மகளிர் உரிமைத் தொகை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறலா?

- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பேசிய நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை முதல்வர் மீறி விட்டதாக அதிமுக சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி காலமான நிலையில், அவரது தொகுதியாக ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், திமுக கூட்டணி சார்பில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் திமுக, அதிமுகவுக்கு இடையே தான் நேரடி போட்டி காணப்படுகிறது. திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி விரும்புகிறது. அதேநேரத்தில், தேர்தல் களத்தில் மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் தனது தலைமையை நிரூபித்துக் காட்ட வேண்டி ஈரோட்டில் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இடைத்தேர்தலையொட்டி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மகளிர் உரிமைத் தொகை பற்றிய வாக்குறுதி
இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தனது பிரச்சாரத்தின்போது, “நீட் தேர்விற்கு உரிய மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஆளுநரோ, மத்திய அரசோ இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்னுடைய காலத்தில் நீட் தேர்வு விலக்கு பெறவேண்டும் என்பது ஆசை. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவருவது தொடர்பாக பேசிய முதல்வர், “ 85 சதவீத பணிகளை நிறைவேற்றியுள்ளோம். இன்னும் பணிகள் மிச்சம் உள்ளன, இல்லையென்று சொல்லவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டு தேவையில்லை. இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று மிச்சமிருக்கிறது. அதை நான் மறக்கவில்லை. எதிர்கட்சி தலைவர், மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கான உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினோம். நிதி நிலைமையை முன்னர் இருந்தவர்கள் ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம். வரும் மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி நிலை அறிக்கையில் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படும்” என்று பிரசாரத்தின்போது கூறினார்.

பட மூலாதாரம், Inbadurai
முதல்வருக்கு எதிராக அதிமுக புகார்
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான ஐ.எஸ்.இன்பதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “ இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவித்து வழங்கப்படும் என்று பிரசாரம் செய்துள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு உறுதிமொழி அளிப்பதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது.
தனது புகார் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இன்பதுரை, “ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கான உரிமை தொகையை மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவித்து, கொடுப்போம் என்று கூறியது விதிமீறல். நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது புதிய அறிவிப்பை வெளியிடுவது தவறு.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதி குறித்துதான் பேசுவதாக முதல்வர் கூறினால், அது மோசடியாகும். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் உரிமை தொகையை கொடுப்பதாக கூறியவர்கள் 21 மாதங்களாக கொடுக்காமல், இப்போது கொடுக்க போவதாக கூறுவது விதி மீறல்தான். தற்போது இதனை சொல்வதற்கான அவசியம் என்ன? மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார். பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சம் குறித்து முன்னரே அறிவிப்பது என்பது உரிமை மீறல் ஆகும். மேலும், அது சட்டமன்றத்தின் பிரத்யேக உரிமையில் தலையிடுவது ஆகும். அந்த வகையிலும் இது தண்டனைக்குரியதுதான்” என்றார்.

பட மூலாதாரம், Facebook/Constandine Ravindra
திமுக கூறுவது என்ன?
அதிமுகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து திமுக செய்தித் தொடர் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்டதைதான் முதல்வர் சொன்னாரே தவிர புதிதாக ஈரோடுக்கு என்று எதையும் அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகையை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும்போது அது தொடர்பாக விளக்கமளிப்பதில் என்ன தவறு?
ஈரோடுக்கு பாலம் அமைப்பேன், ஈரோடு தொகுதிக்கு எதாவது செய்வேன் என்று கூறுவதுதான் தவறு. எந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறதோ அந்த தொகுதிக்கோ, அந்த பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கோ பலனளிக்கக் கூடிய வகையில் புதிதாக திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பும்போது, அது குறித்து பதிலளித்துள்ளார்". எனவே, இது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் வராது என்றார்.
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியை பிபிசி சார்பில் தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்டபோது, “நாங்கள் புதிதாக எதையும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைப் பற்றிதான் மீண்டும் கூறினோம் என்று திமுக தரப்பில் கூறலாம். அதேவேளையில், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி இது புதிய வாக்குறுதிதான் என்று அதிமுக சார்பில் வாதிடலாம். விதிமீறலில் வருமா வராதா என்பதை தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்க முடியும்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































