You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடாளுமன்ற தேர்தல்: அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 96 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர்.
உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டமான இந்தத் தேர்தல் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆட்சியமைக்க மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 272 தொகுதிகளில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ வெற்றிபெற வேண்டியது அவசியம்.
இந்த தேர்தலில் வாக்களிக்க 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் தகுதியானவர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 791. இதேபோல், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து, 81 ஆயிரத்து 610.
மொத்தம் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குச்சாவடி அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள் என 1 கோடியே 50 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
நடப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்குள் புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடக்கின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும் மே 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)