ஐபிஎல் ஏலம் 2023: தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்? கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?

கிரிக்கெட்

பட மூலாதாரம், CSK/Twitter

பிரசுரிக்கப்பட்டது

“சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்திருப்பதால் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியுடன் இருப்பார். காரணம், ஒவ்வொரு வீரரும் எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாட விரும்புவார்கள். அவரை பலரும் நேசிக்கிறார்கள்” - இவை ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் உதிர்த்த வார்த்தைகள்.

பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ஏலத்தில் எடுத்த அடுத்த கணமே, ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கி விட்டனர். தோனி - பென் ஸ்டோக்ஸ் காம்போவில் இந்த முறை கோப்பை சென்னைக்குத்தான் என பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸுக்கு ரூ. 16.25 கோடி

2019, 50 ஓவர் உலக கோப்பை, 2022 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்.

டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஸ்டோக்ஸ் வல்லவர்.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைத்தேர்ந்தவர். உலகின் டாப் ஆல் ரவுண்டர். அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று வெற்றியுடன் திரும்பியவர்.

இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அதிரடி நாயகனை வலைவீசி தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூரு, ராஜஸ்தான், லக்னெள, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வம் காட்டின.

ஆனால் கைக்கு எட்டவில்லை. ஐபிஎல் 2023 ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் இருந்து ஏலத்தொகையை எகிற வைத்து 16.25 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே-இடம் வந்து சேர்ந்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸின் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவரும் பென் ஸ்டோக்ஸ்தான்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்?

ஐபிஎல் வரலாற்றில் 2017 பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. முதல்முறையாக ஐபிஎல்லில் ரைசிங் புனா சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அப்போது விளையாடாததால் புனா அணியில் தோனி விளையாடினார்.

பென் ஸ்டோக்ஸின் ஐபிஎல் பயணத்தில் அந்த ஆண்டுதான் அவர் அதிகபட்ச ரன்களை குவித்திருந்தார். 12 போட்டிகளில் விளையாடி 316 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். பந்து வீச்சிலும் 12 விக்கெட்களை சாய்த்தார். அந்த ஆண்டில் புனா அணி இறுதிப்போட்டி வரை சென்று மும்பையிடம் வீழ்ந்தது.

ஏற்கெனவே தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் பென் ஸ்டோக்ஸை கையாளுவது கேப்டன் தோனிக்கு எளிதாகவே அமையலாம்.

அதுமட்டுமின்றி 41 வயதாகும் தோனி எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம்.

அவருக்கு மாற்றாக ஒரு கேப்டன் முகமாகவும் பென் ஸ்டோக்ஸை சென்னை அணியால் முன்னிறுத்த முடியும். கூடவே டுவெய்ன் பிராவோ இல்லாத வெற்றிடத்தை அதிக பலத்துடன் நிரப்ப முடியும்.

பென்

பட மூலாதாரம், Getty Images

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஒரு அணியை வழிநடத்தும் அனுபவம் அவருக்கு இருக்கிறது.

தோனிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை அழங்கரிக்கும் வகையில் கூட ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என கிரிக்கெட் முன்னணி ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

“பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மிகவும் பொருத்தமானவர்” என ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்லும் கூறியுள்ளார்.

இதேபோன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “எம்.எஸ்.தோனி ஸ்டோக்ஸை சிறப்பாக வழிநடத்துவார்.

ஸ்டோக்ஸ் ஒரு உலக சாம்பியன். டி20 உலக கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர். அவரது கிரிக்கெட் மூளை சென்னையின் இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சென்னை ரசிகர்கள் அவரை மிகவும் விரும்புவார்கள்.

ஸ்டோக்ஸ், ரஹானே இருவருமே தோனியுடன் விளையாடியுள்ளார்கள். பிராவோவுக்கு மாற்றாக பென் ஸ்டோக்ஸ் நல்லதொரு தேர்வு” என தெரிவித்தார்.

சென்னை அணியின் புது முகங்கள்

'ஐபிஎல் 2023' ஏலத்தில் சென்னை அணி தனக்கான 7 காலி இடங்களையும் முழுமையாக நிரப்பியது. இதில் பென் ஸ்டோக்ஸை தவிர்த்து இதர 6 பேரும் குறைந்த தொகையில் எடுக்கப்பட்டவர்கள். நியூசிலாந்து பவுலர் கைல் ஜேமிசன் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதைதவிர்த்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ஆல் ரவுண்டர் நிஷாந்த் சிந்து 60 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய வீரர் அஜின்கியா ரஹானே 50 லட்ச ரூபாய்க்கு தனது முதல் ஏலப்பட்டியலில் சேர்த்தது சி.எஸ்.கே. இதை தவிர்த்து, இளம் வீரர்கள் ஷேக் ரஷீத், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோர் தலா 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

5வது முறையாக கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம், BCCI/IPL

கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ஜடேஜா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் மீண்டும் கேப்டனானார் தோனி. இருப்பினும் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட நுழைய முடியவில்லை.

14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்தது. புள்ளிப்பட்டியலில் 9ம் இடத்தை பிடித்தது. இந்த முறை சென்னை அணி தோனி தலைமையில் தொடக்கம் முதலே உத்வேகத்துடன் களமிறங்கக்கூடும். 2020ல் மோசமான தோல்விகளை எதிர்கொண்ட சென்னை அணி 2021-ல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தற்போது அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருப்பது கூடுதல் பலமாக அமையும். அதே சமயம், தோனியின் வியூகம், இதர வீரர்களின் கன்சிஸ்டன்ஸி உள்ளிட்ட அம்சங்களே சி.எஸ்.கே.வின் கோப்பை கனவை தீர்மானிக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: