You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் விபத்து: சிக்கிய 20 இந்திய மாலுமிகளும் இன்னும் வெளியேற முடியாதது ஏன்?
அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது டாலி என்ற கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது.
ஆனால் விபத்தில் சிக்கி நதியில் நின்றுகொண்டிருக்கும் அக்கப்பலில் இருக்கும் சுமார் 20 இந்திய மாலுமிகள் இன்னும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் எப்போது கப்பலை விட்டு வெளியேற முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
டாலி கப்பல் விபத்துக்கு உள்ளானபோது அதில் மொத்தம் 21 பணியாளர்கள் இருந்தனர். அக்கப்பல் 27 நாள் பயணமாக இலங்கை செல்லவிருந்தது. ஆனால் கிளம்பி சில நிமிடங்களிலேயே விபத்து நடந்தது.
அதில் இருந்த 20 பேர் இந்திய குடிமக்கள் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. அதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று அமெரிக்கக் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்துத் தொழிலில் 3,15,000 இந்தியர்கள் வேலை செய்வதாக இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்த கடல்சார் தொழிலில் சுமார் 20% ஆகும். இந்தத் துறையில் பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த மூத்த மாலுமியும், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச கடற்படை நலன் மற்றும் உதவி வலையமைப்பின் சர்வதேச செயல்பாட்டு மேலாளருமான சிராக் பாஹ்ரி, டாலி கப்பலில் உள்ள பணியாளர்கள் அனைவரும் நாடு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று கூறினார்.
இப்போதைக்கு, கப்பலைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை வெளியேற்றும் திட்டம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் நகர்த்தப்படும் வரை அவர்கள் அதை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை, என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அது ஒரு சிக்கலான நீண்ட பணி.
கடந்த வெள்ளியன்று (மார்ச் 29), பால்டிமோரின் கடலோர காவல்படை அட்மிரல் ஷானன் கில்ரேத், பால்டிமோர் துறைமுகத்தையும் கப்பல் தடத்தையும் மீண்டும் திறப்பதற்குத்தான் அவர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், அதன்பிறகே கப்பலை நகர்த்துவதுபற்றி சிந்திக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சாதாரண சூழ்நிலைகளில் கூட, அமெரிக்கத் துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் இருந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் தரை இறங்குவதற்கு மிக அதிகமான ஆவணங்கள் தேவைப்படும்.
விசா மட்டுமல்ல, கப்பலில் இருந்து பணியாளர்கள் இறங்க அவர்கள் கடற்கரை பாஸ்களை வைத்திருக்க வேண்டும். கப்பலில் இருந்து டெர்மினல் வாயில் வரை அவர்களை அழைத்துச் செல்ல எஸ்கார்ட் ஆட்கள் தேவை. ஆனால், அப்பகுதியில் உள்ள கடற்படை தன்னார்வலர்கள் அவர்களை அழைத்துச் செல்லலாம்.
டாலி கப்பலின் பணியாளர்களிடம் தரை இறங்குவதற்குத் தேவையான ஆவணங்கள் உள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கப்பல் விபத்தின் விளைவுகளை மேற்பார்வையிடும் அதிகாரிகள் குழு ‘விசாரணை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை என்றும், அது முடியும் வரை, பணியாளர்கள் கப்பலில்தான் இருக்க வேண்டும் என்றும்’ பிபிசியிடம் கூறியது.
கப்பலில் இருக்கும் பணியாளர்களின் தற்போதைய நிலைமை என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)