"சூனியமான வாழ்க்கைக்கு ஒளி கிடைத்துவிட்டது" - ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமண போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் திருமணம்
படக்குறிப்பு, மணக் கோலத்தில் சுமதி - சேகர் தம்பதி
    • எழுதியவர், மாயகிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

வேகமாக மாறி வரும் இன்றைய சமூகச் சூழலில் திருமணம் என்பது ஆண், பெண் இரு பாலருக்குமே பெரும் சவாலான ஒன்றாக மாறி வருகிறது.

சாதி, மதம், கல்வி, சமூக அந்தஸ்து, வேலை, ஊதியம் எனப் பல தடைகளைக் கடந்தால்தான் ஆணோ, பெண்ணோ ஒரு திருமண பந்தத்திற்குள் நுழைய முடிகிறது. அதுவே, மாற்றுத்திறனாளிகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களது உடலில் உள்ள குறைகளே திருமணத்திற்குத் தடையாக நிற்கும்.

கள்ளக்குறிச்சியில் அத்தகைய மாற்றுத்திறனாளிகளான ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளனர். அதற்காக அவர்கள் கடந்து வந்த தடைகள் ஏராளம்.

குறிப்பாக, திருமணத்திற்கு 15 நிமிடங்கள் முன்பு வரையிலும்கூட, 'அது நடக்குமா?' என்று பல நூறு கேள்விகள் மனதிற்குள் அலையடிக்க மணமகள் ஒருவித நெருக்கடியுடனேயே இருக்க நேரிட்டது.

கண் முன்னே இமயம் போலக் குவிந்து கிடந்த தடைகள் அனைத்தையும் கடந்து, இன்று தம்பதியாக வாழ்க்கையில் இணைந்திருக்கும் சுமதி - சேகர் தம்பதியரை, அவர்கள் வசிக்கும் சங்கராபுரத்திற்கு நேரில் சென்று சந்தித்தோம்.

சங்கராபுரத்தில் நண்பர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வரும் சுமதி - சேகர் தம்பதி நம்மை இன்முகத்துடன் வரவேற்றார்கள். கொங்கராபாளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகள் சுமதி நம்மிடம் முதலில் பேசினார்.

"அப்போது என்க்கு 8 வயது இருக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் நடக்க முடியாமல் செயலிழந்தது. அதனால், இன்று வரை குழந்தை போல தவழும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அப்படியிருந்தும் எனது தாயார் என்னை நன்கு கவனித்துக் கொண்டார். ஆனால், என் சிறு வயதிலேயே தாயார் மறைந்துவிட, வாழ்க்கைப் போராட்டம் தொடங்கியது.

என் சகோதரன் உட்பட உறவுகள் அனைத்தும் என்னை வேண்டா வெறுப்பாகவே பார்த்ததோடு, ஒரு கட்டத்தில் 'உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை' என்று கூறி வெளியேற்றி விட்டார்கள்.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொந்த ஊரிலேயே தனியாக வீடு எடுத்து தங்கி கூலி வேலைக்குச் சென்று சுயமாக வாழத் தொடங்கினேன்.

எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வசதி இருந்ததால் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு நானே சமைத்துச் சாப்பிட்டு வந்தேன்.

வாழ்க்கை தொடர்ந்து கஷ்டங்களையே தந்தாலும், கருணை உள்ளம் கொண்ட சிலரும் எனக்கு அவ்வப்போது உதவி செய்தார்கள்.

மாற்றுத்திறனாளிகள் திருமணம்

திருமணம் நின்றதால், தலை தூக்கிய தற்கொலை எண்ணம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சில நாட்களுக்கு முன்பு அப்படியான உள்ளம் கொண்ட சிலர் எனக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக எனது நண்பர்கள் மூலமாக மாற்றுத்திறனாளி நபர் ஒருவரைப் பேசி முடித்தார்கள்.

நான் மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். நாமும் சராசரி மனிதர்களைப் போல புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிட்டோம் என்ற எண்ணத்தில் இருந்தேன். திருமண நாளும் வந்தது.

நண்பர்கள் என்னை திருமணம் செய்து வைப்பதற்காக கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். என் உறவினர்கள், நண்பர்களுடன் நான் காத்திருந்தோம். மணமகன் கடைசிவரை மணமேடைக்கு வரவில்லை. அந்த நாளையும் அது ஏற்படுத்திய வலியையும் என்னால் மறக்கவே முடியாது.

ஏற்கெனவே கால்களை இழந்து தவழ்ந்தபடி வாழ்ந்து வரும் என் வாழ்வில் மிகப் பெரிய இடியாக அந்த நாள் இருந்தது. வாழ்க்கையே சூனியமாகிப் போய்விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன்."

தான் கடந்து வந்த இன்னல்களைப் பற்றிப் பேசியபோது அந்த நினைவுகளுக்குள் மூழ்கியவரின் உள்ளத்தில் ஏற்பட்ட திணறல் அவரது கண்களில கண்ணீராகப் பெருக்கெடுத்து ஓடியது.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சுமதி தொடர்ந்து பேசினார்.

"சில நாட்கள் கழித்து உதவிக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தேன். அப்போதுதான் மாற்றுத்திறனாளியான காமாட்சியை சந்தித்தேன். அவர் எனது நிலையறிந்து வேதனைப்பட்டார்.

என் நிலையைக் கேட்ட உடனே கவலைப்படாதே நான் உனக்கு உதவுகிறேன் என்று கூறி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்து என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தார்," என்று முகத்தில் எழுந்த புன்முறுவலுடன் முடித்தார்.

மாற்றுத்திறனாளிகள் திருமணம்

என் மனைவி எனக்கு கிடைத்த வரம்....

சுமதியைத் தொடர்ந்து அவரது கணவர், ஊராங்கனி கிராமத்தைச் சேர்ந்த சேகர் அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"எனக்கு சுமதி கிடைத்தது மிகப்பெரிய வரமாகும். கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன். எனக்கு 40 வயதாகிறது. சிறு வயதிலேயே நான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்.

என் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஆனாலும் நம்பிக்கை என்னை விட்டுப் போகவில்லை. பத்தாம் வகுப்பு வரை சங்கராபுரத்தில் முடித்தேன். பள்ளி ஆசிரியர் உதவியுடன், வயர் சேர் பின்னும் தொழிலைக் கற்றுக் கொள்வதற்காக ஆந்திராவுக்கு சென்றேன்.

அதைக் கற்றுக்கொண்டு திரும்பி வந்து, எனக்குத் தெரிந்த அலுவலகங்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வயர் சேர் பின்னிக் கொடுப்பது, பழுதடைந்த சேர்களை பழுது நீக்கிக் கொடுப்பது எனச் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு என் தாயாருடன் நிம்மதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். அவ்வப்போது, நேரம் கிடைக்கும போது அருகிலுள்ள பேக்கரியில் இருந்து மற்ற கடைகளுக்கும், வீடுகளுக்கும் ரொட்டி, கேக் போன்றவற்றை விநியோகித்து வந்தேன்.

இவ்வாறாக என் வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில்தான் எனக்கு காமாட்சி ஃபோன் செய்தார். 'அண்ணா உங்களுக்கு வயதாகிக் கொண்டே போகிறது. நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது' என்று என்னைக் கேட்டார்.

நானோ மணப்பெண் மாற்றுத்திறனாளி பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். சுமதி குறித்தும், அவரது சூழல் குறித்தும் அவர் விளக்கிக் கூறியதுடன், நாங்கள் நேரில் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் திருமணம்

'திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு அம்மா இறந்துவிட்டார்'

நேரில் பார்த்து இருவரும் பேசினோம். சுமதியின் பேச்சு எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அன்றே முடிவு செய்து விட்டேன்.

உடனடியாக என் அம்மாவிடம் கூறினேன். அவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அப்போதெல்லாம் என் அம்மா என்னுடன்தான் இருந்தார். திருமணம் உறுதியாகிவிட்டது, பத்திரிகையும் அடித்தாகிவிட்டது.

ஆனால், வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்த நேரத்தில் என் அம்மா உயிரிழந்துவிட்டார். எனக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது."

கண் கலங்கிய சேகர், தன்னைச் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்தார்.

"ஆனால், என் அம்மா சுமதி வடிவில் எனக்கு என்னுடன் வாழ்கிறார் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. நிச்சயித்தபடி உறவினர்கள் நண்பர்கள் சூழ திருமணமும் செய்துகொண்டோம். இதற்கு எங்களுக்குப் பலர் உதவியாக இருந்தனர். அவர்களை என்னால் வாழ்வில் மறக்கவே முடியாது," என்று சேகர் கூறினார்.

'நம்பிக்கைதான் எங்களது மிகப்பெரிய வலிமை'

சுமதி - சேகர் திருமணத்திற்கு உதவிய மாற்றுத்திறனாளியான காமாட்சி பேசுகையில், "வாழ்க்கை என்பது சராசரி மனிதர்களுக்கே போராட்டமாக இருக்கும் வேளையில் எங்களைப் போன்றவர்களுக்கு எங்கள் உரிமைகளை, தேவைகளைப் பெறுவதற்காகவே பல்வேறு வாழ்வியல் போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது.

ஆனாலும் நம்பிக்கை மட்டும்தான் எங்களைப் போன்றவர்களுக்கு மிகப் பெரிய வலிமையை இன்றளவும் கொடுத்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு உதவி கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று இருந்தேன். அன்றுதான் சுமதியைச் சந்தித்தேன். அவர் தனது சூழலை என்னிடம் கூறினார்.

நானும் உடனடியாக சேகரிடம் இதுகுறித்து எடுத்துக் கூறி அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன். அவர்கள் இருவருக்குமே ஈர்ப்பு இருந்தது என்றாலும் பொருளாதாரரீதியாக சிரமங்கள் இருந்தன.

கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சுப்பிரமணியனிடம் இது பற்றிக் கூறினேன். உடனடியாக அவரால் இயன்ற அளவு திருமண சீர்வரிசை வாங்கிக் கொடுத்தார்.

அதற்கு ஒருபடி மேலாக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் திருமணத்திற்குத் தேவையான செலவுத் தொகையையும் திருமண மாங்கல்யத்தையும் அவரே எடுத்துக் கொடுத்தார்," என்று கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காமாட்சி

கடைசி நிமிடம் வரை கலங்கி நின்ற மணமகள்....

தொடர்ந்து பேசிய காமாட்சி, "கடந்த திங்கள்கிழமை கண்டாச்சிமங்கலம் கோவிலில் திருமணமும் நடந்தது.

திருமணம் நடைபெற 10 நிமிடம் வரை சுமதியின் முகத்தில் சந்தோஷமே இல்லை. 15 நாட்களுக்கு முன்புதான் அதே இடத்தில் நடைபெற இருந்த திருமணம் தடைப்பட்டதை நினைத்துக் கண்கலங்கினார்.

கவலைப்படாதீர்கள், அதேபோல் மீண்டும் நடக்காது என்று உறுதி அளித்தேன். அடுத்த ஓரிரு நிமிடங்களில் சேகர், தனது உறவினர்களுடன் அந்த இடத்திற்கு வந்தார். திருமணமும் இனிதே நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் திருமணம்

எங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரும் தொலைபேசி மூலமாக வாழ்த்துகளைக் கூறினார். வாய்ப்பிருந்தால் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் உடனடியாக திருமணம் முடிந்த கையோடு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றோம். அவரே நேரில் வந்து எங்களை அவர் அறைக்கு அழைத்துச் சென்று மலர் தூவி வாழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இருசக்கர வாகனத்தையும் உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடும் செய்தார். இதை எங்களால் மறக்கவே முடியாது" என்றார் நெகிழ்ச்சியுடன்.

எங்களது உரையாடல் முடிந்ததும் வயர் சேர் பின்னும் வேலைக்கு சேகர் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். மனைவி சுமதி அவரை இன்முகத்துடன் கையசைத்து வழியனுப்பி வைத்தார்.

திருமணம் முடிந்ததும், சங்கராபுரத்தில் நண்பர் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த சுமதி - சேகர் தம்பதி, தற்போது அதே ஊரில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: