சுழலில் மிரட்டிய மொயீன் அலி, டெத் ஓவரில் காப்பாற்றிய துஷார் - சேப்பாக்கத்தில் சிஎஸ்கே 'சூறாவளி' ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

பிரசுரிக்கப்பட்டது

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத் உடனான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் புயலைக் கிளப்பிய சிஎஸ்கே 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னௌ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

சென்னை அணியைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆடும் போட்டி இது. அதுமட்டுமின்றி, சொந்த மண்ணில் அவர்கள் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் கழித்து இந்த வெற்றி கைகூடியுள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதியோடு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

பவர் பிளேவில் லக்னௌவை பந்தாடிய கெய்க்வாட்

முதல் ஓவரை வீச வந்தார் கைல் மேயர்ஸ். ஆனால், ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடி வந்ததால் சிறிது தாமதம் ஆனது. இதேபோன்ற சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு, இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிகளிலும் நடந்தது. ஐந்து நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய முதல் ஓவரில் சென்னை 6 ரன்களை எடுத்தது.

ஆனால், ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில், வைட், நோ-பால் என்று வீசியதோடு, ரன்களையும் வாரி வழங்கினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்களைக் கொடுத்தார் ஆவேஷ் கான். அதைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரிலும் மேயர்ஸ் வீசிய பந்துகளில் 10 ரன்களை கெய்க்வாட், கான்வே கூட்டணி குவித்தது.

பவர் பிளே கட்டத்தின் 5வது ஓவரை வீசிய கௌதம், அந்த ஒரு ஓவரிலேயே 20 ரன்களைக் கொடுத்தார். அதே வேகத்தோடு பவர் பிளேவின் இறுதி ஓவரையும் ஆடிய சிஎஸ்கே அதிலும் 19 ரன்களைக் குவித்தது.

முதல் ஆட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த முறை பவர் பிளேவை ஓரளவுக்கு நன்றாகவே சென்னை அணி பயன்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

அதேவேளையில் லக்னௌ தரப்பில் பந்துவீசிய கௌதம், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரும் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டார்கள். களத்தில் தொடர்ந்து எதிர்பார்த்த பேட்டிங்கை வெளிப்படுத்திக்கொண்டிருந்த கெய்க்வாட், 8வது ஓவரின்போது 25 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். கெய்க்வாட் அரை சதம் அடித்ததைத் தொடர்ந்து கான்வேவும் தனது பங்குக்கு அந்த ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து க்ருனல் பாண்டியாவின் ஓவரை முடித்து வைத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டார். ஆனால், 10வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தை அடித்தபோது அதைத் துல்லியமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் மார்க் வுட். ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை எடுத்து வெளியேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே மார்க் வுட் பந்துவீச்சில் க்ருனல் பாண்டியா கைக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார் டெவோன் கான்வே. 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து வெளியேறினார் கான்வே. களத்தில் ஷிவம் துபேவும் மொயீன் அலியும் இருந்தார்கள்.

11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 120 ரன்களை எடுத்திருந்தது. ஷிவம் துபே ஆட்டத்தைத் தொடங்கிய முதல் ஓவரில் நிதானமாக நின்றுகொண்டிருந்தவர், 13வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 14வது ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார்.

அவர் 13, 14 ஆகிய ஓவரில் பந்துகளை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் பறக்க விடுவதுமாக இருந்ததன் மூலம், 3வது விக்கெட்டாக களத்திற்குள் தோனி அவரை எந்த நம்பிக்கையில் இறக்கினாரோ அதே நம்பிக்கையைத் தன் மீது துபே கொண்டிருந்தார் என்பதை அவரது பேட்டில் பட்டுப் பறந்த பந்துகள் காட்டின.

ஆனால், அதே ஓவரில் தொடர்ந்து துபே போட்ட ஷார்ட் பால்களை அவர் தவறாகக் கணக்கிட்டுவிட்டாரோ என்ற கேள்வியும், அவரது விக்கெட்டை பிஷ்னோய் எடுத்தபோது எழவே செய்தது. அவர் இதைச் செய்வார் என எதிர்பார்த்தே போட்ட பிஷ்னோய் அவர் திட்டமிட்டதைப் போலவே துபேவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அருமையான ஷார்ட் பாலை சரியாகக் கணிக்காமல் அடித்த துபேவை, அருமையாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் மார்க் வுட். துபே 16 பந்துகளில் 27 ரன்களை எடுத்து வெளியேறினார். களத்தில் இரண்டு இங்கிலாந்து பேட்டர்கள் இருந்தார்கள். பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி இருவருமே அதிக டி20 போட்டிகளை விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

தோனியின் சரவெடியுடன் நிறைவடைந்த சென்னை பேட்டிங்

மொயீன் அலியின் ஆட்டத்தில் அது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய மைதானமான சென்னை மைதானத்தில் அடுத்தடுத்து பவுண்டரிக்கு பந்தைத் தட்டிவிட்ட மொயீன் அலி, 12 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். அதில் மூன்று பவுண்டரிகளும் அடக்கம். சென்னை அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்திருந்தது.

