சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையா? மகளுக்கு கால் ஊனமாகி விட்டதாக காவலர் குற்றச்சாட்டு - நடந்தது என்ன?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

சென்னை காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு உறுப்புக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்.

இதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அன்று தலைமைச் செயலக வாசலில் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவரது புகாரை மருத்துவத்துறை மற்றும் காவல்துறை ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவலரின் புகாரில் உள்ளபடி, அரசு மருத்துவமனையில் தவறு நடந்ததா என்று விசாரணை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆவடி காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவரது 10 வயது மகளுக்கு மூன்று வயதான நிலையில், சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 2015-இல் குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்ததாகக் கூறுகிறார்.

ஐந்து ஆண்டுகள் அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை மட்டும் கொடுத்ததோடு, வேறு எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்.

''அக்டோபர் 2021ல் எங்கள் மகளுக்கு வலது காலில் அரிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்கு சிகிச்சை அளித்தார்கள். ஒரு சமயத்தில் ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்துவிட்டது.

இதற்காக தொடர் சிகிச்சை அளித்தார்கள். இதற்கிடையில், சிகிச்சையின்போது, குழந்தையின் எடை 26 கிலோவில் இருந்து 14 கிலோவாக குறைந்துபோனது. எங்கள் மகள் 80 நாட்கள் வரை கோமாவில் இருந்தாள்.

நாங்கள் எங்கள் மகளை இழந்துவிடுவோம் என்று நினைத்தோம். சிகிச்சையில் என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டபோது, எங்களுக்கு முறையான விளக்கத்தை மருத்துவர்கள் தரவில்லை. மருத்துவமனையிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கவில்லை,''என்று கூறுகிறார் கோதண்டபாணி.

ஒரு கட்டத்தில் விரக்தியில், தனது மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறி காவல்துறையில் புகார் அளித்தபோது, அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்.

''கடந்த வாரம் நான் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தியதால்தான் நான் அளித்த புகாருக்கு சிஸ்ஆர் கொடுத்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாக முதல்வர் தனிப்பிரிவு உள்பட பலருக்கும் மனு அளித்திருக்கிறேன்.

எந்த துறையிலிருந்தும் எந்த உதவியும் இல்லை. எங்கள் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் முன்வந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

குழந்தையின் வலது காலின் முன்பகுதி அறுவைசிகிச்சையில் நீக்கப்பட்டுள்ளது. எழும்பூர் மருத்துவமனையில் நேர்ந்த தவறான சிகிச்சையால் என் மகளின் கால் பகுதியில் ஊனம் ஏற்பட்டுள்ளது,'' என்று குற்றம்சாட்டுகிறார் கோதண்டபாணி.

நடனமாடுவதை மிகவும் ஆர்வத்துடன் செய்து வந்த தனது மகள் பிரதிக்ஷாவுக்கு வலது பாதத்தின் முன்பகுதி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறார் அவர்.

''என்னுடைய மகளுக்கு தற்போது 10வயது ஆகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்திருக்கிறாள். இதில் எழும்பூர் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால், அவளது காலின் முன்பகுதியை இழந்துள்ளாள் என்று அதன் பின்னர் நாங்கள் சென்ற மருத்துவமனைகளில் உறுதி செய்தார்கள்.

இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மகளுக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, என் மனைவி இளவரசி, மன நலம் பாதிக்கப்பட்ட நபராக மாறிவிட்டார். தவறு செய்தவர்கள் அரசு மருத்துவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை,''என்கிறார் அவர்.

மேலும், அரசு ஊழியரான தனக்கு அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மிகவும் மோசமானது என்கிறார். ''நான் பல நாட்களை மருத்துவமனையில் கழித்திருக்கிறேன். பல நாட்கள் உண்ணவும் முடியாமல் தவித்திருக்கிறேன். தற்போது என் மகள் நலமாக இருக்கிறாள். காலில் ஒரு குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இத்தனை வலிகளை நான் அனுபவித்ததற்குக் காரணம் மருத்துவர்களின் அலட்சியம்தான். அரசு ஊழியர் என்பதால்தான் பல காலம் மனு கொடுத்துவிட்டு அமைதி காத்தேன்.

தற்போது போராட்டம் நடத்தியதால்தான் என் புகார் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னைவிட, சாதாரண மக்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும்,''என்று வருத்தத்துடன் பேசினார் கோதண்டபாணி.

போராட்டம் நடத்திய அன்று குழந்தையை முதல்வர் தனிப்பிரிவில் நேரடியாக அதிகாரிகளிடம் காட்டுவதற்காக அழைத்துவந்ததாக கூறிய அவர், ''மனு கொடுக்கவந்துள்ளேன் என்று சொன்னபோது, எங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என்னை தடுத்தார்கள்.

நான் சாதாரண குடிமகனாகப் புகார் கொடுக்க வந்தேன் என்று சொன்னபோதும் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர்தான் மனுவை ஏற்று விசாரணை செய்கிறார்கள்,'' என்கிறார்.

தலைமைக் காவலர் கோதண்டபாணியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் பேசினோம். கோதண்டபாணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

''கோதண்டபாணியின் புகார் பதிவாகியுள்ளது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். எந்த மருத்துவருக்கும் அந்த குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் இல்லை.

அவர்கள் அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதா என்று ஆய்வு செய்து இந்த குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து கட்டாயமாக நடவடிக்கை எடுப்போம்,''என்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.

அரசு மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், கோதண்டபாணியின் புகாரை மருத்துவத்துறை ஏற்றுக்கொள்ளவில்லையா என்று கேட்டபோது, ''கோதண்டபாணி தற்போது அளித்துள்ள புகாரின் பேரில்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

முன்பு எப்போது புகார் கொடுத்தார் என்றும் விசாரிக்கிறோம். நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன், அவரின் பிரச்னையை புரிந்துகொண்டேன். அவர் ஒரு மருத்துவரைக் குற்றம் சாட்டுகிறார். அவரது புகார் மீது விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு நடந்திருப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அரசு மருத்துவமனை குறித்த தவறான பார்வையால் பல உண்மையான சம்பவங்களில் கூட அரசு மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துகொண்டார்கள் என்ற பிம்பம் ஏற்படுகிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்.

''தலைமைக் காவலர் கோதண்டபாணி தன்னுடைய மகளுக்கு தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டது என புகார் கொடுத்தபோதும் விசாரணை செய்யவில்லை என்கிறார். ஆனால் இதுபோன்ற சம்பவங்களில், புகார் கொடுத்தால் அந்த மருத்துவமனையில் ஒரு குழு விசாரணையை நடத்தவேண்டும் என்ற விதி உள்ளது.

அந்த குழுவின் விசாரணையில், மருத்துவர் மீது தவறா அல்லது நோயாளியின் குற்றச்சாட்டு நியாயமற்றதா என்று தெரியவரும். அந்த விதி பின்பற்றப்பட்டதா, ஒருவேளை அந்த குழுவின் அறிக்கையை கோதண்டபாணியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையா என்றும் தெரியவேண்டும். தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதால், புகார் நிராகரிக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் விரைவில் விடை கிடைக்கும்,''என்கிறார் ரவீந்திரநாத்.

பிபிசிதமிழிடம் பேசிய எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் உயர்அதிகாரி ஒருவர், காவலர் சொல்வது போல மருத்துவர்கள் தவறான சிகிச்சை எதுவும் தரவில்லை என்று மறுக்கிறார்.

''நெஃப்ராடிக் சின்டிரோம்(nephratic syndrome) என்ற நோய்குறிக்கான சிகிச்சைக்காக முதலில் குழந்தையை எங்கள் மருத்துவமனையில் 2015ல் அனுமதித்தார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தோம். ஒரு கட்டத்தில், இந்த குழந்தையின் உடலில் இருந்து புரதம் (protein) அதிகமாக வெளியேறிக்கொண்டே இருந்தது. அதற்கான பல கட்ட சிகிச்சைகளை அளித்தோம். ஆனால் ஒரு சிலருக்கு இந்த சிகிச்சையின்போது உடலில் ஒரு இடத்தில் ரத்தம் தங்கிவிடும். அது ஒரு பகுதியில் தங்குவதால், ரத்தஓட்டம் பாதிக்கும், பின்னர் அந்த பகுதி செயல் இழக்கும் அதை -'gangrene' என்று சொல்வார்கள். அதுதான் இந்த குழந்தைக்கு நடந்துள்ளது. நெஃப்ராடிக் சின்டிரோமுக்கான இந்த சிகிச்சையை பலருக்கும் அளிக்கிறோம். எல்லோருக்கும் இது நடைபெறுவதில்லை. ஒரு சிலரின் உடலுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், சிகிச்சை முறையை தவறு என்று சொல்லமுடியாது,''என்கிறார் அந்த அதிகாரி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: