You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தராகண்ட்: 41 தொழிலாளர்களை மீட்க ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆக வாய்ப்பு
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 14ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பே மீட்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், சற்று நேரத்தில் அவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஏன் தாமதமாகிறது? மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள தடங்கல் என்ன?
வெளியே இருந்து சுரங்கப்பாதைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் வரையிலும் 53மீ நீளம் கொண்ட 6 இன்ச் குழாய் கடந்த 20ஆம் தேதியன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இரவு பகலாக 9 நாட்கள் நடந்த மீட்புப் பணியில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. இந்த குழாய் ஊடாகவே உணவு, ஆக்சிஜன், குடிநீர் உள்ளிட்டவை தற்போது அனுப்பப்படுகின்றன.
இத்தகைய சூழலில் கடந்த 23ஆம் தேதி மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டின. 60 மீட்டர் இடிபாடுகளுக்கு ஊடாக இன்னும் ஒரு சில மீட்டர்களே துளையிட வேண்டி இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக துளையிடும் இயந்திரத்தில் (Auger) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, குழாய்களுக்கு ஊடாக பொருத்தப்பட்டிருந்த துளையிடும் இயந்திரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டி இருந்ததால் மீட்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)