You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு வீச்சு - உயிர் தப்பினார்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பொது நிகழ்வு ஒன்றில் புகைக்குண்டு என்று கருதப்படும் ஒன்று வீசப்பட்டது. ஆனால், அவர் காயம் ஏதுமின்றி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
வாகாயாமா என்ற இடத்தில் அவர் ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
ஒரு ஆள் பிரதமர் மீது ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே புகை கிளம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஒரு பெரிய சத்தம் கேட்டதாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி கூறினார்.
சந்தேகிக்கப்படும் நபர் என்று தோன்றும் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடிப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த நபரை கைது செய்துவிட்டதாக கூறும் போலீஸ் மேற்கொண்டு எதையும் தெரிவிக்கவில்லை.
ஜப்பான் நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. வெளியிட்ட ஒரு காணொளியில் மக்கள் அந்த இடத்தை விட்டு கூட்டமாக ஓடுவது தெரிகிறது.
பிரதமர் கிஷிடா ஒரு பிரச்சார நிகழ்விற்காக வாகாயாமாவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை சுற்றிப்பார்த்தபின் உரை நிகழ்த்தத் தொடங்கியபோது, இச்சமபவம் நிகழ்ந்துள்ளது.
தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதால், தனது திட்டமிட்ட அட்டவணையைத் தொடருவார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் வன்முறை தாக்குதல்கள் மிகவும் அரிதானவை. ஆனால், கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அரசியல்வாதிகளைச் சுற்றி பாதுகாப்பு குறித்த பதட்டம் நிலவுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்