You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிருஷ்ணகிரி சோகம் – பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலி – வீடியோ
பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் குடோனை நடத்தி வந்தவர், அவரது மனைவி, மகன், மகள் உட்பட 9 பேர் உயிரிழந்த துயர சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். இன்று காலை வழக்கம் போல குடோனில் பட்டாசுகளை ரவி பேக்கிங் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா, ருத்தீஸ் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், காலை 9.30 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசு குடோன் தரைமட்டமானது. இந்த விபத்தில் குடோனில் இருந்த ரவியின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அருகே வெல்டிங் கடை நடத்திய இப்ராஹிம், இம்ரான், ஹோட்டல் நடத்திய ராஜேஸ்வரி, தண்ணீர் கம்பெனியில் பணிபுரிந்த சரசு, ஜேம்ஸ் ஆகிய 9 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 11 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர்.
காலை 9.30 மணியளவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியதாக கூறப்பட்டது. ஆனால், இச்சம்பவத்தை நேரில் பார்த்த சுகையில் நம்மிடம் பேசும்போது "10 மணி சுமாருக்கு இந்த வழியாக நடந்து போனேன். சுடுகாட்டை தாண்டும் போது வெடி சத்தம் கேட்டது," என்றார். தான் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறிய அவர், பட்டாசு கம்பெனியால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததாக கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்