காணாமல் போனவரின் உடல் முதலையின் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு - என்ன நடந்தது?

முதலை

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் இடத்தில் சனிக்கிழமையன்று மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் மாயமான நிலையில், அவரை ஒரு முதலை விழுங்கியது தெரியவந்துள்ளது.

கெவின் டார்மோடி என்ற அந்த மீனவர், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடபகுதியில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் உப்பு நீர் பகுதியான கென்னடிஸ் பெண்டில் சனிக்கிழமையன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் மாயமான நிலையில் இரண்டு நாட்களாக அவரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, இரண்டு பெரிய முதலைகளை சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்ற போலீசார், அதில் ஒரு முதலையின் வயிற்றுக்குள் மனித உடல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அந்த உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், 65 வயதான கெவின் டார்மோடியைத் தேடும் முயற்சிகள் சோகத்தில் முடிவடைந்ததாக போலீசார் அறிவித்துள்ளனர்.

கேப் யார்க்கில் வசித்து வந்த டார்மோடி, மிகவும் அனுபவம் வாய்ந்த மீனவர் என்பது மட்டுமல்லாமல், அந்த சமூகத்தினரிடையே நன்கு அறிமுகமான நபராகவும் இருந்தார்.

டார்மோடி காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் (0.9 மைல்) தொலைவில் 4.1 மீட்டர் (13.4 அடி), 2.8 மீட்டர் நீளமுள்ள அந்த முதலைகளை திங்கள் கிழமையன்று போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அவற்றில் ஒரு முதலையின் வயிற்றுக்குள் மட்டும் மனித உடல் இருந்தது என்றாலும், அவரைத் தாக்கும் முயற்சியில் இரண்டு முதலைகளும் கூட்டாக ஈடுபட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

டார்மோடியுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் அவர் தாக்கப்பட்டதைப் பார்க்கவில்லை என்ற போதிலும், அவரது அலறல் சத்தம் கேட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

முதலை

பட மூலாதாரம், Getty Images

"சத்தம் கேட்ட இடத்துக்கு உடனடியாக விரைந்தேன்... ஆனால் அவர் இருந்ததற்கான எந்த அடையாளமும் அங்கே இல்லை. அவரது பொருட்கள் மட்டும் அங்கே இருந்தன. வேறு எதுவும் இல்லை," என அவரது நண்பர் ஜான் பீட்டி, கேப் யார்க் என்ற வாராந்திர ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் வெப்பமான வடபகுதியில் முதலைகள் சாதாரணமாக வசித்து வந்தாலும், மனிதர்களை அவை தாக்கும் சம்பவங்கள் எப்போதாவது தான் நடக்கும். முதலை தாக்குவது குறித்து 1985-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிகழ்வு வரை 13 பேர் மட்டுமே முதலை தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: