இரண்டாவது டி20 போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமில்லை; அறிமுகமாகும் இருவர் யார்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று (2026 ஜூன் 28) நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மற்றும் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே என இரண்டு வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இந்தியாவின் இளம் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி முந்தைய போட்டிக்கான அணியில் சேர்க்கப்படாதபோது, பல கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பல கிரிக்கெட் நிபுணர்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த முடிவை ஆதரித்துப் பேசியிருந்தனர்.
அயர்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதன் பிறகு இந்திய அணியின் லெவன் தேர்வு குறித்து பல கேள்விகள் எழுந்தன. சமூக வலைதளங்களில் அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுடன், வைபவை சேர்க்காதது அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது என்றும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இளம் வயதிலேயே பெரும் புகழ் பெற்றவர்

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆண்கள் அணிக்காக விளையாடும் மிக இளம் வயது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெறுவதற்கு, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
தனது 13 ஆவது வயதிலேயே கிரிக்கெட் உலகில் முத்திரை பதித்த இவர், ஏற்கனவே பல சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது 15 வயதே ஆகும் வைபவை, கிரிக்கெட் உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் தனது 14 ஆவது வயதில் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அறிமுகமானார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் அறிமுகமாகியிருந்தால், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இள வயதில் களம் கண்ட வீரர் என்ற சாதனையைப் படைத்திருப்பார்.
இந்தச் சாதனை தற்போது சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. அவர் கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது 16 ஆவது வயதில் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடி இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
அதிரடி பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வைபவ் ஆரஞ்சு தொப்பியை வென்ற பிறகு, இந்திய அணியில் வைபவ் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பல முன்னணி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவரது திறமையைப் பாராட்டியிருந்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 48-க்கும் அதிகமாக இருந்தது, இது டி20 போட்டியின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷி 237 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை விளாசினார்; இதில் 5 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும்.
ஐபிஎல் குவாலிஃபையர்-2 சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், அணியின் ஆட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் மிகுந்த முதிர்ச்சியை வெளிப்படுத்திய வைபவ், நிதானமாக விளையாடி 31 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். ஆனால், அதன் பிறகு அடுத்த 16 பந்துகளிலேயே 46 ரன்களை அதிரடியாகக் குவித்து அசத்தினார். ஒட்டுமொத்தமாக 47 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த வைபவின் இந்த இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களும் அடங்கும்.

பட மூலாதாரம், @Vaibhavsooryava
அந்த வகையில், அவரது பேட்டிங் இதுவரை சிறப்பான 'ஸ்ட்ரைக் ரேட்'-ஐ வெளிப்படுத்தியிருப்பது மட்டுமின்றி, அவர் தொடர்ந்து சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இந்திய டி20 அணி மற்றும் 'இந்திய ஏ' அணியில் அவர் சேர்க்கப்பட்டபோது, அவரது அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

பட மூலாதாரம், @Vaibhavsooryava
சமீபத்தில், இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடிய வைபவ், 'லிஸ்ட் ஏ' 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதத்தை அடித்தார். வெறும் 11 பந்துகளில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
அந்தப் போட்டியில், வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து வைபவ் அதிரடியாக விளையாடினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























