You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ரயில் விபத்து: நடந்தது என்ன? பயணிகள் என்ன சொல்கின்றனர்?
வெள்ளிக்கிழமையன்று மாலை, தமிழ்நாட்டிற்கு ஒரு பரபரப்பான மாலை. திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் எந்திரக் கோளாறின் காரணமாக மீண்டும் தரையிறங்குவதற்காக வானத்தில் வட்டமடித்தது மாநிலம் முழுவதையும் பரபரப்பிற்குள்ளாக்கி, பிறகு ஒரு வழியாக தரையிறங்கியது. ஆனால், அதில் ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்கு முன்பாகவே அடுத்த செய்தி வந்து சேர்ந்தது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது பயணிகள் ரயில் மோதியதில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரியவும் ஆரம்பித்தன.
இந்த ரயிலில் சுமார் ஆயிரத்து முன்னூறு பயணிகள் பயணித்த நிலையில், அவர்களது நிலைமை என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு தமிழ்நாடு வழியாகச் செல்லும் பாக்மதி விரைவு ரயில், வெள்ளிக்கிழமையன்று காலை பத்தரை மணியளவில் மைசூரில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் பெரும் எண்ணிக்கையிலான வடமாநிலத் தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
இந்த ரயில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8.27 மணியளவில் பொன்னேரி ரயில் நிலையத்தைக் கடந்து, 8.30 மணியளவில் கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. அந்த ரயில் நிலையத்தில் பிரதான பாதையில் செல்ல, சிக்னல் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த ரயில் குலுங்குவதை உணர்ந்தனர். ரயில் பிரதான ரயில் பாதைக்கு அருகில் இருந்த லூப் லைனில் செல்ல ஆரம்பித்தது. அடுத்த சில நொடிகளில் அந்த ரயில், லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது.
இதையடுத்து, பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. யாரும் உயிரிழக்கவில்லையென்றாலும் சுமார் 20 பயணிகள் வரை காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)