ஜம்மு காஷ்மீரில் வெடிப்புச் சத்தம்; குஜராத், ராஜஸ்தான், பஞ்சாபில் மின் தடை - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, 'சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்' - விக்ரம் மிஸ்ரி பேசியது என்ன?
ஜம்மு காஷ்மீரில் வெடிப்புச் சத்தம்; குஜராத், ராஜஸ்தான், பஞ்சாபில் மின் தடை - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா - பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை மாலை சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அதனை தற்போது பாகிஸ்தான் மீறி வருவதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக தொடர் பதற்றம் நிலவிவந்தது. இந்த விவகாரத்தில் தாங்கள் செய்த மத்தியஸ்தத்தின்படி, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்தது. பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதனை உறுதிப்படுத்தின.

இந்தச் சூழலில், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனை அங்கிருந்த பிபிசி குழு உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தானின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுவதும் வெடிச்சத்தம் கேட்டது" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

குஜராத்தின் கட்ச் பகுதியில் சில டிரோன்கள் காணப்பட்டதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, "கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் இந்த சூழலை சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்

அதன் பிறகு, சண்டை நிறுத்தம் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தானில் மில்லியன்கணக்கான மக்கள் உள்ளனர், அனைவரின் நலனுக்காக இந்த சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டிரம்ப் மற்றும் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு