வடகலை - தென்கலை: நூறாண்டுகளாக நீடிக்கும் பிரச்னைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்வு என்ன?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"காஞ்சிபுரம் கோவிலில் வரதராஜ பெருமாள் முன்பாகப் பிரபந்தம் பாடுவதற்கு தென்கலை பிரிவினருக்கு முழு உரிமை உள்ளது" என்று நவம்பர் 28 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 2022ஆம் ஆண்டு, "தென்கலை பிரிவினருடன் இணைந்து வடகலைப் பிரிவினரும் பிரபந்தம் பாடலாம்" என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லவிருப்பதாக வடகலை பிரிவு நிர்வாகி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் வடகலை-தென்கலை மோதல் முடிவுக்கு வருமா?

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் எனப்படும் ஸ்ரீதேவராஜ சுவாமி கோவிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக வடகலை வைணவர்களுக்கும் தென்கலை வைணவர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

கோவிலில் கடவுளுக்கு முன்பாக பிரபந்தங்களைப் பாடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளன. தென்கலை பிரிவு வைணவர்கள் தங்கள் குருவான மணவாள மாமுனியை துதிபாடும் 'ஸ்ரீசைலேச தயாபாத்திரம்' என்ற மந்திரத்தைக் கூறிவிட்டு பிரபந்தங்களைப் பாடுவது வழக்கம்.

வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்கள் குருவான ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்திப் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், 'யார் முதலில் பாடத் தொடங்குவது?' என இரு தரப்புக்கும் இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.

நெற்றியில் நாமம் போடும் தன்மையில் இருந்து இவர்களை அடையாளப்படுத்தும் வழக்கம் உள்ளது. யு (u) வடிவில் நாமம் போட்டுக் கொண்டால் வடகலை பிரிவினர் எனவும் ஒய் (y) வடிவில் நாமமிட்டுக் கொண்டால் தென்கலை பிரிவினர் எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

தனி நீதிபதி சொன்னது என்ன?

கடந்த 2022ஆம் ஆண்டு தென்கலை பிரிவினர் மட்டும் வாழி திருநாமம் மற்றும் பிரபந்தம் பாடுவதற்கு அனுமதியளித்து கோவிலின் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அதில், "1910ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி தென்கலை வழிபாட்டு மந்திரம் மட்டுமே ஓதப்பட வேண்டும்; முதல் இரண்டு வரிசைகளில் வடகலை பிரிவினர் அமரக்கூடாது; பிரபந்தம் பாராயணத்தின் முடிவில் 'மணவாள மாமுனிகள் வாழி' என்ற திருநாமம் மட்டுமே ஓதப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து வடகலை பிரிவு வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு மே 17 அன்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "கோவிலில் வழிபாடு செய்து பூஜை நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. மதம் சார்ந்த மரபு மற்றும் வழிபாட்டு உரிமைகளில் எவ்விதப் பாகுபாடும் காட்டக் கூடாது.

இரு பிரிவினர் இடையே நீடித்து வரும் மோதலால் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. முதல் இரண்டு வரிசைகளில் தென்கலை பிரிவும் அதன் பிறகு வடகலை பிரிவினரும் பக்தர்களும் அமர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும், "தென்கலை பிரிவினர் ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தை முதலிலும் பிறகு வடகலை பிரிவினர் ஸ்ரீராமானுஜ தயாபாத்திரத்தையும் பாட வேண்டும். பிறகு இருவரும் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாட வேண்டும். முடிவில் மணவாள மாமுனிகள் வாழி திருநாமத்தை தென்கலை பிரிவினரும் வேதாந்த தேசிகர் வாழி திருநாமத்தை வடகலை பிரிவினரும் பாட வேண்டும்" என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

'வடகலையின் உரிமையை மீறவில்லை'

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்கலை பிரிவு வைணவர்கள் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சௌந்தர் அடங்கிய அமர்வில் இதன் மீதான விசாரணை நடந்து வந்தது.

கடந்த 1910ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற தீர்ப்பு, 1963ஆம் ஆண்டு வெளியான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகியவை மத சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக, நீதிமன்றத்தில் வடகலை பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.

இதை தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், "காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினரின் உரிமையை (Mirasi Right) நிலை நிறுத்தி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, வடகலை பிரிவினரின் அடிப்படை உரிமையை மீறவில்லை என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் ஏற்கெனவே வந்துள்ளது" எனக் கூறியுள்ளனர்.

'தென்கலை பிரிவினருக்கு முழு உரிமை'

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்கீழ் தங்கள் உரிமையை தென்கலை பிரிவினர் வலியுறுத்தியதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "இந்திய அரசமைப்பின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு உரிமையை மீறுவது என்ற அடிப்படையில் முந்தைய தீர்ப்புகளை வடகலை பிரிவினர் கேள்விக்கு உட்படுத்தினர். இவை இந்த நீதிமன்றத்தால் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.

தென்கலை பிரிவினரின் உரிமையில் வடகலை பிரிவினர் தலையிட முயல்வதை, பல்வேறு ஆவணங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அந்த வகையில், காவல்துறை பாதுகாப்புடன் ஆணையைச் செயல்படுத்த உத்தரவிடப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், "ஸ்ரீதேவராஜ சுவாமி முன்பாக ஸ்ரீசைலேச தயாபாத்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், மணவாள மாமுனிகள் திருநாமம் ஆகியவற்றைப் பாடுவதற்கு காஞ்சியில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கு முழு உரிமை உள்ளது" எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

"வடகலை பிரிவினருக்கு இதன் மீதான உரிமை எதுவும் நிலைநாட்டப்படவில்லை" எனக் கூறிய நீதிபதிகள், "1910, 1915, 1963, 1969 ஆகிய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின்படி தென்கலை பிரிவினருக்கு முழு உரிமை உள்ளது" எனவும் கூறியுள்ளனர்.

தீர்ப்பு குறித்து வடகலை வைணவர்கள் சொல்வது என்ன?

"வடகலைக்குச் சொந்தமான கோவிலாக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். பூஜையில் அவர்களும் ஓர் அங்கமாக உள்ளனர்" எனக் கூறுகிறார், ஸ்ரீதாததேசிக திருவம்சஸ்தர் சபாவின் பொதுச் செயலாளர் சம்பத்.

"தென்கலைக்கு சேவையைக் கொடுத்ததால் கோவிலின் சம்பிரதாயத்தை மாற்றிவிடும் என்பதாக இதைப் பார்க்க முடியாது" என பிபிசி தமிழிடம் கூறிய அவர், நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.

"கோவிலில் சுவாமி புறப்பாடு செய்யும்போது முதலில் பாடுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது என்பதுதான் பிரச்னையாக உள்ளது. கோவில் நிர்வாகம் குறித்தோ, கோவிலில் உள்ள வேறு உரிமைகள் குறித்தோ எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார், ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.

"வடகலை பிரிவு வைணவர்களுக்கான கோவிலாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் இருந்தாலும் தென்கலைக்கு பாடுவதற்கு உரிமை கொடுக்கப்பட்டதால் அவ்வப்போது பிரச்னை எழுந்தது" என்கிறார் அவர்.

மேலும், தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து வடகலை பிரிவினர் உச்சநீதிமன்றம் வரை செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் டி.ஆர்.ரமேஷ் குறிப்பிட்டார்.

எந்த மொழிக்கு முக்கியத்துவம்?

இரு தரப்புக்கும் இடையிலான பிரச்னையை அலசி ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் கூறுகிறார், தென்கலை பிரிவைச் சேர்ந்த ஆச்சாரியார் ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் சில தகவல்களை அவர் தெரிவித்தார்.

"காஞ்சி கோவிலில் வைணவர் பிரிவில் இரண்டு குழுக்கள் உள்ளன. 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இரு பிரிவாக பிரிந்ததாகப் பேசப்படுகிறது. இரண்டு பிரிவினருக்கும் இடையே கருத்தியல் ரீதியாகச் சில முரண்பாடுகள் உள்ளதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

இதில் கலை என்பது மொழியைக் குறிப்பதாகக் கூறும் அவர், "வடகலை பிரிவு என்பது சமஸ்கிருதத்தையும் தென்கலை பிரிவு என்பது தமிழையும் குறிக்கிறது. வடகலை பிரிவினர் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தென்கலை பிரிவினர், ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.

இதே கருத்தை முன்வைத்த டி.ஆர்.ரமேஷ், "வடகலையின் குருநாதராகிய வேதாந்த தேசிகர், வடமொழியில் பாடல்களைப் பாடியுள்ளார். இவரை தென்கலை வைணவர்கள் ஏற்பதில்லை. வடகலை கோவில்களில் வேதாந்த தேசிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது பாடல்கள் பாடப்படுகின்றன" என்கிறார்.

'கேரளாவில் பிரச்னை இல்லை'

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தொடர்பாக 1850ஆம் ஆண்டில் இருந்தே பல்வேறு காலகட்டங்களில் வழக்கு நடந்து வருவதாகக் கூறும் தென்கலை பிரிவு ஆச்சாரியார் ஒருவர், "2018ஆம் ஆண்டு முதல் காஞ்சியில் வடகலை பிரிவினரின் மக்கள்தொகை அதிகரித்தது. அவர்களில் சிலர் முதல் இரண்டு வரிசையில் வருவோம் எனக் கூறியதால் பிரச்னை நீடித்தது" என்கிறார்.

"நாலாயிர திவ்ய பிரபந்தம் அடிப்படையில் 108 திவ்ய தேசங்கள் உள்ளதாகக் கூறுகிறோம். இவை ஆழ்வார்களால் பாடப்பட்ட இடங்களாக உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலும் ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவிலாக உள்ளது" என்கிறார், டி.ஆர்.ரமேஷ்.

"கேரளாவில் 108 திவ்ய தேசங்களில் 13 கோவில்கள் உள்ளன. அங்கு வடகலை, தென்கலை பிரச்னை இல்லை. அங்குள்ள மரபுப்படி நம்பூதிரிகள் பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று அவர் கூறுகிறார்.

வடகலை பிரிவினருக்கு ஐந்தாறு கோவில்கள் மட்டுமே உள்ளதாகக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "தென்கலை பிரிவுக்கு அதிகளவில் கோவில்கள் உள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் கோவில் ஆகியவை அதற்கு உதாரணங்களாக உள்ளன" எனக் கூறினார்.

"நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடும் சேவைக்கு தென்கலைப் பிரிவினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவர்களின் கோவில்களில் வேறு யாரையும் பாடுவதற்கு அனுமதிப்பதில்லை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வடகலை பிரிவினர் பாட முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதை கோஷ்டி எனக் கூறி மிகப்பெரும் உரிமையாக தென்கலை பிரிவினர் பார்ப்பதாகக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விவகாரத்தில் இரு தரப்புக்கும் பல்வேறு காலகட்டங்களில் சாதக, பாதகங்களுடன் நீதிமன்றத் தீர்ப்புகள் வந்துள்ளன" என்கிறார்.

"இரு தரப்பும் அமர்ந்து பேசினால் இது முடிவுக்கு வந்துவிடும். ஆனால், நூறாண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு கிடைக்கவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு