ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்: காஸாவில் அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Anadolu via Getty Images
- எழுதியவர், காத்தரின் ஹீத்வுட்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
காஸா போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வியாழனன்று அறிவிக்கப்பட்ட முதல் கட்ட உடன்பாடு, மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பாலத்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கும், இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவதற்கும், காஸாவிற்குள் உதவிகள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கான விவரங்கள் மற்றும் கால அவகாசம் இந்த திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
கடந்த செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2023 ஹமாஸ் தாக்குதல் நடத்தி இரண்டு ஆண்டுகள் ஆகின. அந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இந்த ஒப்பந்தம் ஒரு ஆரம்ப கட்டம் மட்டுமே, காஸாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய பல விவரங்கள் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும்.
டிரம்பின் திட்டத்தின் கீழ் காஸாவை யார் நடத்துவார்கள்?
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் உள்ளடக்கிய ஒரு "அமைதி வாரியத்தால்" மேற்பார்வையிடப்படும் பாலத்தீனிய தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு தற்காலிக இடைக்கால குழுவால் காஸா நிர்வகிக்கப்படும் என்று டிரம்பின் திட்டம் முன்மொழிகிறது.
டிரம்பின் குழு வெளியிட்ட திட்டத்தின் படி, பாலத்தீன அதிகார சபை "அதன் சீர்திருத்த திட்டத்தை முடித்தவுடன்" காஸாவின் நிர்வாகம் இறுதியில் அதனிடம் ஒப்படைக்கப்படும்.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காஸாவின் நிர்வாகத்தில் ஹமாஸுக்கு எதிர்காலத்தில் பங்கு இருக்காது.
ஹமாஸ் உறுப்பினர்கள் அமைதியான சகவாழ்வுக்கு உறுதியளித்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் அல்லது வேறு நாட்டிற்கு பாதுகாப்பாக செல்ல வழி வழங்கப்படும் என்று திட்டம் கூறுகிறது.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
காஸாவில் உள்ள மக்களுக்கு இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
லண்டனில் உள்ள ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) எனும் சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை வகுப்பாளர் ஹக் லோவாட், , போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது காஸா மக்கள் "இனி தங்கள் உயிருக்கு பயப்படக்கூடாது" என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்.
"மூன்று விஷயங்கள் - கொல்லப்படாமலும், இடம்பெயராமலும், பட்டினி கிடக்காமல் இருப்பதும் - காஸா மக்களுக்கு இந்த நேரத்தில் மூன்று மிக முக்கியமான அளவுகோல்கள்" என்று அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
"தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பிறகு, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியவுடன், அவர்கள் நிச்சயமாக, தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்," என்று லோவாட் கூறுகிறார்.
உண்மையில், காஸா மக்கள் இந்த செய்தியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.
காஸாவில் வசிக்கும் ஜுமா ரமலான் அபு அம்மோ பிபிசி நியூஸ் அரபு சேவைக்கு அளித்த பேட்டியில், " எங்கள் வீட்டின் இடிபாடுகளை முதலில் அகற்ற வேண்டும், அவற்றை அகற்றி எனது தாத்தா மற்றும் பாட்டியின் உடல்களை மீட்கப் போகிறேன்" என்றார்.
"அதன் பிறகு, நாங்கள் வீட்டை மீண்டும் கட்டத் தொடங்குவோம். கடவுள் விரும்பினால், நாங்கள் காஸா முழுவதையும் மீண்டும் கட்டியெழுப்புவோம், அது முன்பை விட சிறப்பாக திரும்பும்" என்றார்.
அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலடி நடவடிக்கையில் காஸாவின் பெரும்பாலான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அழிந்துவிட்டன.
காஸாவின் ஹமாஸ் நடத்தும் அரசாங்க சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, போரில் 67,000 க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் - 18,000 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். .
அதன் புள்ளிவிவரங்கள் பொதுவாக ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் நம்பகமானவை என்று கருதப்படுகின்றன.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
காஸாவுக்கான உதவிகள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
டிரம்பின் 20 அம்ச திட்டத்தில், ஆகஸ்ட் மாதம் ஐ.நா ஆதரவிலான நிபுணர்களால் பஞ்சம் உறுதிப்படுத்தப்பட்ட காஸா பகுதிக்கு உடனடியாக "முழு உதவி" அனுப்ப அனுமதிப்பதும் அடங்கும்.
இந்த (உதவிகளின்) அளவு "மனிதாபிமான உதவி தொடர்பான 19 ஜனவரி 2025 ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டவற்றுடன் ஒத்துப்போக வேண்டும்" என்று திட்டம் கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் 600 (உதவிப் பொருட்களை கொண்டு செல்லும்) லாரிகள் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் தினசரி குறைந்தபட்சம் 400 லாரிகள் வரும் என்றும், அதன் பிறகு இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் பாலத்தீனிய தரப்பை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், காஸாவில் உள்ள மக்களை சென்றடைய புகழ்பெற்ற சர்வதேச உதவி நிறுவனங்கள் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழல் இருக்க வேண்டும் என்று லோவாட் வலியுறுத்துகிறார்.
முந்தைய ஐ.நா தலைமையிலான உணவு விநியோக முறையை மாற்றிய சர்ச்சைக்குரிய காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்னவாகும் என்பதை டிரம்பின் திட்டம் குறிப்பிடவில்லை.
லோவாட் பிபிசியிடம் கூறுகையில், "கடந்த போர் நிறுத்தம் முறிந்ததில் இருந்து உதவித் தளங்களைச் சுற்றி பாதுகாப்பு சூழல் கணிசமாக மோசமடைந்துள்ளது என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.
ஒப்பந்தம் நிலைக்குமா?
இந்த உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலிருந்தும் காணப்பட்ட மிக உயர்ந்த முன்னேற்றமாகும்.
ஆனால் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டம் உண்மையில் ஒரு சில பக்கங்கள் மட்டுமே உடையது என்று ஜெருசலேமில் உள்ள பிபிசி நிருபர் டாம் பென்னட் சுட்டிக்காட்டுகிறார்.
இரு தரப்பினரும் தீர்க்க இன்னும் முக்கிய விசயங்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.
ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற முக்கிய இஸ்ரேலிய கோரிக்கை, அத்துடன் இஸ்ரேலிய (படைகளின்) திரும்பப் பெறுதலின் அளவு மற்றும் காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதற்கான திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
டிரம்ப் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த முடியும் என்று தான் நினைக்கிறேன் என்று லோவாட் பிபிசியிடம் கூறினார், ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது உறுதியாக இல்லை, ஏனெனில் இஸ்ரேலிய "சிவப்புக் கோடுகளை" கடக்க முடியாது.
"வெள்ளை மாளிகையுடனான தனது பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு நெதன்யாகு காஸாவில் இருந்து முழு இஸ்ரேலிய வெளியேற்றம் இருக்காது என்றும், பாலத்தீன அரசு இருக்காது என்றும் கூறினார்," என்கிறார்.
"திட்டத்தை செயல்படுத்துவதில் இவை வெளிப்படையாக இரண்டு பெரிய தடைகள், ஏனென்றால் இஸ்ரேல் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறாவிட்டால் திட்டத்திற்கான பாலத்தீனிய உறுதிப்பாட்டை பராமரிப்பது கடினம்," என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
டிரம்ப் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார்?
இந்த சமாதான முயற்சிகளில் உள்ள முக்கிய வேறுபாடு அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட ஈடுபாடு ஆகும். அவர் ஹமாஸ் மீது மட்டுமல்ல, இஸ்ரேல் மீதும் ஒரு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுத்துள்ளார் என்று ஜெருசலேமில் உள்ள பிபிசியின் ஹியூகோ பச்சேகா கூறுகிறார்.
இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது டிரம்பின் இன்றுவரையிலான மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். அக்டோபர் 10 வழங்கப்படவுள்ள உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசை அவர் விரும்புகிறார் என்ற உண்மையை அவர் ரகசியமாக வைத்திருக்கவில்லை.
லோவாட் கூறுகையில், "இஸ்ரேலிய அல்லது மத்திய கிழக்கு ராஜதந்திரத்தில், குறிப்பாக இஸ்ரேல்-பாலத்தீனிய ராஜதந்திரத்தில் அமெரிக்கா எப்போதும் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் கோட்பாட்டளவில், நிகரற்ற கட்டுப்பாடு கொண்டுள்ளது, அதை இஸ்ரேல் மீது பயன்படுத்த முடியும். டிரம்ப், உள்நாட்டு அரசியல் மற்றும் நிலைப்பாட்டின் காரணமாக, அந்த விஷயத்தில் குறிப்பாக நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்."
டிரம்ப் வரும் நாட்களில் எகிப்துக்கு பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அவரது பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்தில் பணியாற்றி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அவர் அங்கு செல்வது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








