டிராவிஸ் ஹெட்: ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கனவை தகர்த்தது எப்படி?

பிரசுரிக்கப்பட்டது

டிராவிஸ் ஹெட்- இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்தக் கால ரிக்கி பாண்டிங் என நினைவுகூரப்படும் ஒரு ஆஸ்திரேலிய வீரர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது அபாரமான பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு மறக்க முடியாத ஒரு வெற்றியை தந்தவர் டிராவிஸ் ஹெட். இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் உலகக்கோப்பை கனவைக் கலைத்தவர் அவர்.

ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 137 ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் 'மேட்ச் ஆஃப் தி மேட்ச்' விருதையும் அவர் பெற்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார்.

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. பின்னர் அவர் போட்டிகளில் விளையாடி, நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து தனது பலத்தை வெளிப்படுத்தினார்.

முக்கியமான அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றியில் இவரது பங்கு முக்கியமானது. சேஸிங்கில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் அதிகபட்ச ஸ்கோரராக ஆனார். அரையிறுதியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகவும் இவர் தேர்வானார்

2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அப்போதைய ஆஸி அணியின் கேப்டன் ரிக்கி பாயிண்டிங்கின் ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் 2023 இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2003 இல் நடந்த போட்டியில் பாயிண்டிங் 140 ரன்கள் எடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை எட்ட பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆரம்பத்தில் விக்கெட் எடுத்தனர். 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆனால், அங்கிருந்து ஹெட், மார்னஸ் லபுஷேன் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இலக்கை நோக்கி சென்றனர். ஹெட் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

மைக் ஹஸ்ஸிக்கு பதிலாக சேர்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் டிசம்பர் 29, 1993 அன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்தார்.

ஆரம்பத்தில் இடது கை பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய உள்நாட்டுப் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடியுளளார். வலது கை ஆஃப் ஸ்பின்னர். இவர் தேசிய அணிக்கு வந்தபோதும், ஹெட் ஒரு மிட்பீல்டர் ஒரு பேட்ஸ்மேனாகவே இருந்துள்ளார்.

மைக்கேல் ஹஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்திற்கு யாரை கொண்டு வருவது என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு குழப்பத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு பலரும் பரீட்சித்து பார்க்கப்பட்டனர். முடிவில், டிராவிஸ் ஹெட் அந்த இடத்தை பூர்த்தி செய்யும் வீரராக உருவெடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு ஹெட் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில், 2016 டி20 உலகக் கோப்பைக்கு ஹெட் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் அவர் தேர்வாளர்களின் பார்வையில் இருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியில் டிராவிட் ஹெட் முக்கிய இடத்தைப் பிடித்தார். மிடில் ஆர்டரில் மட்டையால் ஜொலித்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், இவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக அவதாரம் எடுத்தார்.

2018 சாம்பியன்ஸ் டிராபியை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால் அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்தது மட்டுமல்லாமல் தனது சக பேட்ஸ்மேனான டேவிட் வார்னருடன் ஒரு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தார்.

இதற்குப் பிறகும், ஹெட் சில ஆண்டுகள் மிடில் ஆர்டரில் விளையாடினார். சில காலம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஹெட் பின்தங்கியே இருந்தார்.

இதன் காரணமாக, 2019 உலகக் கோப்பைக்கு தேர்வுக்குழு அவரைக் கருத்தில் கொள்ளவில்லை. அப்போது ஷேன் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஃபுல் ஃபார்மில் இருந்ததால் டிராவிஸ் ஹெட் ஓரங்கட்டப்பட்டார்.

அதில் இருந்து மீண்டு வந்து அடுத்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த டிராவிஸ் ஹெட், இறுதிப்போட்டியில் சதம் அடித்து 140 கோடி இந்தியர்களின் கவலையும் கலைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியில்...

2021-23 ஆஷஸ் தொடரில் டிராவிஸ் ஹெட் 357 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றதில் ஹெட் முக்கிய பங்கு வகித்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 163 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இவர் இடம் பெற்றார். ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த அற்புதமான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்திய அவர், இப்போது ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு மறக்க முடியாத வெற்றியைக் கொடுத்துள்ளார்.

டிராவிஸ் ஹெட் 63 போட்டிகளில் விளையாடி 60 இன்னிங்ஸ்களில் 2,256 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 152 ரன்கள்.

சிலிர்ப்பான ஒலிகள்: டிராவிஸ் ஹெட்

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிக்குப் பிறகு, டிராவிஸ் ஹெட், “இது ஒரு அருமையான நாள். இதில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.

"வீட்டில் உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதை விட விளையாடுவது நல்லது என்று நான் நினைத்தேன் (டிராவிஸ் ஹெட் விரவில் ஏற்பட்ட காயத்தால் முதல் நான்கு ஆட்டங்களை தவறவிட்டார், பின்னர் மீண்டும் அணிக்குள் வந்தார்).

இன்னிங்ஸின் போது நான் கொஞ்சம் கவலைப்பட்டேன். மார்னஸ் லாபுஷானே அசாதாரண இன்னிங்ஸ் விளையாடி அழுத்தத்தை தணித்தார். முன்னணியில் இருந்து அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)