கொள்ளை போன 1,700 சவரன் தங்கம், 12 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி விவசாயிகள்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர் கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 1,700 சவரன் நகைகள் தற்போதுவரை மீட்கப்படவில்லை. விவசாய கடன் பெறுவதற்காக நகைகளை அடமானம் வைத்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் துயரத்திலும், கடனிலும் உள்ளனர்.

திருநாவலூர் கிராமத்தில் நெல் பயிரிடும் பல விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2010ல் தங்களது நகைகளை வைத்து கடன் பெற்றனர்.

விளைச்சல் முடிந்ததும் நகையை மீட்கும் எண்ணத்தில் இருந்த விவசாயிகளுக்கு விளைச்சல் தேதி நெருங்கிய நேரத்தில், திடீரென கூட்டுறவுச் சங்கத்தின் நகைகள் களவு போனதாக தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவல்துறையில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து நகைத்திருட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, கடன் சங்கத்தில் பொறுப்பில் இருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2010ல் களவு போன சமயத்தில் அந்த நகைகளின் மதிப்பு ரூ.1.64 கோடியாக இருந்தது. இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. இதனால் 12 ஆண்டுகளாக தங்களது நகைகளை திரும்பப்பெற விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

நகைகளை இழந்த விவசாயிகளுக்கு அவர்களின் நகை மதிப்புக்கு இணையாக இழப்பீடு தருவதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் 2019ல் உறுதியளித்திருந்தனர். தற்போதுவரை எந்த இழப்பீடும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

நகைக்கடன் பெற்ற 493 விவசாயிகளில் ஒருவர் புஷ்பவல்லி(45). அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். இரண்டு சவரன் நெக்லெஸ் நகையை 2010ல் கூட்டுறவுச் சங்கத்தில் அடமானம் வைத்திருந்தார். ''நகையை மீட்கப் பணம் தயார் செய்துவிட்டேன்.

ஆனால் திடீரென எல்லோருடைய நகைகளும் திருடு போய்விட்டது என்று சொல்லிவிட்டார்கள். என் முதல் மகளுக்காக நான் சேர்ந்த நெக்லெஸ் நகை அது. பல சிரமங்களுக்கு மத்தியில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். குறைந்தபட்சம் மூன்றாவது மகளின் திருமணத்திற்காவது அந்த நகை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இதுவரை கிடைக்கவில்லை. என் இளையமகளுக்கு நகை இல்லாமல்தான் திருமணம் செய்துவைத்தேன்,''என வருத்தத்துடன் சொல்கிறார் புஷ்பவல்லி.

கள்ளக்குறிச்சி
படக்குறிப்பு, புஷ்பவல்லி

நகையின் மதிப்பு கடந்த 12ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளதால், இழந்த நகைக்கான இழப்பீட்டுத் தொகை கிடைத்தால்கூட, அது தனக்கு பெரிய உதவியாக இருக்கும் என்கிறார் புஷ்பவல்லி.

மற்றொரு விவசாயி பாலமுருகன்(48) நான்கு சவரன் நகையை இழந்துள்ளார். 2019ல் நகைக்கான இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததால் நம்பிக்கை தனக்கு இருந்தது என்றும் தற்போது முற்றிலும் நம்பிக்கை குலைந்துவிட்டது என்கிறார்.

விவசாயிகள் கள்ளக்குறிச்சி
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

''விவசாயிகளான எங்களுக்கு நகைக்கடன் என்பதுதான் வங்கியில் கடன் பெறுவதற்கான ஒரே வழி. நாங்கள் மாத சம்பளம் வாங்குபவர்களைப் போல கடன் பெறமுடியாது என்பதால்தான் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றோம். சங்கத்தில் பொறுப்பிலிருந்தவர்கள் மூலமாக நகை களவாடப்பட்டது என்று தெரிந்தபின்னர், அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றிவிட்டார்கள்.

ஆனால் அதனை ஏலம் விடுவதைத் தடுப்பதற்காகப் பலவிதமான காரணங்களைச் சொல்லி வழக்கு 10ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவருகிறார்கள். போதுமான சான்றுகள் இருந்தாலும், எங்களுக்கு இழப்பீடு தருவதாக உறுதி கொடுத்திருந்தாலும், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை,'என்கிறார் பாலமுருகன்.

திருநாவலூர் கிராமத்தில் உள்ள பல விவசாயிகளின் நிலையை வகையில் புஷ்பவல்லி மற்றும் ஆகியோர் எதிரொலிக்கின்றனர். 493 விவசாயிகளுக்கு நகை திருப்பியளிக்கப்படவேண்டும் என்று கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருநாவலூர் ஒன்றிய செயலாளரான ஏழுமலை தொடர் போராட்டங்களை நடத்தியவர்.

பிபிசி தமிழிடம் பேசிய ஏழுமலை, 2010ல் இருந்து 2023வரை பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரிடம் மனு அளித்துள்ளதாகக் கூறுகிறார். ''விவசாயிகளுக்குக் கடன் தருவதைப் பற்றிப் பல செய்திகள் வெளியாகின்றன. ஆனால் எங்களை போன்ற நகைகளை இழந்து பல காலமாக நீதிக்காக போராடும் விவசாயிகளுக்கு எந்த கவனமும் கிடைப்பதில்லை. 100க்கும் மேற்பட்ட மனுக்களை இதுவரை கொடுத்திருக்கிறோம். நகைகள் எங்களுக்குத் திரும்ப வரப்போவதில்லை என்பதால், அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு,''என்கிறார் ஏழுமலை.

கள்ளக்குறிச்சி விவசாயிகள்

12 ஆண்டுகளாக நகைகளை இழந்து விவசாயிகள் தவிப்பது குறித்தும், நகைத்திருட்டு விவகாரத்தில் முடிவுகள் எட்டப்படுமா என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

''துறை ரீதியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். கூட்டுறவுச் சங்கம் அமைப்பதற்கு பல விதிகளையும், அதில் இழப்பு ஏற்பட்டால் அதற்கு என்ன செய்யவேண்டும் என பலவிதிகளையும் கொண்டுதான் இந்த சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் 4,000க்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குகின்றன.

சுமார் 25 சதவீத சங்கங்கள் இழப்பில்தான் செயல்படுகின்றன. அதனால் இழப்பில் செயல்படும் சங்கங்களுக்கு இழப்பீடு தருவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆலோசிக்கவேண்டும். ஆனால் இந்த நகைத்திருட்டு விவகாரத்தில், வழக்கு நடந்துவருவதால், வழக்கில் தொடர்புள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புள்ள நான்கு நபர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு முடிவுக்கு வந்தால்தான் இதில் உறுதியான முடிவை எடுக்கமுடியும்,''என்கிறார் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: