ஜெய்ஸ்வாலின் 'மரண அடியால்' சிஎஸ்கேவுக்கு ஆபத்தாக மாறிய ராஜஸ்தான் ராயல்ஸ்

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

அடியா இது…ஒவ்வொரு ஷாட்டும் மிரட்டல்.. ஐபிஎல் டி20 தொடரில் இதுபோன்ற ஆட்டத்தைப் பார்த்து வெகுநாளாகிவிட்டது. ஜெய்ஸ்வாலின் அசுரத்தனமான பேட்டிங்கையும், ஷாட்களையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார்கள் வர்ணனையாளர்கள்.

காயம்பட்ட சிங்கம் வேட்டையாடுவது போல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஜெய்ஸ்வால் வதம் செய்துவிட்டார் என்றே கூறலாம்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 13 பந்துகளில் அரைசதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

இவரது ஆட்டம் மும்பைக்கும் சிஎஸ்கேவுக்கும் ஆபத்தாகி இருக்கிறது. அது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

ஜெய்ஸ்வாலின் சாதனையைப் பற்றி பேசும் சமயத்தில் யஜுவேந்திர சாஹலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்துவிட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரு வீரர்கள் நேற்று முக்கிய மைல்கல்லை எட்டினர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவர்களில் அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இமாலய வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது எனச் சொல்வதைவிட, ஜெய்ஸ்வால் பேட்டிங்கிற்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும். ஜெய்ஸ்வாலின் ஃபார்மைப் பார்த்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் நேற்று கலக்கத்துடனே பந்துவீசினர்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

தெறிக்கவிட்ட முதல் ஓவர்

கொல்கத்தா பந்துவீச்சாளர்களை கதறவிட்ட ஜெய்ஸ்வால், ராணா வீசிய முதல் ஓவரிலேயே இரு சிக்ஸர்கள், 2பவுண்டரிகள், 2ரன்ககள், அடுத்து ஒருபவுண்டரி( 6,6,4,4,2,4 ) என 26 ரன்களைச் சேர்த்து மெய்சிலிர்க்க வைத்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜெய்ஸ்வால் விளாசல் புயலில் சிக்கி சர்துல் தாக்கூரும் சின்னாபின்னமாகினார், அவரின் ஓவரில் 3 பவுண்டரி அடித்து, 13 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் எட்டி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றார்.

ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் கேஎல் ராகுல் 2018ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராகவும், கம்மின்ஸ் மும்பை அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் அடித்ததுமே சாதனையாக இருந்தது. அதை ஜெய்ஸ்வால் முறியடித்து, 13 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாற்றை திருத்தி அமைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை 21 வயதான ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதற்கு முன் 12 பந்துகளில் யுவராஜ் சிங்(2007) கிறிஸ் கெயில்(2016), ஹஸ்ரத்துல்லா ஜஜாய்(2018) ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர்.

நிதிஷ் ராணா ஓவரில் ஜெய்ஸ்வால் சேர்த்த 26 ரன்கள் என்பது, ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். அதிலும் முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன்ஸ் ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

சதம் முக்கியமல்ல ரன்ரேட்தான்

ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் கூறுகையில் “ சிறப்பாக பேட் செய்ய வேண்டும் என்று எப்போதுமே நினைப்பேன். நான் நினைத்தபடி ஆடினேன். நாங்கள் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்துமே நாம் நினைத்தபடி சரியாக நடந்துவிடாது, ஆனால், என்னால் முடிந்ததை சரியாக வழங்க வேண்டும். செயல் மிகுந்த முக்கியம்.

நான் சிறப்பாக தயாராகி இருக்கிறேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். அணியை வெற்ற பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஒவ்வொரு ஷாட்களையும் ஆடுவேன், சதம் அடிப்பது என் நோக்கமல்ல, நிகர ரன்ரேட்டை உயர்த்துவதுதான் குறிக்கோளாக இருந்தது. அதுவும் நடந்தது. பட்லர் ரன்அவுட்பற்றி யோசிக்காதே, உன்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடு என சாம்ஸன் நம்பிக்கை அளி்த்தார்” எனத் தெரிவித்தார்.

3வது இடத்தில் ராஜஸ்தான்

ஜெய்ஸ்வாலின் அதிரடியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 12 ஆட்டங்களில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அடுத்தார்போல் 0.633 என்று வலுவாக இருக்கிறது. 2வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட் 0.493 என்றுதான் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகள் வைத்திருந்தாலும், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.255 என்றுதான் இருக்கிறது.

ப்ளேஆஃப் சுற்றுகள் கடைசி நேரத்தில் நிகர ரன்ரேட்டில்தான் முடிவு செய்யப்படுகின்றன. ஆதலால், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் அடுத்து இரு போட்டிகளில் வெல்வது அவசியம். ஒருவேளை ராஜஸ்தான் அணி தனது அடுத்த 2 ஆட்டங்களில் வென்றால் 16 புள்ளிகள் பெற்று வலுவான நிகர ரன்ரேட்டில் ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு சரிந்துவிட்டது. இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே கொல்கத்தா அணிக்கு இருக்கிறது, அந்த இரண்டிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள்தான் பெற முடியும். நிகர ரன்ரேட்டும் தற்போது மைனஸ் 0.357எனக் குறைந்துவிட்டது. அவ்வாறு 14 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட் சிறப்பாக வைத்திருந்தால்கூட, ப்ளே ஆஃப் கனவு என்பது, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, புள்ளிகளைப் பொறுத்துதான் கொல்கத்தாவுக்கு அமையும்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

சாஹல் புதிய சாதனை

ஜெய்ஸ்வால் மட்டும் நேற்று சாதனை படைக்கவில்லை, சுழற்பந்துவீச்சாளர் யஜூவேந்திர சாஹலும் புதிய மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை சாஹல் பெற்றார்.

143 போட்டிகளில் விளையாடிய சாஹல், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆட்டத்தில்கூட கொல்கத்தா அணியின் சரிவுக்கு காரணமாக இருந்த சஹல், 4ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழத்தினார். இந்த ஐபிஎல் சீசனில் 3வது முறையாக 4விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தியுள்ளார். ஒரு சீசனில் 3 முறைக்கு அதிகமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் சாஹல் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஆட்டத்தில் டாஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றபோதே, கேப்டன் சஞ்சு சாம்ஸன் கண்களில் ஒருவிதமான வேட்கை காணப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி அவசியம், வெற்றி பெற்றே தீருவோம் என்ற தீர்மானத்தோடு ராஜஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர்.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர்களின் பீல்டிங் அற்புதமாக இருந்தது, கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அடித்த பல ஷாட்களை பவுண்டரிக்கு செல்லாமல் பந்துகளை பாய்ந்து தடுத்தனர். குறிப்பாக ஜேஸன் ராய்க்கும், நிதிஷ் ராணாவுக்கும் ஹெட்மெயர் பிடித்த கேட்சுகள் அற்புதமானவை. இது தவிர ஜாஸ் பட்லர், ஜூரேல், ஜெய்ஸ்வால் என பீல்டிங்கில் பட்டையக் கிளப்பி 10 ரன்களுக்கும் மேல் மிச்சப்படுத்தினர்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

ஜெய்ஸ்வால், சாம்ஸன் துவம்சம்

150 ரன்களை குறைந்த ஓவர்களில் அடைய வேண்டும் என்ற நோக்கில் ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். யாரும் எதிர்பாரா வகையில் நிதிஷ் ராணா முதல் ஓவரை வீசினார். ஜெய்ஸ்வாலின அசுரத்தனமான ஃபார்முக்கு தீணி போடும் வகையி்ல் ராணா பந்துவீச்சு இருந்தது. முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் என 26 ரன்களைச் சேர்த்தார்.

2வது ஓவரில் பட்லர் ரன் ஏதும் சேர்க்காமல் துரதிர்ஷ்டமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். பட்லரும் நேற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்திருந்தால், கொல்கத்தா அணிக்கு சேதாரம் கடுமையாக இருந்திருக்கும், ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி வென்றிருக்கும்.

கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சு நேற்று எந்தவிதத்திலும் ஜெய்ஸ்வாலையும், சாம்ஸனையும் கட்டுப்படுத்தவில்லை. ஜெய்ஸ்வாலின் காட்டடியைப் பார்த்த கொல்கத்தா வீரர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன், ஜெய்ஸ்வால் அதிரடிக்கு ஒத்துழைத்து ஆடி, வாய்ப்புகளை வழங்கினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்களைச் சேர்த்து, பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வாலோடு சேர்ந்து சாம்ஸனும் ஷாட்களை விளாச, 8.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது.

150 ரன்களை டிபெண்ட் செய்துவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் இருவரின் அதிரடியைப் பார்த்து மிரண்டுவிட்டனர். அதிலும் ஜெய்ஸ்வாலுக்கு எப்படிப் பந்துவீசுவது, எப்படி போட்டாலும் அடிக்கிறாரே என்று கையைப் பிசைந்தனர்.

கொல்கத்தா வீரர்கள் நேற்று மனம் தளர்ந்து, குழப்பத்தில் இருந்தார்கள் என்பது சிறந்த உதாரணத்தைக் கூறலாம். சுனில்நரேன் வீசிய பந்தை சாம்ஸன் தூக்கி அடிக்க உயரத்தில் சென்றது, பந்தை கேட்ச் பிடிக்க சுனில் நரேன், ராணா, விக்கெட் கீப்பர் குர்பாஸ் ஆகியோர் இருந்தும், கேட்சை நரேன் கோட்டைவிட்டார். இதன் மூலம் கொல்கத்தா அணியினர் தெளிவான மனநிலையில் இல்லை என்பது தெரிந்தது.

ஜெய்ஸ்வால் 2வது சதத்தை அடிக்க வாய்ப்புகளை சாம்ஸன் ஏற்படுத்திக் கொடுத்து, ஸ்ட்ரைக்கை விட்டுக்கொடுத்தார். ஆனால், கடைசிவரை ஜெய்ஸ்வாலால் சதம் அடிக்கமுடியவில்லை, சாம்ஸனும் அரைசதம் அடிக்க முடியவில்லை. 13.1ஓவர்களில் ராஜஸ்தான் அணி 150ரன்களை எட்டி அபார வெற்றி பெற்றது.

ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களுடனும்(5 சிக்ஸர், 12 பவுண்டரி), சாம்ஸன் 48ரன்களுடனும் (29பந்துகள், 5சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

“நான் வேடிக்கைதான் பார்த்தேன்”

வெற்றிக்கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ நான் ஏதும் செய்யவில்லை, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஜெய்ஸ்வாலுக்கு கொடுத்து ஆட்டத்தை ரசித்தேன். பவர்ப்ளே ஓவர்களை ஜெய்ஸ்வால் நன்றாகப் பயன்படுத்துகிறார், சிறப்பாக ஆடுகிறார். சாஹலுக்கு லெஜெண்ட் டேக் கொடுக்கும் சரியான நேரம், பெருமையாக இருக்கிறது. டெத் ஓவர்களில் சஹலிடம் எந்த வார்த்தையும் பேசாமல் பந்தைக் கொடுத்துவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார். இன்னும் எங்களுக்கு 2 காலிறுதி ஆட்டங்கள்உள்ளன, அழுத்தம் எங்களைவிட்டு செல்லவில்லை, ஒவ்வொரு ஆட்டமும் இனி முக்கியம். பட்லர் தனது விக்கெட்டை ஜெய்ஸ்வாலுக்காக விட்டுக்கொடுத்தபோதே எங்கள் அணியின் சூழலை அறிந்திருப்பீர்கள்” எனத் தெரிவித்தார்.

ஜெய்ஸ்வாலுக்கு புகழாரம்

ஜெய்ஸ்வால் நேற்று பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோதே அவருக்கு ட்விட்டரில் பாராட்டு மழை குவிந்தது. சிஎஸ்கே அணி தனது ட்விட்டரில் “ யெஷ், யெஷ் வி ஜெய்ஸ்வால்”எனப் பாராட்டி இருந்தது.

கொல்கத்தா நைடர் ரைடர்ஸ் அணி ட்விட்டரில் “ ஜெய்ஸ்வாலின் இரவாக இருக்கிறது, அருமையாக விளையாடுகிறீர்கள்” எனத் தெரித்திருந்தது. இதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தது.

வீரேந்திர சேவாக் தனது ட்விட்டரில் “ இந்த சிறுவன் ஸ்பெஷல். இவரின் ஆட்டம் முழுவதையும் ரசித்துப் பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட பாராட்டில் “ஸ்பெஷல் ஆட்டம், ஸ்பெஷல் ப்ளேயர், தலைவணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

லசித் மலிங்கா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ ஜெய்ஸ்வால் எனக்குப் பிடித்த இந்திய பேட்ஸ்மேன். விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

வர்ணனையாளர் ஹர்சா போக்லே தனது ட்விட்டரில் “ நான் பார்த்தவரையில் ஜெய்ஸ்வாலின் பேட்டிங் செய்த 3 ஓவர்கள் மிகுந்த ட்ராமட்டிக்காக இதுதான் இருந்தது.முழுமையான ஸ்டார்” எனத் தெரிவித்திருந்தார்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ட்விட்டரில் கூறுகையில் “ பிசிசிஐ, இப்போதே ஜெய்ஸ்வாலை அணிக்குள் கொண்டு வாருங்கள்” என தெரிவித்தார்.

விராட் கோலி தனது ட்விட்டரில் “ நான் சமீபத்தில் பார்த்துவியந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலின் ஆட்டமும் ஒன்று. ஜெய்ஸ்வால் மிகப்பெரிய திறமைசாலி” எனப் பாராட்டியுள்ளார்.

தனது ஆகச்சிறந்த ஆட்டத்தின் மூலம் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கதவுகளை தட்டவில்லை, தகர்த்திருக்கிறார் என்றுதான் கூற முடியும். வரும் அக்டோபரில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் ஜெய்ஸ்வாலை இந்திய அணிக்குள் கொண்டுவர பல முன்னணி வீரர்களும் வலியுறுத்தியுள்ளதால், அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

பேட்ஸ்மேன்களின் தோல்வி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இந்த ஆட்டம் வாழ்வா-சாவா என்ற ரீதியில்தான் இருந்தது. ஜேஸன் ராய் அதிரடியாகத் தொடங்கினாலும், நீடிக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் டிரன்ட் போல்ட்டை சேர்த்திருந்தது.

இதற்கு பலன் கிடைக்கும் வகையில் போல்ட் வீசிய 3 ஓவரில் ஜேஸன் ராய்(10) ப்ளிக் ஷாட் அடிக்க முயன்று ஹெட்மெயரால் பவுண்டரியில் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். குர்பாஸ் 18 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் வெங்கடேஷ்(57) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரிடமும் ஃபயர் காணப்படவில்லை. வெங்கடேஷ் தொடக்கத்தில் மந்தமாக ஆடி, அஸ்வின், சாஹல், ஜோ ரூட் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறினார். நீண்டநேரத்துக்குப் பின்னர் தனது வழக்கமான அதிரடிக்கு மாறி, ஸ்ட்ரைக்ரேட்டை வெங்கடேஷ் உயர்த்தினார். அஸ்வின், சாஹல் ஓவரில் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சாஹல் வீசிய 17-வது ஓவரில் வெங்கடேஷ் 57ரன்கள் சேர்த்து போல்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கலான ஆந்த்ரே ரஸல்(10) ருங்கு சிங்(16), தாக்கூர்(1) ஆகியோரும் நீண்டநேரம் களத்தில் நிற்கவில்லை.

ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் மிகுந்த கட்டுக் கோப்பாக இருந்தது, பீல்டிங் அதைவிடச் சிறப்பாக இருந்ததால் பல பவுண்டரிகள் தடுக்கப்பட்டன. கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஷாட்களை அடிப்பதற்கான லூஸ்பால்கள் வீசாமல் மிகுந்த துல்லியமாக பந்துவீசினர்.

RR Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

கொல்கத்தா அணி செய்த தவறுகள்

ஈடன் கார்டன் மைதானம் ஹை-ஸ்கோர் செய்யும் ஆடுகளமாகும். இந்த ஆடுகளத்தில் இதுபோன்ற குறைவான ஸ்கோரை வைத்து டிபெண்ட் செய்ய நினைப்பது சாத்தியமில்லாதது. அதிலும் ப்ளேஆஃப் சுற்று நெருங்கிவரும் நிலையில் ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா சாவா என்றரீதியில் விளையாடும்போது, இதுபோன்ற குறைந்த ஸ்கோர் வெற்றிக்கு ஒருபோதும் உதவாது.

கேப்டன் ராணா தொழில்முறை சுழற்பந்துவீச்சாளர் கிடையாது. ஜெய்ஸ்வால், பட்லர் ஆகிய இரு ஆபத்தான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு முதல் ஓவரை ராணா வீசியதை என்னவென்று சொல்வது. அந்த தவறுக்கு ஏற்ற தண்டனையையும் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அவருக்கு அளித்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து கொல்கத்தா வீரர்களால் கடைசிவரை மீள முடியவில்லை. கொல்கத்தா அணியின் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் எனஅனைத்தும் நேற்று ராஜஸ்தான் அணிக்கு சவால்விடுக்கும் வகையில் அமையவில்லை. ரஸல், ரிங்கு சிங், ஜேஸன் ராய், குர்பாஸ் ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றியது பெரிய ஸ்கோர் வரவிடாமல் தடுத்துவிட்டது.

ஜெய்ஸ்வால் நாளாகிவிட்டது

கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கூறுகையில் “ ஜெய்ஸ்வால் இன்னிங்ஸ் பாராட்டுக்குரியது. 180 ரன்கள் கூட வெற்றிக்கான ரன் இல்லை. நாங்கள் பல தவறுகளைச் செய்தோம், அதனால்தான் தோல்வியடைந்து புள்ளிகளை இழந்தோம். முதல் ஓவரை நான் வீசினால் விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால், இது ஜெய்ஸ்வால் நாளாக மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: