நகரில் பாதி பேருக்கு வட்டிக்கு பணம் கொடுத்த செல்வந்தர் நோயில் வீழ்ந்ததும் என்ன செய்தார்?

புலாகி ஷா, லாகூர்

பட மூலாதாரம், Asif Butt

படக்குறிப்பு, புலாகி ஷாவின் ஹவேலி லாகூரில் உள்ள கும்தி பஜாரில் அமைந்துள்ளது
    • எழுதியவர், வகார் முஸ்தஃபா
    • பதவி, செய்தியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1929-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் 'கும்தி பஜாரில்' (Gumti Bazaar) உள்ள இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தை டெல்லி கேட் பகுதியில் இருந்தும் அடைய முடியும் என்றாலும் ஆசிஃப் பட், 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளத்தின் பக்கத்திலிருந்து செல்ல முடிவு செய்தார்.

கட்டடத்தின் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை ஆசிஃப் படிக்கத் தொடங்கினார். 'பி... (B) அடுத்து சில எழுத்துகள் உடைந்துள்ளன, பின்னர் 'கே' (K) மற்றும்...'

என்னால் அந்தக் கட்டடத்துக்கு செல்ல முடியவில்லை, ஆனால் ஆசிஃப் பட்டிடமிருந்து இந்த எழுத்துகள் குறித்து போனில் கேட்டறிந்தபிறகு, நான் அந்த வார்த்தைகளை முடித்தேன், அவரும் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார். அது 'புலாகி மால் & சன் பேங்கர்ஸ், லாகூர்.'

அவரது உண்மையான பெயர் புலாகி மால். ஆனால் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி அவர் புலாகி ஷா என்று அழைக்கப்பட்டார்.

அதிகம் பேருக்கு கடன் வழங்கியவர்

புலாகி ஷா

பட மூலாதாரம், Waqar Mustafa

படக்குறிப்பு, முனீர் அஹ்மத் முனீர் எழுதிய புத்தகம்

லாகூரில் தனது காலத்தில் அதிகமானோருக்கு வட்டிக்கு கடன் வழங்கியவராக அவர் இருந்தார். தனது ஒரு வலைப்பதிவில், "புலாகி ஷாவின் பதிவேடுகளில் பெரிய நில உடைமையாளர்களின் கட்டைவிரல் ரேகைகள் அல்லது கையொப்பங்கள் இருந்தன. அவர் யாரையும் ஏமாற்றவில்லை. பெண்களுக்கு ஒரு தனி இடம் இருந்தது, அங்கு அவர் அவர்களை மரியாதையுடன் நடத்துவார். பின்னர் அவர்களின் தேவைகளைப் பற்றி கேட்பார். பெண்கள் அங்கு வந்து ஒரு திருமணம் அல்லது கொண்டாட்டம் இருப்பதாகச் சொல்வார்கள். யாராவது நகைகளை அடகு வைத்தால் (கடனுக்கு ஈடாக), லாலா கவலையில்லாமல் இருப்பார்" என்று திர்கா கூறுகிறார்.

அந்த நேரத்தில் பஞ்சாபின் பொருளாதார நிலையை விவரிக்கும் வரலாற்றாசிரியர் இஷ்தியாக் அகமது தனது 'தி பஞ்சாப் ப்ளடீட், பார்ட்டீஷன்ட் அண்ட் கிளான்ரெட்' என்ற புத்தகத்தில், "சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஏதோ ஒரு வகையில் கடன்பட்டிருந்தனர், ஆனால் முஸ்லிம்கள்தான் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர்." என குறிப்பிடுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, புலாகி ஷா இந்த பொதுவான மற்றும் வழக்கமான கடன் வழங்கும் முறைக்கு சிறந்த உதாரணமாகக் கருதப்பட்டார். அவரிடம் மிகப்பெரிய நில உரிமையாளர்கள் கூட கடனாளிகளாக இருந்தனர்.

முனீர் அஹ்மத் முனீர் எழுதிய 'மிட்டா ஹுவா லாகூர்' என்ற புத்தகத்தில், மோச்சி தர்வாசாவில் வசிக்கும் ஹபீஸ் மெராஜுதீன், "நீங்கள் ரூ.100 வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்வார். புலாகி ஷா பணத்தை வட்டிக்குக் கொடுத்தாலும் பணத்தை விட்டுக்கொடுப்பார்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெரும்பாலான முஸ்லிம் நில உரிமையாளர்கள் அல்லது கீழ் நடுத்தர வர்க்க மக்கள் லாகூரின் மிகப்பெரிய கடன் வழங்குநரான புலாகி ஷாவிடம் கடன் வாங்கினர் என்று டேனிஷ்வர் அப்துல்லா மாலிக் தனது 'புரானி மெஹ்ஃபிலேன் யாத் ஆ ரஹி ஹைன்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் கூட புலாகி ஷாவிடம் கடனாளிகளாக இருந்தனர்.

அப்துல்லா மாலிக் எழுதுகையில், "என் தாத்தா கூட புலாகி ஷாவின் கட்டடத்தைக் கண்டு பயந்தார். புலாகி ஷா குறித்த பயம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. ஒரு நாள் நான் கும்தி பஜாரை என் தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டு கடந்து சென்றேன். என் கண்கள் கீழே உள்ள சாலையில் இருந்தன, திடீரென்று என் தாத்தா நின்று, "மகனே, புலாகி ஷாவுக்கு வணக்கம் செலுத்து" என்றார்.

"புலாகி ஷாவின் பெயரைக் கேட்டதும் நான் பயந்துவிட்டேன். நான் அவரைப் பார்த்தேன், ஆனால் பயமும் திகிலும் அதிகமாக இருந்ததால் நின்றுகொண்டே சிறுநீர் கழித்தேன்."

பெரிய பிரபுக்களின் நிலங்கள் புலாகி ஷாவிடம் அடமானம் வைக்கப்பட்டதாக ஹபீஸ் மெராஜுதீன் கூறினார்.

'மிட்டா ஹுவா லாகூர்' என்ற புத்தகத்தில், அரசியல்வாதியும் வழக்கறிஞருமான சையத் அகமது சயீத் கர்மானியை மேற்கோள் காட்டி, மியான் மும்தாஜ் தௌலதானாவின் தந்தை கான் பகதூர் அகமது யார் தௌலதானவும் புலாகி ஷாவின் கடனாளிகளில் ஒருவர் என்று எழுதப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு வெளியான தி பாகிஸ்தான் ரிவ்யூ என்ற ஆங்கில இதழில், எழுத்தாளர் ஒருவர் 1920ளின் நடுப்பகுதியில், "எனது தாத்தா, பாரசீகக் கவிஞரும், அல்லாமா முகமது இக்பாலின் நண்பருமான ஹாஜி அகமது பக்ஷ், லாகூரில் உள்ள தனது நிலத்தை விற்க முடிவு செய்தார். அந்த நிலம் புலாகி ஷாவிடம் ரூ.20,000க்கு அடமானம் வைக்கப்பட்டது." என்று கூறியுள்ளார்.

"எனது பெரியவர்களின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட அல்லாமா இக்பால், எனது தாத்தா நிலத்தை விற்பதை தடுக்க முயன்றார்" என்று அவர் எழுதினார்.

"எப்படியாவது நிலத்தைக் காப்பாற்றுங்கள் என்றார். உங்கள் நகைகளையோ அல்லது உங்கள் வீடுகளில் சிலவற்றையோ விற்று புலாகியின் கடனை அடைப்பது நல்லது. காலப்போக்கில் உங்கள் மகன்கள் குடும்பத்தின் நிலையை மாற்ற முடியும். என்று அவர் கூறினார்"

"ஆனால் துரதிருஷ்டவசமாக என் தாத்தா அவரது ஆலோசனையைப் பின்பற்றவில்லை."

2013ஆம் ஆண்டு தனது 104 வயதில் காலமான புகைப்பட பத்திரிகையாளர் எஃப் இ சௌத்ரி, 'அந்த லாகூர் இப்போது எங்கே?' என்ற தலைப்பில் பத்திரிகையாளர் முனீர் அகமது முனீருடனான நேர்காணலில், லாகூரில் உள்ள முஸ்லிம்களில் பாதி பேர் புலாகி ஷாவுக்கு கடன்பட்டிருப்பதாகக் கூறினார்.

புலாகி ஷாவின் குழந்தைகள் புனித அந்தோணி பள்ளியில் படித்ததாக எஃப் இ சௌத்ரி தனது நேர்காணலில் கூறினார்.

இருப்பினும், புலாகி ஷாவும் ஒரு முக்தார் தான் என்று மெராஜுதீன் கூறுகிறார். பீட்டர் ஓபோர்ன் தனது 'வுண்டட் டைகர், எ ஹிஸ்ட்ரி ஆஃப் கிரிக்கெட் இன் பாகிஸ்தான்' என்ற புத்தகத்தில் கிரசண்ட் கிரிக்கெட் கிளப்பின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் புலாகி ஷாவும் ஒருவர் என்று எழுதுகிறார்.

"லாகூரில் உள்ள மோச்சி தர்வாசாவில் இந்த கிளப் உருவாக்கப்பட்டது. லாலா அமர்நாத் அதன் மிகவும் பிரபலமான வீரர்களில் ஒருவர்."

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு முறை புலாகி ஷா நோய்வாய்ப்பட்ட போது, ​​அவரிடம் கடன் பெற்றவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக எஃப் இ சௌத்ரி கூறுகிறார்.

"ஷா ஜி எப்படி இருக்கிறார்?"

"அவர், 'நான் எப்போது சுவாசிப்பதை நிறுத்துவேன் என்று எனக்குத் தெரியவில்லை' என்று பதிலளிப்பார்."

"ஹே மணிம், இங்கே வா, சௌத்ரி சஹாப்கிட்ட எவ்வளவு பணம் (கடன்) இருக்கிறது என சொல்?"

"அவர் ஆவணங்களைத் திறந்து பார்த்து, அந்த வருடம் ரூ. 200 வாங்கியதாகச் சொல்வார்."

"ஏய், அதை புறந்தள்ளு, அவன் என்னைப் பற்றிக் கேட்க வந்திருக்கிறான்."

"இரண்டாவது கடனாளி வந்து கேட்டார்: ஏய், அவனிடம் (கடன்) எவ்வளவு பணம் இருக்கிறது?"

"ஆமாம், இரண்டாயிரம் இருக்கிறது."

"அதை புறந்தள்ளுங்கள். நான் நிறைய வட்டி வசூலித்து விட்டேன்"

உடல்நிலை குறித்து விசாரிக்கும் சாக்கில் கடன் பெற்ற பலரும் விரைவில் அவரிடம் வரத் தொடங்கினர் என்று சௌத்ரி கூறுகிறார். லட்சக்கணக்கான ரூபாயை கடன் பெற்றிருந்தவர்களும் வந்தனர்.

"ஷா ஜி, நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்."

"ஆமாம் நண்பரே, அது கடவுளின் விருப்பம்."

"பதினைந்து இருபது நிமிடங்கள் ஆயிற்று, அரை மணி நேரம் ஆனது, ஆனால் அவர் என் கடனை தள்ளுபடி செய்யவில்லை."

"அந்த நாட்களில் புலாகி ஷா சிறிய தொகையை கடனாக பெற்றவர்களின் கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் பெரும் தொகையை கடனாக பெற்றவர்களிடம் அவ்வாறு செய்யவில்லை என்பது பிரபலமான ஒன்று."

நீதிமன்றத்தில் பண பரிவர்த்தனை தகராறுகள்

புலாகி ஷா

பட மூலாதாரம், Waqar Mustafa

புலாகி ஷா சில கடன் பரிவர்த்தனை தகராறுகளை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் சென்றார். அவரிடமிருந்து கடன் வாங்கியது முஸ்லிம்கள் மட்டுமல்ல என்பதை இந்த வழக்குகள் காட்டுகின்றன.

1901 அக்டோபர் மாத 'சிவில் தீர்ப்புகள்' என்ற ஆவணத்தில், வழக்கு எண் 96 பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில், புலாகி ஷா ஐரோப்பிய ரயில்வே அதிகாரியான டி.ஜி. அகெர்ஸுக்கு மாதத்துக்கு மூன்று சதவிகித வட்டி விகிதத்தில் 1,500 ரூபாய் கடனாக வழங்கியதாகத் தெரிகிறது.

அகெர்ஸ் சிறிது வட்டியை செலுத்தினார். ஆனால் முழு தொகையை சரியான நேரத்தில் அவரால் செலுத்த முடியவில்லை. இவ்வளவு அதிக வட்டி வசூலிப்பது சரியானதல்ல என்று கீழமை நீதிமன்றங்கள் கூறின.

ஆனால் இந்த வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி ஹாரிஸ், கடன் ஒப்பந்தத்தை அகெர்ஸே எழுதியிருப்பதாகவும், அவருக்கு அழுத்தமோ அல்லது மோசடியோ இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறினார்.

இவ்வாறாக, புலாகி ஷாவின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நீதிமன்றம் முழுத் தொகையையும், அதாவது ரூ.2065 செலுத்த உத்தரவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த விசாரணைகள் குறித்த ஆவணமான 'ஆல் இந்தியா ரிப்போர்ட்டர்', 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தலைமை நீதிபதி கென்சிங்டன் மற்றும் நீதிபதி ஷா தின் இருவரும் விசாரித்த ஒரு வழக்கு விவரத்தை கூறுகிறது.

கடன் விதிமுறைகளின்படி இரண்டு ஆண்டுகளாக வட்டியை கொடுக்காததால், தூனி சந்த் என்பவர் அடமானம் வைத்த சொத்தை புலாகி ஷா கையகப்படுத்த முயன்றார். உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

லாகூரின் மிகப்பெரிய கடன் வழங்குநராக புலாகி ஷா கருதப்பட்டார். பத்திரிகையாளர் மஜீத் ஷேக் ஒரு கட்டுரையில், "மிகவும் மரியாதைக்குரிய ஒரு பெரியவர் என்னிடம் கூறினார், ஒருமுறை புலாகி ஷா தனது மகன் துபி பஜாருக்கு (பஜார்-இ-ஹுஸ்ன்) அடிக்கடி வரத் தொடங்கியதை அறிந்தார். எனவே ஓரிரவு நேரத்தில் அவரும் அங்கு வந்து தனது மகனுக்கு முன் அமர்ந்தார்."

"அவரது மகன் நடனக் கலைஞர்களுக்காக எவ்வளவு செலவிட்டாலும், புலாகி ஷா அதை விட இரண்டு மடங்கு தொகையை வழங்குவார். இறுதியில் தந்தையும் மகனும் வெறுங்கையுடன் வீடு திரும்பினர்."

"இதற்குப் பிறகு, புலாகி ஷாவின் மகன், அங்கு (பஜாரில்) யாரும் தனக்காக கவலைப்படவில்லை, தனது செல்வத்துக்காகவே தன்னைச் சுற்றியுள்ளனர் என்பதை உணர்ந்தான். எனவே அவன் அங்கு செல்வதை நிறுத்தினான். இது துபி பஜாரில் உள்ள மக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது, அவர்களில் ஒரு குழு புலாகி ஷாவிடம் சென்று, அன்றிரவு விருந்தில் சூறையாடப்பட்ட அனைத்து பணத்தையும் அவரிடம் கொடுத்து, அவரது மகனை துபி பஜாருக்கு வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது. புலாகி ஷா பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்."

"(பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு) புலாகி ஷாவின் பேரன் லதோ ஷா அல்லது ராம் பிரகாஷ் தனது வகுப்புத் தோழராகவும் கல்லூரி கிரிக்கெட் அணியில் ஒரு சக வீரராகவும் இருந்தார் என்று என் தந்தை என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது. லதோவும் பின்னாளில் பத்திரிகையாளராக மாறிய மஜார் அலியும் மட்டுமே கல்லூரிக்கு காரில் வந்த இரண்டு மாணவர்கள் ஆவர். லதோ பட்டு ஆடைகளை மட்டுமே அணிந்தார், மஜார் அலி கான் காதி ஆடைகளை அணிந்தார்." மஜீத் ஷேக்.

'பாகிஸ்தான் தனிநாடாக உருவெடுக்கும் முன்பாக, மஸ்ஜித் இ ஷாஹதாவுக்கு முன்பு தற்போதுள்ள சாதிக் பிளாஸாவின் ஒரு மூலையில் டுபாக்கோயிஸ்ட் என்ற பெயரில் கடை ஒன்று இருந்தது' என்று ஆசாத் சலீம் ஷேக் தனது 'தண்டி சதக்: மால் ரோடு லாகூர் ஹிஸ்டாரிகல், கல்ச்சுரல், லிட்ரரி வியூ ஆஃப் மால் ரோடு லாகூர்'' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

"அந்த கடையின் உரிமையாளர் புலாகி ஷாவின் பேரன். கடையில் அனைத்து வகையான புகையிலைகளும் கிடைத்தன."

புலாகி ஷாவின் குடும்பம் லாகூரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது

புலாகி ஷா

பட மூலாதாரம், Waqar Mustafa

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, ​​புலாகி ஷாவின் குடும்பம் லாகூரிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கலவரத்தின் போது ​​கடன் வழங்கிய விவரம் அடங்கிய பதிவேட்டின் பக்கங்கள் லாகூரின் வடிகால்களில் கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.

இந்தியாவில் புலாகி ஷா தனது பதிவேடுகளைக் கிழித்து, 'நான் அனைவரையும் மன்னிக்கிறேன்' என்று கூறியதாக மஜீத் ஷேக் எழுதினார்.

ஆனால், 'தி பார்க் ஆஃப் எ பென்: எ மெமரி ஆஃப் ஆர்டிகல்ஸ் அண்ட் ஸ்பீச்சஸ்' என்ற தனது புத்தகத்தில், ஃபக்கீர் சையத் இஜாசுதீன், புலாகி ஷாவிடம் கடன் வாங்கிய கிட்டத்தட்ட அனைத்து நில உடைமையாளர்களும் நிலங்களை அடமானம் வைத்ததாக எழுதுகிறார்.

1947 ஆம் ஆண்டில் புலாகி ஷா தனது பதிவேடுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்தியா செல்ல வேண்டியிருந்தது.

சனா மெஹ்ரா இந்தியாவின் டேராடூனில் வசிக்கிறார். எங்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை, ஆனால் அவர் சமூக ஊடகங்களில் புலாகி ஷா தனது கொள்ளு தாத்தா என்று கூறுகிறார்.

"புலாகி ஷாவின் கடைசி வாரிசு (என் பாட்டி, திருமதி. விஜய் லட்சுமி மஹாரா) கொரோனா காரணமாக காலமானார். திருமணத்துக்கு முன்பு அவரது பெயர் ரமா குமாரி. அவர் எப்போதும் கும்தி பஜார், விக்டோரியா பள்ளி/நன்ஹால் ஹவேலி மற்றும் பிற நினைவுகளைப் பற்றிப் பேசுவார், தனது வாழ்க்கையின் கடைசி நாள் வரையிலும் கூட லாகூருக்குச் செல்ல விரும்பினார், ஆனால் துரதிருஷ்டவசமாக செல்ல முடியவில்லை."

அவர் 1929 இல் லாகூரில் பிறந்தார். கும்தி பஜாரில் நான்கு மாடி கட்டடத்தின் கட்டுமானத்தை புலாகி ஷா முடித்த அதே ஆண்டு இது.

'லாகூர் அவார்கி' என்ற தனது புத்தகத்தில், முஸ்தாசிர் ஹுசைன் டார்ட் இந்தக் கட்டடத்தைப் பற்றி எழுதுகையில், 'புலாகி ஷாவின் வீடு மலர் குவளைகள், வளைந்த பால்கனிகள் மற்றும் இரும்பு வலைகளால் அலங்காரமாக இருந்தது. அதன் பால்கனிகளைத் தாங்கும் தூண்கள் அழகானவை.'

சில நாட்களுக்கு முன்பு ஆசிஃப் பட் இந்தக் கட்டடத்தைப் பார்த்த போது, ​​இப்போது இங்கே காலணிகள் தயாரிக்கப்படுகின்றன என்று என்னிடம் கூறினார். கீழே நான்கு கடைகள் உள்ளன, அவை காலணிகள் போன்ற தோல் தொடர்பான பொருட்களை விற்கின்றன. ஒரு பெயிண்ட் மற்றும் ரசாயனக் கடை உள்ளது.

இந்த பாழடைந்த கட்டடம் அமைந்துள்ள லாகூரின் கும்தி பஜாரில் உள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு, நகரில் பாதி பேர் கடன்பட்டிருந்த புலாகி ஷாவைப் பற்றி இப்போது தெரியாது என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு