடங்கின.

எல்என்ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட எரிவாயு, ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், உரம், பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் போன்றவற்றை கத்தார் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம் இந்தியா மற்றும் கத்தார் என இரண்டு நாடுகளுக்குமே சவாலாக மாறியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு உதவும் வகையில் இந்தியா இனி அமெரிக்காவிடம் அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா மாறும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தால், அமெரிக்காவுடன் எப்படி நல்லுறவைப் பராமரிக்க முடியும்? ஒருவேளை இயற்கை எரிவாயு வாங்க இந்தியா, அமெரிக்காவின் பக்கம் திரும்பினால், இந்தியா மற்றும் கத்தார் இடையிலான உறவின் மீதான தாக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)