ஆட்டம் தொடங்கியபோது 180 அல்லது 190 என்ற அளவில் சென்னை எடுக்கும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், கெய்க்வாட், கான்வே, துபே என்று அடுத்தடுத்து வந்த பேட்டர்களின் ஆட்டம், 219 வரை ரன் எடுக்கலாம் என்ற நிலைக்கு சென்னையை உயர்த்தியது.

இந்த நம்பிக்கை ஒளி தெரிந்துகொண்டிருந்த நேரத்திலேயே பந்துவீச வந்த பிஷ்னோய் மிக அழகாக, மிக முக்கியமான விக்கெட்டான மொயீன் அலியை அவுட்டாக்கி வெளியேற்றினார். மொயீன் அலி, 13 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகளை விளாசி, 19 ரன்களை எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸுடன் கூட்டணி சேர்ந்தார் அம்பத்தி ராயுடு.

சென்னை அணியிடம் பேட்டிங்கை பொறுத்தவரை தெளிவான திட்டம் உள்ளதைப் போல் தெரிந்தது. யார் வந்தாலும் அதிரடி ஆட்டத்தை இறங்கி வெளிப்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையைக் கடைபிடித்துக்கொண்டிருந்தார்கள்.

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, துபே, மொயீன் அலி என்று ஆடிய ஒவ்வொரு வீரருமே அடுத்தடுத்து இறங்கி ஆடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் 17வது ஓவரில் தனது முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால், சென்னை பேட்டர்கள் அப்படி இறங்கி அடிக்க முயன்று அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ஆவேஷ் கான் வீசிய 17வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்த பென் ஸ்டோக்ஸ், மூன்றாவது பந்தையும் அதேபோல் அடிக்க, அதை அழகாக கேட்ச் பிடித்தார் யஷ் தாக்கூர். ஆவேஷ் கான் பந்துவீச்சு இன்று சற்று மோசமாகத்தான் இருந்தது. நிறைய ரன்களைக் கொடுத்திருந்தார். இருப்பினும் மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில், முக்கியமான விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். 18வது ஓவரை 65 மீட்டர் தொலைவுக்கு அருமையான சிக்ஸ் அடித்துத் தொடக்கி வைத்தார் அம்பத்தி ராயுடு. மார்க் வுட் வீசிய அந்தப் பந்து வந்த வேகத்திற்கு ஏற்ப அதை ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக, விரைவாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு சிக்ஸ் அடித்தார்.

அம்பத்தி ராயுடு மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மார்க் வுட்டின் பந்தை சரியாகப் புரிந்துகொண்டு இறங்கி வந்து, லாங் ஆன் சிக்ஸ் ஒன்றை அடித்தார். சென்னை, 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்திருந்தது. இறுதி ஓவரின் முதல் பந்தில் மார்க் வுட் ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

அதற்கு அடுத்ததாக களமிறங்கினார் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கேப்டன் தோனி. இறங்கியதும் அடுத்தடுத்து இரண்டு அட்டகாசமான சிக்ஸர்களை அடித்தார். அதிலும் இரண்டாவது சிக்ஸரை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. மஞ்சள் சட்டை படையின் திருவிழாக் கொண்டாட்டம் தொடங்கியது.

மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் தனது 5000 ரன்களை சென்னை மைதானத்தில் பூர்த்தி செய்தார். களத்திற்குள் வந்தார், இரண்டு அருமையான சிக்ஸர்களை அடித்தார், அவர் எதிர்கொண்ட மூன்றாவது பந்தில் ரவி பிஷ்னோய் கைகளுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், அந்த இரண்டு சிக்ஸர்களுக்கான ரசிகர்களின் கொண்டாட்டக் கூச்சல் மட்டும் ஓய்ந்தபாடில்லை.

20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது.

சென்னை பவுலர்களை பதம் பார்த்த மேயர்ஸ்

218 ரன்களை இலக்காகக் கொண்டு லக்னௌ அணிக்காக முதலில் பேட்டிங் செய்ய வந்தார்கள் கைல் மேயர்ஸ் மற்றும் கே.எல்.ராகுல். தீபக் சாஹர் பந்துவீச்சில் முதல் ஓவரில் லக்னௌ அணி 7 ரன்களை எடுத்தது. அடுத்த ஓவரில், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில், கைல் மேயர்ஸ் தனது தரமான பேக் ஃபூட் கட் பவுண்டரி ஷாட்டை அடித்தார்.

நான்காவது ஓவரில் அளவுக்கு அதிகமாக நோ பால், வைட் என்று இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே வீசவே, அந்த ஒரு ஓவரில் மட்டும் மேயர்ஸ் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். துஷார் அந்த ஓவரில் இரண்டு நோ பால், மூன்று வைட் பந்துகளை வீசினார். அவர் வீசிய ஒரே ஓவரில் லக்னௌ 18 ரன்களைக் குவித்தது.

பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹர், துஷார் என்று அடுத்தடுத்து சென்னையின் பவுலர்களை கைல் மேயர்ஸ் பதம் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து ஓவர் முடிவில் சாவகாசமாக 73 ரன்களை எடுத்தது லக்னௌ. கைல் மேயர்ஸ் 21 பந்துகளிலேயே அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். மிடில் ஆர்டரில் விளையாடியபோது அவருடைய ஸ்டிரைக் ரேட் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. ஆனால், தொடக்க ஆட்டக்காரராக சிறந்த ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார்.

பவர் பிளேவின் இறுதி ஓவரை வீச வந்தார் மொயீன் அலி. அதுவரைக்கும் சென்னை வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த கைல் மேயர்ஸின் விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்களை எடுத்து வெளியேறினார்.

அவர் அரை சதம் அடித்த அதே ஓவரில், மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பி ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். பவர் பிளே முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, கைல் மேயர்ஸ்

மிட்செல் சான்ட்னர் ஏழாவது ஓவரை வீச வந்தார். அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட தீபக் ஹூடாவை இரண்டே ரன்களில் மென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து க்ருனல் பாண்ட்யா களமிறங்கினார். மொயீன் எட்டாவது ஓவரில் மீண்டும் லக்னௌவின் முக்கியமான விக்கெட்டான கே.எல்.ராகுலை வீழ்த்தினார். ஏற்கெனவே இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அவசியமற்ற ஒரு ஷாட்டை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். அதனால், 18 பந்துகளில் 20 ரன்களை எடுத்து ராகுல் வெளியேறினார்.

லக்னௌ அணிக்கு கொடுக்க வேண்டிய அதிர்ச்சி மொயீன் அலியிடம் இன்னும் பாக்கியிருந்தது என்பதை பத்தாவது ஓவரில் க்ருனல் பாண்ட்யாவின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் தெரிவித்தார். களத்தில் நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருந்தார்கள்.

மார்கஸ் ஒரு அட்டகாசமான சிக்ஸரை அடித்து, 12 ரன்களில் 17 ரன்களோடு களத்தில் நின்றுகொண்டிருந்தார். நிக்கோலஸ் பூரன் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் ஷாட்களை அடித்து 7 பந்துகளிலேயே 16 ரன்களை எடுத்து அதிரடியாக நின்றுகொண்டிருந்தார். இருவருமே சரிக்குச் சமமாக விளாசிக் கொண்டிருந்தார்கள்.

லக்னௌ 12 ஓவர் இறுதியில் 125 ரன்களை எடுத்திருந்தது. அந்த ஒரு ஓவரில் மட்டும் 15 ரன்களை எடுத்திருந்தது பூரன், ஸ்டாய்னிஸ் கூட்டணி. சிக்ஸ், ஃபோர் என விளாசிய நிகோலஸ் பூரன், ராஜ்வர்தன் ஹங்கர்கேஹரை கடுமையாகச் சோதித்துக்கொண்டிருந்தார்.

ஆனால், 14வது ஓவரை வீச வந்தார் மொயீன் அலி. ஆட்டத்தை விவரித்துக்கொண்டிருந்த வர்ணனையாளர் “மொயீன் அலி இருக்க பயமேன்!” என்று கூறினார். அது உண்மைதான். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே கச்சிதமான பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டான ஸ்டாய்னிஸை 18 பந்துகளில் 21 ரன்களுடன் வெளியேற்றினார்.

