மதுரை: இந்து, இஸ்லாமிய பெண்களை மணந்தவரின் இறுதிச்சடங்கு எப்படி நடந்தது தெரியுமா?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
கணவரின் உடலுக்காக அவரது இரண்டு மனைவிகளும் உரிமை கோரியதால், இந்து முறைப்படி சடங்குகளைச் செய்துவிட்டு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது ஏன் என்று விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(எ)அன்வர் உசைன். அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர் பிப்ரவரி 17ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.
தான் இந்துவாக இருந்த போது, இந்து மதத்தில் ஒரு பெண்ணையும் இஸ்லாமியராக மாறிய பின் இஸ்லாமிய மதத்தில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தார் பாலசுப்பிரமணியன்.
தனது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே அவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். எனவே இரண்டு மனைவிகளுமே அவரது உடலை பெற்று, அவரவர் மதத்தின் முறைப்படி இறுதி சடங்கு செய்ய உரிமை கோரியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, 30 நிமிடங்கள் இந்து முறைப்படி சடங்குகள் செய்யவும், பிறகு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
நிீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன கூறியது?
முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (கடந்த 1988-ஆம் ஆண்டு கமுதி அருகே உள்ள பேரையூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி(55) என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு பவானி என்ற ஒரு மகள் உள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் பாலசுப்பிரமணியன்.
பின், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய அவர், 1999-ஆம் ஆண்டு இஸ்லாமிய பெண்ணான சையது அலி பாத்திமாவை திருமணம் செய்துள்ளார். இருவரும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்மா காலனியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய விவரம், 2016- ஆம் ஆண்டு முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தான் தெரிய வந்ததாக அவரது முதல் மனைவி சாந்தி கூறுகிறார். நீதிமன்றத்தில் தனது பெயர் அன்வர் உசேன் என மாற்றிக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார் பாலசுப்பிரமணியன்.
2016ம் ஆண்டு வரை தனது முதல் மனைவியுடன் விவாகரத்து நடைபெறவில்லை என்ற விவரம் தங்களுக்கு தெரியாது என்று இரண்டாவது மனைவியின் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உயிரிழந்தார்.
தகவல் தெரிந்த உடன், அவரது முதல் மனைவியின் மகள் பவானி அவரது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவரது இரண்டாவது மனைவி சையது அலி பாத்திமா அவரை பார்க்க அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவர் இறந்தவுடன் உடலை காரைக்குடிக்கு எடுத்துச் சென்று இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற முதல் மனைவி சாந்தி இந்து முறைப்படி தனது கணவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி உடலைக் கேட்டிருக்கிறார்.
இது மதம் சார்ந்த பிரச்சனையை உருவாக்கும் என்பதால் இறந்த அரசு ஓட்டுநரின் உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது என காவல்துறையினர் பிபிசி தமிழிடம் கூறினர்.

'கணவரை விவாகரத்து செய்யவில்லை'
தங்களுக்கு விவாகரத்து நடக்கவில்லை என்று கூறுகிறார் பாலசுப்பிரமணியனின் முதல் மனைவி சாந்தி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ எனது கணவருடன் 5 ஆண்டுகள் வாழ்ந்தேன். பிறகு அவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்த போதே நீதிமன்றத்தின் உத்தரவுபடி எனது கணவர் ஜீவனாம்சம் வழங்கி வந்தார். மகளுக்கு திருமணம் நடந்த பின் அவருக்கான ஜீவானம்சத்தை நிறுத்தி எனக்கு மட்டும் மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகை வழங்கி வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்தபொழுது அங்கு சென்று அவரது உடலை கேட்டால் எனது கணவர் பாலசுப்பிரமணியன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, இஸ்லாமியப் பெண்ணை திருமண செய்து வாழ்ந்திருக்கிறார். எனவே நாங்கள் அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி ஜமாத் வழியாக அடக்கம் செய்வோம்", எனக் கூறினர்.
தனது கணவரின் உடலைப்பெற்று சொந்த ஊரில் இந்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என சாந்தி கோரியுள்ளார். சையது அலி பாத்திமா தரப்பினர் உடலை தர மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உடலைப் பெற வேண்டி வழக்கு தொடர்ந்தார் சாந்தி.
“நீதிபதி எனது கணவரின் உடலுக்கு 30 நிமிடம் இந்து முறைப்படி சடங்கு செய்ய அனுமதி வழங்கித் தீர்ப்பு அளித்தார். அதன்படி காரைக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் எனது மகள், உறவினர்களுடன் சென்று இறுதி மரியாதை செய்து உடலை ஜமாத்திடம் ஒப்படைத்து வந்தேன்", என்றார்.
30 நிமிடம் சடங்கு செய்ய அனுமதி
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, சாந்தி தரப்பு வழக்கறிஞர் மேலும் சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
“முதுகுளத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவருக்குமான வழக்கில் விவாகரத்து அளிக்கப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து சாந்தி பரமக்குடி கூடுதல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விவாகரத்து ரத்து செய்யப்பட்டது. சாந்தியின் கணவர் இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார்."
"சாந்தி சார்பில் உடலைப்பெற வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தோம். எதிர் மனு தாரர்கள் தங்களிடம் உடலை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை பிப்ரவரி 18ஆம் தேதி அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உயிரிழந்த பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் இஸ்லாமிய மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு இருக்கிறார், முதல் மனைவி விருப்பப்படி இந்து முறைப்படி 30 நிமிடங்கள் சடங்கு செய்துவிட்டு இஸ்லாமிய ஜமாத்தினரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு வழங்கினார்.” என்றார்.

'விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம்'
முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகவில்லை என்ற தகவல் தெரியாது என்று காரைக்குடி ஜமாத் செயலாளர் ஆர். அலி மஸ்தான் தெரிவிக்கிறார்.
அவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, “பாலசுப்பிரமணியன் முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்டதாக தவறான தகவல் அளித்து சையது அலி பாத்திமாவை 1999- ஆம் ஆண்டு இரண்டாவதாக மணமுடித்துள்ளார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டுதான் முதல்மனைவியுடன் விவாகரத்து ஆகவில்லை என்பது பாத்திமாவிற்கு தெரிய வந்தது” என்றார்.
உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இன்று அவரது உடலுக்கு முதல் மனைவி மரியாதை செலுத்திய பிறகு அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ததாக தெரிவித்தார்.
அரசு சார்பில் அவருக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை பெறுவது குறித்து இரண்டு தரப்பினரும் பேசி முடிவு செய்யப்படும், அல்லது நீதிமன்றத்தை நாடித் தீர்வை பெறுவார்கள் என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



























