You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொங்கு மண்டலத்தில் தொழில்துறை வளர்கிறதா? தேய்கிறதா? – பிபிசி கள ஆய்வு
கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்களின் நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
பிபிசி தமிழிடம் பேசிய பலதுறை சிறு, குறு தொழில்முனைவோர் கடுமையாக பாதித்துள்ளதாகவும், 50% தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பிலும், கோவை மற்றும் திருப்பூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான நூற்பாலைகள், இயந்திர மற்றும் வாகன தளவாடங்கள் தயாரிப்பு தொழில்சாலைகள், மோட்டார் பம்பு செட் மற்றும் கிரைண்டர் உற்பத்தி தொழில்கள் நடந்து வருகின்றன.
கோவையின் நூற்பாலைகளில் தயாரிக்கப்படும் நூலை வைத்து, இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூரில், துணியாக மாற்றப்பட்டு ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
உலகின் பல முன்னணி ஆடை நிறுவனங்களுக்காக திருப்பூரில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பின்னலாடை தொழிலை நம்பி, கோவையைப் போன்று திருப்பூரிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், வடமாநிலத்தவர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
கொங்கு மண்டலத்தின் சிறு, குறு தொழில்களின் உண்மையான நிலை என்ன? மத்திய, மாநில அரசுகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
இரும்பு தளவாட பொருட்கள் தயாரிப்பு, நூற்பாலை, மோட்டார் பம்பு செட் மற்றும் கிரைண்டர், பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று, தொழில்முனைவோரை சந்தித்தது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சாதகமான தொழில் கொள்கைகள் இல்லாதது, பருத்தி உற்பத்தி குறைவு, நிலையற்ற பருத்தி விலை போன்ற பல காரணங்களால் தொழில் பாதித்து, 50 சதவீத தொழிற்சாலைகள் பூட்டப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் நம்மிடம் தெரிவிக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)