துஷார் தேஷ்பாண்டே: டெத் ஓவரில் காப்பாற்றிய 'இம்பாக்ட் ப்ளேயர்'

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

அடுத்ததாக ஆயுஸ் பதோனி இம்பாக்ட் பிளேயராக களமிறங்கினார். 15வது ஓவரில் நுழைந்தார் ‘ஜட்டு’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜடேஜா.

நிகோலஸ் பூரனுக்கு பந்துவீசினார் ஜடேஜா. ஜடேஜாவின் பந்தில் ஒன்று பூரன் அவுட்டாக வேண்டும், இல்லையேல் சிக்ஸ் போக வேண்டும். நடந்தது இரண்டாவது சம்பவம். ஜட்டுவின் பந்தில் அழகான ஒரு ஃப்ளாட் சிக்ஸரை அடித்தார் பூரன். பிறகு மீண்டும் ஐந்தாவது பந்தில் 97 மீட்டருக்கு அட்டகாசமாக மற்றுமொரு சிக்ஸரை அடித்து ஜடேஜா வீசிய பந்துகளில் சம்பவம் செய்தார் பூரன்.

இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டேவுக்கு மீண்டுமொரு ஓவர் கொடுக்கப்பட்டது. அவரை இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியதற்காக எவ்வளவுக்கு எவ்வளவு பவர் பிளேவின்போது மஞ்சள் சட்டைப் படை ஆத்திரப்பட்டிருக்குமோ அதற்கு நிகரான அளவுக்கு நிச்சயமாக 16வது ஓவரில் மகிழ்ச்சியும் அடைந்திருக்கும். ஏனென்றால், மிக மிக முக்கிய விக்கெட்டான நிகோலஸ் பூரனை அழகாக வெளியேற்றினார்.

துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் நிகோலஸ் பூரன் அடித்த ஷாட்டை அழகாக கேட்ச் பிடித்தார் பென் ஸ்டோக்ஸ். இது பென் ஸ்டோக்ஸ் பிடித்த இரண்டாவது கேட்ச். அடுத்ததாக கிருஷ்ணப்பா கௌதம் களமிறங்கினார்.

துஷார் தேஷ்பாண்டே

பட மூலாதாரம், BCCI/IPL

சென்னை அணியின் பவுலிங் டெத் ஓவரில் மிகவும் பலவீனமாக இருந்தது. 19வது ஓவரில் ஹங்கர்கேகர் பந்து வீசினார். அந்த ஓவரில் மூன்று வைட் பால்களை வீசினார். ஆனால், ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட வேண்டியது என்னவெனில், அந்த ஓவரில் சிங்கிள்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது. 9 பந்துகளை மொத்தமாக வீசி 7 ரன்களை கொடுத்திருந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட், துஷார் தேஷ்பாண்டேவின் ஃபீல்டிங்கிற்கும், இரண்டு பவுண்டரிகளை அருமையாகத் தடுத்து, 19வது ஓவரில் ரன் குவியாமல் தடுத்ததில் முக்கியப் பங்குண்டு. இறுதி ஓவரில் 28 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் லக்னௌ இருந்தது. ஹங்கர்கேகர் பந்துவீச்சைத் தொடர்ந்தார்.

அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளுமே வைட் மற்றும் நோ பால் ஆனது. இருப்பினும் அதை ஈடு செய்யும் வகையுல் ஆயுஷ் பதோனியை மிக அழகான கேட்ச் மூலம் கேப்டன் தோனி வெளியேற்றினார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

இம்பாக்ட் பிளேயராக கடந்த முறை பெரிதும் கேலி செய்யப்பட்ட துஷார் தேஷ்பாண்டே, அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் சொந்த மண்ணில் வாகை சூடக் காரணமாக அமைந்தார்.

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 205 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் 2023 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் தோனி, "பவுலர்கள் நோ பால், வைட் வீசுவதை முதலில் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாட வேண்டியிருக்கும். இது எனது 2வது எச்சரிக்கை," என்று கூறினார்.

சென்னை அணி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றிருந்தாலும்கூட, இன்றைய போட்டி ஒரு விஷயத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. பேட்டிங்கில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும் டெத் ஓவர் மற்றும் பவர் பிளே ஓவர்களின் பௌலிங்கில் சிஎஸ்கேவின் பலவீனம் எதிரணிக்குச் சாதகமாகிவிடுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: