எம்ஜிஆர் ரசிகரான மலேசியா பிரதமர் அன்வார் இப்ராகிம்: இந்தியர்கள் பற்றிய அவர் பார்வை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
நாட்டை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அதைப் பொறுப்புடன் நிறைவேற்றப் போவதாகவும் சொல்கிறார் மலேசியாவின் புதிய பிரதமரான அன்வார் இப்ராகிம்.
இன்று மலேசியாவின் பத்தாவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், இந்த நாளுக்காக சுமார் 29 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது. அரசியலில் சாதிக்கவும் பதவிகளைப் பெறவும் பொறுமை மிக அவசியம் என்ற கூற்றுக்கு அன்வார் மிகச் சிறந்த உதாரணம் எனலாம்.
கடந்த 1947ஆம் ஆண்டு பிறந்த அன்வாருக்கு தற்போது 75 வயதாகிறது. பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் மெர்தாஜம் தான் இவரது சொந்த ஊர்.
எளிமையான குடும்பத்தில் பிறந்த அன்வார், கடந்த 1968ஆம் ஆண்டு முதல் 1971 வரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டார். அப்போது பல்கலைக்கழக மலாய் மொழி சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்குப் பொறுப்பேற்றிருந்தார். பிறகு 1971-ம் ஆண்டில், கிராமப்புற வறுமை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு தீர்வுகாண ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இருபத்து நான்கு வயதிலேயே இளைஞர்களுக்காக ஓர் இயக்கத்தை தொடங்கி அதை வழிநடத்தி வந்தார் அன்வார். இந்த அமைப்பின் மூலம் சமூக சேவைகளாற்றி, பல்வேறு கல்வித் திட்டங்களையும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்தப் பணிகளின் காரணமாக அரசியல் பிரமுகர்களின் பார்வை அவர் மீது திரும்பியது. கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுத்து நிற்பதைக் கண்டு, மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் அரசியல் கட்சியான அம்னோவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இணைந்தவருக்கு 1982ஆம் ஆண்டு அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பு கிடைத்தது. அப்போது கட்சித் தலைவராக மகாதீர் இருந்தார்.
இந்த நியமனத்துக்குப் பின்னர் தமது அடுத்தக்கட்ட வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும் என அன்வாரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் வேளாண் அமைச்சர், கல்வி அமைச்சர், நிதியமைச்சர் என அடுத்தடுத்து பதவிகளும் பொறுப்புகளும் தேடி வந்தன. இறுதியாக நாட்டின் துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Anwar Ibrahim/Twitter
வளர்ச்சியை காவு வாங்கிய நிதியமைச்சு
அன்வார் நிதியமைச்சராக பதவி வகித்தபோது (1997ஆம் ஆண்டு) ஆசியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது நாட்டின் நிதி நிர்வாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் அன்றைய பிரதமர் மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அச்சமயம் சர்வதேச செலாவணி நிதியம் (IMF) முன்வைத்த பரிந்துரைகளை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்பதாக அறிவித்தார் அன்வார். மேலும் அரசின் செலவினங்கள், புதிய திட்டங்கள் தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகளை அன்வார் கொண்டு வந்தது பிரதமருடனான கருத்து வேறுபாடுகளின் அகலத்தை விரிவுபடுத்தியது.
மலேசியாவின் சந்தையானது எல்லாருக்கும் திறந்திருக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதும், அதன் வழி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதும் அன்வாரின் திட்டமாக இருந்தது.
ஆனால் மகாதீரோ, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கடுமையான நடைமுறைகள் தேவை என வலியுறுத்தினார். மேலும், மலேசியாவின் கரன்சியான ரிங்கிட்டின் மதிப்பு அனைத்துலகச் சந்தையில் மளமளவென சரிவுகண்டபோது, மகாதீர் கொந்தளித்தார்.
மலேசியாவை திவாலாக்க சில தரப்பினர் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், மலேசிய ரிங்கிட்டின் மதிப்பை தமது அரசுதான் இனி நிர்ணயிக்கும் என முடிவெடுத்தார். இவை அனைத்துமே அன்வாரின் திட்டங்களைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்த நடவடிக்கைகளாக அமைந்தன.
எனினும் பிரபல நியூஸ் வீக் பத்திரிகை 1998ஆம் ஆண்டின் ஆசியாவின் ஆகச் சிறந்த மனிதராக "Asian of the Year" அன்வாரை தேர்வு செய்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் அன்வார்
மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் மலாய்க்காரர்கள், சீனர்களுக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளியினர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அன்வாரைப் பொறுத்தவரை இந்திய சமூகத்துடன் எப்போதுமே நல்லுறவு பாராட்டி வந்துள்ளார்.
அவரது சொந்தக் கட்சியான கெ அடிலான் (பிகேஆர்) கட்சியிலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலும் இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். கடந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்திலும் இந்திய வம்சா வளியினர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
அன்வார் இப்ராகிம் தமிழ்த் திரைப்படப் பாடல்களை ரசித்துக் கேட்பார். அதிலும் குறிப்பாக மறைந்த தமிழ்நாடு முதல்வர் எம்ஜிஆரின் பாடல்கள் என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
நடந்து முடிந்த அண்மைய தேர்தலின்போதும், தாம் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்ற எம்ஜிஆர் பாடலை ஒலிக்கச் செய்து, அதன் வரிகளை முணுமுணுத்தபடியே வாக்கு சேகரித்தார்.
மலேசியாவில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகப் புகார் எழுந்ததை அடுத்து ஹிண்ட்ராஃப் இயக்கம் தோன்றியது. தலைநகர் கோலாலம்பூரில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உலகத்தின் பார்வை மலேசியாவை நோக்கித் திரும்பியது. அச்சமயம் சிறையில் இருந்தார் அன்வார்.
"இந்திய வம்சாவளியினரின் மனக்குறைகளை முன்பே கேட்டிருக்கலாம். அதைச் செய்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது," என கருத்து தெரிவிக்க அவர் தயங்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நம்பிய மகாதீர் கைவிட்ட தருணம்
முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட அன்வார், 1988ஆம் ஆண்டு, செப்டம்பர் 2ஆம் தேதி மகாதீரின் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அத்தகைய குற்றத்தைப் புரிந்ததாக அன்வாரிடம் விசாரணை நடைபெற்றது. மறுதினமே அம்னோ கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அதே மாதம் 20ஆம் தேதி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
எனினும் அவர் கைது குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அரசாங்கம் வெளியிடவில்லை. பின்னர் அவர் உள்துறை அமைச்சின் உத்தரவுப்படி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அச்சமயம் பிரதமராக இருந்த மகாதீர் வசம்தான் உள்துறை அமைச்சும் இருந்து.
சில தினங்களுக்குப் பின்னர் ஊழல், காவல்துறை விசாரணையில் தலையிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அன்வார் மீது பதிவாகின.

பட மூலாதாரம், Getty Images
இந்தக் காலகட்டத்தில்தான் அன்வார் சிறையில் தாக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது, அவர் கண்கள் வீங்கி, கன்றிப் போயிருந்தன. அச்சமயம் காவல்துறை தலைவராக இருந்த ஐஜிபி ரஹிம் நூர் தான் அன்வாரைத் தாக்கியதாகப் பரபரப்பாகப பேசப்பட்டது.
அரசியலில் இதுபோன்ற சோதனைகளும் வேதனைகளும் சகஜம்தான் என்றாலும் அன்வாரின் அரசியல், சமூகப் பயணத்தில் எல்லாமே அசுர வேகத்தில் நடந்துவிட்டன என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.
எத்தனை வேகமாக அரசியல் கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்றம் கண்டாரோ, எவ்வாறு சாதாரண தொண்டனாகக் கட்சியில் சேர்ந்து பல்வேறு அமைச்சுகளுக்குப் பொறுப்பேற்றாரோ, அதேபோன்றுதான் துணைப் பிரதமர் பதவியில் இருந்து ஒரே இரவில் தூக்கியெறியப்பட்டார், சிறைக் கைதியாகவும் ஆனார்.
அரசியல் பயணத்துக்கும் பலம் தந்த குடும்பம்
அன்வாரின் அரசியல் பயணத்தில் வெற்றி, தோல்விகளை அவர் மட்டுமே எதிர்கொள்ளவில்லை. அவரது குடும்பத்தினரும் சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. அன்வார் சிறைக்குச் சென்ற பின்னர், அவரது இடத்தை அவரது மனைவி வான் அசிஸா ஏற்றுக்கொண்டார். ஒரு பக்கம் கணவரின் விடுதலைக்கான போராட்டம். மறுபக்கம் அரசாங்கத்தை எதிர்க்கும் இயக்கம் என பம்பரமாகச் சுழன்றார் வான் அசிஸா.
அடுத்த சில ஆண்டுகளில் அன்வாரின் மகள் நூருல் இசாவும் அரசியல் களம் கண்டார். மகாதீர் தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அ மைச்சரவையில் வான் அசிஸா துணைப் பிரதமராக இருந்தார். அதேபோல் மகள் நூருல் இசாவும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.
கணவர் சிறையில் இருந்த வேளையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட வான் அசிஸாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. இப்போது கணவர் அன்வார் பிரதமரான நிலையில், அவரது அமைச்சரவையில் வான் அசிஸாவும் இடம்பெறுகிறார்.

பட மூலாதாரம், Anwar Ibrahim/Twitter
ஒரே இரவில் மாறிப்போன காட்சிகளும் வாழ்க்கையும்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1993ஆம் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார் அன்வார். அன்றைய பிரதமர் மகாதீர் மொஹம்மத், தனக்குப் பிறகு அன்வார்தான் நாட்டுக்கு வழிகாட்டுவார் என்பதை உணர்த்தும் வகையில், அவரை துணைப் பிரதமராக நியமித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மகாதீரின் நம்பிக்கைக்குரியவராகவே வலம் வந்தார் அன்வார்.
இந்நிலையில் 1998ஆம் ஆண்டு அன்வார் திடீரென கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அன்வார் மீது ஓரினச் சேர்க்கை, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்தாண்டுகள் துணைப் பிரதமராக பவனி வந்தவர், ஓர் இரவில் நிகழ்ந்த மாற்றங்கள், சில அரசியல் கணக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டதாக ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.
மேலும் அச்சமயம் சிறையில் வைத்து அவர் தாக்கப்பட்டதாக தகவல் பரவியது. யாரோ தாக்கியதுபோல் ஒரு கண் தடித்துச் சிவந்திருக்க, அதே கோலத்துடன் ஊடகங்களில் வெளிவந்த அன்வாரின் புகைப்படங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. கோலாலம்பூரில் போராட்டம் வெடித்தது. அன்வாருக்கு ஆதரவாக திரண்ட நூற்றுக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.
ஆதரவாளர்களின் துணையோடு புதிய அரசியல் கட்சி தொடங்கினார் அன்வார். அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்பட்டு வந்த பிறகு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் அன்வார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



















