You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயநாடு நிலச்சரிவு: கேரள அரசு முன்னெச்சரிக்கையை புறந்தள்ளியதா? அமித்ஷா குற்றச்சாட்டு
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டாம் நாளான இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 191 பேரை காணவில்லை எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
“மெப்பாடியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் எத்தனை பேர் பணியாற்றினர் என்பது தெரியவில்லை. பிற மாநிலத்தவரும் அங்கு வேலை செய்து வந்தனர். இந்த நிலச்சரிவில் சுற்றுலாப்பயணிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என வயநாட்டின் குழந்தைகள் நல கமிட்டியைச் சேர்ந்த பிபின் செம்பத்தகரா பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
600 பெரியவர்களுடன் சேர்ந்து சுமார் 150 குழந்தைகள் மேப்பாடியில் உள்ள நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிபின் செம்பத்தகரா தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட குழு கூடியது. கூட்டத்திற்கு பிறகு பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிப்புகளை மதிப்பாய்வு செய்ததாக தெரிவித்தார்.
வயநாட்டில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது யாரும் எதிர்பாராத ஒரு துயரமான சம்பவம். இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 79 பேர் ஆண்கள். 64 பேர் பெண்கள். மேலும் 191 பேரை காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று கூடுதலாக ராணுவத்தை சேர்ந்த 132 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மீட்புப் பணிகளில் இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
முன்னதாக மாநிலங்களவையில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூலை 23ஆம் தேதியன்றே வயநாட்டில் கனமழை காரணமாக தேசிய பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கேரள அரசிற்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகவும் அன்றைய தினமே தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மாநிலத்திற்கு விரைந்தனர் என்றும் உள்துறை அமிஷ் ஷா தெரிவித்துள்ளார்.
கேரள அரசு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என்றும், தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் வந்த பிறகும் கூட கேரள அரசு ஆபத்தை உணரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
கேரள மாநிலத்துடனும் பாதிக்கப்பட்ட மக்களுடனும் நரேந்திர மோதி அரசு ஒரு சுவரைப் போல துணை நிற்கிறது என தெரிவித்த அவர், மத்திய அரசு முடிந்த அளவில் அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளை விமர்சித்த அமித் ஷா, ஒடிஷா, குஜராத் போன்ற மாநிலங்கள் மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையைப் பயன்படுத்தி புயல் போன்ற பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்பை குறைத்துள்ளன என்றும் தெரிவித்தார்
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அவரின் சகோதரி பிரியங்கா வயநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டு கொண்டதாகவும் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
வயநாட்டில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் மார்ஷல் ஏ.பி. சிங், “மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் நீண்ட நேரத்திற்கு ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த முடியவில்லை. இன்று தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)