காணொளி: மொராக்கோவில் இருந்து பல நூறு பேர் கடலில் நீந்தி ஸ்பெயினுக்குள் நுழைந்த காட்சி
நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவிற்குள் நுழைந்துள்ளதாக அந்தப் பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மொராக்கோவிலிருந்து 1,500-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு வந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையை தேசிய மனிதாபிமான அவசரநிலை என செயுட்டாவின் நிர்வாகி தெரிவித்தார்.
வியாழக்கிழமை புலம்பெயர்ந்தோர் நீந்தியும், காற்றடைத்த வளையங்கள் மற்றும் இதர மிதக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் செயுட்டாவை நோக்கி நீந்தி செல்வதை வீடியோ காட்சிகள் காட்டின. அதே நேரத்தில் மற்றவர்கள் எல்லை வேலியிலுள்ள ஒரு கதவு வழியாக ஓடி வந்தனர்.
செயுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாக இருக்கின்றன. ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய மையப்புள்ளியாக இவை நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, வியாழக்கிழமை அன்று 2,000 முதல் 3,000 பேர் செயுட்டாவிற்குள் நுழைந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன. ஆனால் சிவில் காவல் படை இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்று அவை கூறியுள்ளன.
ஸ்பெயினை ஷெங்கன் (Schengen) மண்டலத்திலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று இத்தாலி கோரியுள்ளது. இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி "எல்லைகளையும் குடிமக்களின் பாதுகாப்பையும் காக்க அசாதாரண நடவடிக்கைகளுடன் தலையிடத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், செயுட்டாவின் காட்சிகள் "அதிர்ச்சியளிக்கின்றன" என்றும், " ஐரோப்பாவின் எல்லைகளின் பாதுகாப்பிற்கு கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றம் ஒரு உறுதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்பதை இது காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்
முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



