You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாடி பில்டிங்கில் அசத்தும் சுமை தூக்கும் தொழிலாளி
"எனது வீடியோ வைரல் ஆகிவிட்டது எனக் கூறினார்கள். எனக்கு தெரியாது எனச் சொன்னேன். மக்கள் என்னைப் பற்றி தெரிந்துகொண்டு, பின்தொடர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு உத்வேகம் கிடைத்தது, எனக்கும் தான். தற்போது வெளிநாட்டிலும் பிரபலமாகிவிட்டேன்." என்கிறார் ரோஷன்.
பாடிபில்டர் ரோஷன் பஜன்கர் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள வருடா கிராமத்தில் வசிக்கிறார். இவர் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் பணியாளராக வேலை செய்கிறார்.
"அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரையிலான எனது வேலைகளை முடித்துவிட்டு பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன். இன்ஸ்டாகிராமில் ஏதாவது பதிவிட வேண்டும், என் தனிப்பட்ட பயணத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.
நான் எத்தனை வருடங்களாக வேலை செய்து வருகிறேன், எப்போது உடற்பயிற்சியைத் தொடங்கினேன், எப்போது ஜிம்மில் சேர்ந்தேன் என்பதை சொன்னேன். அந்த வீடியோவை எடுத்து மாலை 6 மணிக்கு பதிவேற்றினேன்.
எனக்கு அவ்வளவு மன உறுதி உள்ளது. இத்தனை வருடங்களாக கடினமாக உழைத்துக்கொண்டு, தொடர்ந்து ஜிம்முக்கும் செல்கிறேன். போட்டிகளிலும் கலந்துகொள்கிறேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நான் ஜிம்முக்கு சென்றபோது, எல்லோரும் என்னையே பார்த்தார்கள். உனது வீடியோ வைரல் ஆகிவிட்டது என்றார்கள்." என கூறுகிறார் அவர்.
ரோஷனின் ஒரு வீடியோ 40 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.
"நான் சிமென்ட் மூட்டைகளை சுமக்கிறேன். ஒரு மூட்டைக்கு 3 ரூபாய் 45 பைசா சம்பாதிக்கிறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு அதிகமாக சுமக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிப்பேன். மாத இறுதியில் எனக்கு சம்பளம் கிடைக்கும். நாள் முழுவதும் வேலை பார்த்த பிறகு சோர்வாக வீட்டுக்குச் செல்வேன். ஆனால், ஜிம்முக்குச் சென்றவுடன், சோர்வு மறைந்துவிடும். உடற்பயிற்சி செய்வதில் சக்தி கிடைக்கிறது, உடனடியாக புத்துணர்ச்சி பெற்றதாக உணர்கிறேன். பின்னர் மறுநாள் வழக்கம் போல் பணிக்குச் செல்கிறேன்.
2010–11 வாக்கில் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்போது ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தேன். எங்கள் பொருளாதார நிலை கடினமாக இருந்தது. நான் பள்ளிக்கு சென்றுவிட்டு அதன் பிறகு வேலைக்கு போவேன். 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்து பள்ளியை விட்டு வெளியேறினேன். பின்னர் வருமானத்திலும் ஜிம்மிலும் கவனம் செலுத்தினேன்." என தெரிவித்தார் ரோஷன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு