மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்கள் - தூத்துக்குடி டிரோன் காட்சி
தென் தமிழகத்தை கனமழை புரட்டிப் போட்டிருக்கிறது. தூத்துக்குடி வெள்ளக்காடாக காட்சியளிப்பதை இந்த ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன.
தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில், தூத்துக்குடியில் இயல்பைவிட 68% அதிக மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



