You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலின் பின்னணி என்ன?
இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 'ஆபரேஷன் ரைசிங் லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்துள்ளார். என்ன நடந்தது?
இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது. நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. நடான்ஸ் அணுசக்தி நிலையம் இரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 225 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
அதேபோல தெஹ்ரானில் வெடிப்புச் சத்தம் கேட்பதை காணொளிகளில் கேட்க முடிகிறது. தெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் அவரசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இரானுக்கு எதிரான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படுவதால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், இரான் அரசு ஊடக கூற்றுப்படி, 2 மூத்த அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரான் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசியும் அடங்கும்.
இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் மோசமான தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த தாக்குதலின் மூலம் இஸ்ரேல் தனக்கான மோசமான எதிர்காலத்தை தேடிக்கொண்டுள்ளது. அது நிச்சயம் இஸ்ரேலுக்கு கிடைக்கும் என ஆயதுல்லா அலி காமனெயி கூறியதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் இரான் குற்றம்சாட்டி உள்ளது. எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை மறுத்துள்ளார்.
எனினும் இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால் அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கையில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார். இரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தொடரும் என தான் நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு